Published : 05 Nov 2022 06:34 AM
Last Updated : 05 Nov 2022 06:34 AM

கோவை கார் வெடிப்பு சம்பவம் | உயிரிழந்த முபினின் செல்போனில் 100-க்கும் மேற்பட்ட ஐஎஸ் ஆதரவு வீடியோக்கள்: ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர் என போலீஸார் உறுதி

கோவை: கோவை கார் சிலிண்டர் வெடிப்புசம்பவத்தில் உயிரிழந்த முபினின் செல்போனில் 100-க்கும் மேற்பட்ட ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு வீடியோக்கள் இருந்தன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் அடிப்படையில் உயிரிழந்த முபின் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்ததை போலீஸார் உறுதிப்படுத்தினர்.

முபினின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ஐஎஸ் ஆதரவு நிலைப்பாடு கருத்துகள் தொடர்பான பொருட்கள் கைப்பற்றப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. முபினின் வீட்டில் 2 சிலேட்கள், 3 தாள்கள் கைப்பற்றப்பட்டிருந்தன. ஒரு சிலேட்டில் அரபு மொழியிலும், மற்றொன்றில் தமிழிலும் எழுதப்பட்டிருந்தது.

தமிழ்மொழியில் எழுதப்பட்டிருந்த சிலேட்டில், ‘அல்லாஹ்வின் இல்லத்தின் மீது கை வைத்தால்வேரறுப்போம்’ என எழுதப்பட்டிருந்தது. அதேபோல், ஒரு தாளில், குழந்தை - இளமை - முதுமை தலைப்பிடப்பட்டு, குழந்தை பலவீனம், இளமை பலம், முதுமை பலவீனம், ஜிஹாத் கடமை என குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும், அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட முபினின் செல்போனில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு கருத்துகள், தாக்குதல்கள் தொடர்பான நூற்றுக்கும் மேற்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் இருந்ததை போலீஸார் கண்டறிந்து அதிர்ச்சியடைந்தனர். பறிமுதல் செய்யப்பட்டிருந்த பொருட்கள், அவரது செயல்பாடுகள் ஆகியவற்றை வைத்து உயிரிழந்த முபின், ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் தீவிரமாக இருந்ததை போலீஸார் உறுதி செய்தனர்.

புதிய தகவல்கள்: அதேபோல், கோயில் அருகே இருந்த வேகத்தடை மீது ஏறிய போது காரில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததால் கார் வெடிப்பு சம்பவம் நடந்ததாக அந்த சமயத்தில் போலீஸார் தரப்பில் கூறப்பட்டது. தற்போது இந்த வழக்கு தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகிஉள்ளன.

கார் வெடிப்புச் சம்பவம் சிலிண்டர்களால் ஏற்படவில்லை எனவும், காரில் இருந்த 3 டிரம்களில் வெடிமருந்து நிரப்பப்பட்டு, அதனுடன் இணைக்கப்பட்ட திரியை பற்றவைத்து வெடிக்க வைத்திருக்கலாம் எனவும் சம்பவ இடத்தில் விசாரித்தபோலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், காரில் கொண்டு வரப்பட்ட சிலிண்டர்கள் இரண்டுமே எரிவாயு இல்லாமல் காலியாக கொண்டு வரப்பட்டதையும், அதில் ஒரு சிலிண்டரின் அடிப்பகுதியில் உள்ள இரும்புத் தகடு முன்னரே வெட்டி எடுக்கப்பட்டு இருந்ததையும் போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

காவல் ஆணையர் விளக்கம்: ஆனால், இதுதொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர்வே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: கோவை கார் வெடிப்பு சம்பவம் தற்கொலை தாக்குதல் முறை கிடையாது. தற்கொலை தாக்குதல் என்றால் வீட்டில்உள்ள வெடிமருந்துகள் அனைத்தையும் முபின் எடுத்துச் சென்றிருக்கலாம். வீட்டில் மீதம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேசமயம், முபின் உயிரிழப்பதற்கு தயாராக இருந்துள்ளார். சிலிண்டர் வெடிப்பே விபத்துக்கு காரணம். முபின் பயன்படுத்திய ஒரு செல்போன் சம்பவ இடத்திலேயே நொறுங்கிவிட்டது. முபினின் மற்றொரு போன் கைப்பற்றப்பட்டது. முபின், அசாருதீன், அப்சர்கான் ஆகியோரது செல்போன்களில் ஏராளமான ஐஎஸ் ஆதரவு வீடியோக்கள் இருந்தன. இவ்வாறு அவர் கூறினார். முபின் உயிரிழப்பதற்கு தயாராக இருந்துள்ளார். சிலிண்டர் வெடிப்பே விபத்துக்கு காரணம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x