Published : 06 Nov 2022 09:15 AM
Last Updated : 06 Nov 2022 09:15 AM

விதிமீறல் கட்டிடங்கள் மீது ஆண்டுக்கணக்கில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? - சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: விதிமீறல் கட்டிடங்கள் மீது ஆண்டுக்கணக்கில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகத்துக்கு, உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ளதாக, அங்கு குடியிருந்து வரும் வீட்டின் உரிமையாளர் விஜயபாஸ்கர் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 5 ஆயிரம் சதுரஅடி கட்டுமானம் மேற்கொள்ள திட்ட அனுமதி பெற்றுவிட்டு, 12 ஆயிரம் சதுரஅடிக்கு கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, இந்த விதிமீறல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராகி, விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கைத் தொடர்ந்த விஜயபாஸ்கருக்குச் சொந்தமான தரைத்தளம் குடியிருப்புப் பயன்பாட்டுக்காக அல்லாமல், வணிக நோக்கில் பயன்படுத்தியுள்ளதாகக் கூறி, அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த சீலை அகற்றக் கோரிவிஜயபாஸ்கர் தாக்கல் செய்தமனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

ஆணையர் ஆஜராக வேண்டும்: அப்போது, விதிகளை மீறிஅந்தக் கட்டிடம் 1997-ல் கட்டப்பட்டுள்ள நிலையில், ஆண்டுக்கணக்கில் நடவடிக்கை எடுக்காமல், கும்பகர்ணனைப்போல தூங்கியது ஏன் என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மாநகராட்சி ஆணையர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கக் காரணமான மனுதாரருக்கு அதிகாரிகள் மிரட்டல் விடுத்த ஆடியோ பதிவு குறித்தும் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

கட்டிடத்துக்கு சீல் வைத்த மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகள் யார், யார் என்பது குறித்த விவரங்களை வரும் 7ம் தேதி தாக்கல் செய்யுமாறு மாநகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், அந்தக் குடியிருப்பில் விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ள மூன்றாவது தளம் தவிர்த்து, மற்ற இரு தளங்கள் மற்றும் தரைத் தளத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றுமாறும் உத்தரவிட்டுள்ளனர். மேலும், தரைத்தளத்தில் உள்ள விதிமீறல்களை சரி செய்யுமாறு மனுதாரருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x