Last Updated : 04 Nov, 2016 12:04 PM

 

Published : 04 Nov 2016 12:04 PM
Last Updated : 04 Nov 2016 12:04 PM

சுற்றுச்சூழல் மேம்பட உதவும் சிலுவைச்சேரி கிராமம்: மரக்கன்றுகளை உற்பத்தி செய்யும் 50 குடும்பங்கள்

மரக்கன்றுகளை உற்பத்தி செய்து நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பும் ஒரு கிராமம், அரசு அங்கீகாரம் இல்லாததால் குறைந்த விலைக்கு இடைத்தரகர்களுக்கு விற்பனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதை மாற்ற, தமிழக அரசின் மரம் நடும் திட்டத்துக்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

உலகில் தற்போது பல்வேறு வடிவங்களில் சுற்றுச்சூழல் மாசடைந்து வருகின்றது. அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் உலகம் முழுவதும் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் இதன் பாதிப்பு அதிகம் என கூறப்படுகிறது. காடுகளை அழித்து, நவீன நகரங்கள் உருவாக்கம், தொழிற்சாலைகள் அதிகரிப்பு, மோட்டார் வாகனங்கள் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சுற்றுச்சூழல் அதிகளவில் மாசடைகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை இயற்கை வளங்கள் சுரண்டப்படுதல், காடுகளை அழித்தல், விவசாய நிலங்களை அழிந்து நகரங்கள் உருவாக்குதல், தொழிற்சாலை பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சுற்றுச்சூழல் வேகமாக மாசடைந்து வருகிறது. இவ்வாறு உலகமே மாசடைந்து மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில், மரம் வளர்ப்போம் மழை பெறுவோம், சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்ற அனுபவ சுவடுகளுடன் மரக்கன்றுகளை வளர்க்க உலகமே ஆர்வம் காட்டி வருகிறது.

தமிழகத்தில் தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் மரம் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு, மாவட்டந்தோறும் லட்சக்கணக்கான மரங்கள் நடப்பட்டு வருகிறது. இதில் அரியலூர் மாவட்டத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டம் சிமென்ட் ஆலைகள் மற்றும் சுண்ணாம்புச் சுரங்கங்கள் நிறைந்த மாவட்டமாக உள்ளது என்பதே அதற்கான காரணம். இதனால் பெருமளவு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன் நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதில் தமிழகத்திலேயே அரியலூர் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.

50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள்…

இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிலுவைச்சேரி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நர்சரி கார்டன்கள் அமைத்து மரக்கன்றுகளை உற்பத்தி செய்து வருகின்றனர். தேக்கு, சவுக்கு உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளும் மா, பலா, முந்திரி உள்ளிட்ட பழமரக்கன்றுகளும், அலங்காரச் செடிவகைகள், மலர்ச் செடிகள் என அனைத்து விதமான கன்றுகளும் வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இக்கிராமத்தில் உள்ள நர்சரி கார்டன்கள் மூலம் ஆண்டுக்கு 30 லட்சம் மரக்கன்றுகளுக்கும் மேல் உற்பத்தி செய்து, கேரளா, ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

தமிழகத்திலேயே அரியலூர் மாவட்டத்தில்தான் அதிகளவில் முந்திரி சாகுபடி நடைபெற்று வருகிறது. இதனால், முந்திரிக் கன்றுகளுக்கான தேவையும் அதிகளவில் உள்ளதால் முந்திரிக் கன்றுகள் உற்பத்தியிலும் சிலுவைச்சேரி முன்னிலை வகிக்கிறது. இதில், வீரிய ரக முந்திரிக் கன்றான விஆர்ஐ-3 அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

மேலும், வீரிய ரக முந்திரி மரக்கன்றுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய விருத்தாசலத்தில் உள்ள தேசிய முந்திரி ஆராய்ச்சி நிலையத்தில் தாய் முந்திரி மரக்கன்றுகளை வாங்கி வந்து வளர்த்து, பெரிய மரம் ஆன பிறகே அதிலிருந்து சிறுசிறு கிளைகள் எடுக்கப்பட்டு, ஏற்கெனவே முந்திரிக் கொட்டையிலிருந்து முளைத்துள்ள 2 மாத செடியுடன் தாய்மரத்திலிருந்து எடுத்து வந்த கிளைகளை இணைத்து ஒட்டுரகங்கள் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு உருவாக்கப்படும் முந்திரிக் மரக்கன்றுகளே வீரிய ஒட்டுரகமாக கருதப்படுகிறது.

அரசின் அனுமதியில்லை…

என்னதான் தரமான ரகமாக இருந்தாலும் அரசின் அனுமதியில்லை என்பதால், குறைந்த விலைக்கே பலரும் வாங்கிச் செல்வதாக மரக்கன்றுகளை வளர்ப்போர் கூறுகின்றனர். இதனால், தமிழக அரசின் மரம் நடும் திட்டம் உள்ளிட்ட அரசின் திட்டங்களுக்கு மரக்கன்றுகளை விநியோகம் செய்ய முடியாத நிலையும் உள்ளது.

சிலுவைச்சேரி கிராமத்தில், 32 விவசாயிகள் ஒன்றுசேர்ந்து மாநில தொழில் வணிகத் துறை கட்டுப்பாட்டின் கீழ் தோட்டக்கலை ஒட்டுமரக்கன்றுகள் மற்றும் நாற்றங்கால் உற்பத்தியாளர் சேவை தொழில் கூட்டுறவுச் சங்கம் சார்பில் நர்சரி கார்டன் அமைத்துள்ளனர். இதில், முந்திரி வீரிய ஒட்டுரகக் கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இதற்கு அரசின் அனுமதி கோரியபோது, நாற்றங்காலைப் பார்வையிட வந்த வேளாண் அதிகாரிகள், தாய் மரங்கள் தரமாக இல்லை எனக் கூறி அங்கீகாரம் வழங்கவில்லை. இதனால், முந்திரி ஆராய்ச்சி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் கன்றுகளுக்கு இணையாக உற்பத்தி செய்தும் அவற்றை நல்ல விலைக்கு விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

லாபமடையும் இடைத்தரகர்கள்…

இக்கன்றுகளை இடைத்தரகர்கள் குறைந்த விலைக்கு வாங்கிச் சென்று முந்திரி ஆராய்ச்சி நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கன்றுகள் எனக் கூறி அதிக விலைக்கு விற்பதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். இதனால் மரக்கன்றுகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு குறைந்த விலையே கிடைப்பதோடு, இத்தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரமும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

அரசு உதவியை எதிர்பார்த்து…

இத்தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், நர்சரி உற்பத்தியை அதிகரிக்கச் செய்யவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இலவச மின்சாரம், இடுபொருள் மானியம் உள்ளிட்ட வசதிகளையும் அரசு ஏற்படுத்தி தரவேண்டும். நீராதாரம் குறைந்து வரும் இக்காலகட்டத்தில் சொட்டுநீர், தெளிப்பு நீர் பாசன வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும்.

தோட்டக்கலைத் துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் அது குறித்த விழிப்புணர்வு விவசாயிகளுக்கு முழுமையாக கிடைப்பதில்லை. தமிழக அரசின் மானிய திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை விவசாயிகளுக்கு ஏற்படுத்த வேண்டும் என சிலுவைச்சேரி கிராம மக்கள் பலரும் கோரிக்கை விடுக்கின்றனர்.

( ஒட்டு சேர்க்கப்பட்டு நிழல் வலையில் வைக்கப்பட்டுள்ள முந்திரி மரக்கன்றுகள். (அடுத்த படம்) வெயிலில் வைக்கப்பட்டுள்ள ஒட்டுரக முந்திரி மரக்கன்றுகள்.)

ஆராய்ச்சி நிலையத்துக்கு இணையான ஒட்டுரக முந்திரி மரக்கன்றுகள்

மரக்கன்றுகளை உற்பத்தி செய்யும் விவசாயி முருகேசன் கூறியபோது, “எங்கள் ஊரில் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மரக்கன்று நர்சரி வைத்துள்ளனர். இங்கு பல வகையான மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் வீரியரக முந்திரிக் கன்றுகளை உற்பத்தி செய்ய 80 கிலோ எடைகொண்ட தரமான முந்திரிக் கொட்டைகளை 12 ஆயிரம் ரூபாய்க்கு வாங்குகிறோம். அதில், 55 கிலோ முந்திரிக் கொட்டைகளே முளைப்புத் திறன் கொண்டதாக உள்ளது. இதை பாலித்தீன் பைகளில் போட்டு முளைக்கவைத்து, குறிப்பட்ட உயரம் வளர்ந்த பிறகு ஒட்டு சேர்க்கப்படுகிறது.

ஒட்டு சேர்ப்பதற்கு விருத்தாசலத்தில் உள்ள முந்திரி ஆராய்ச்சி நிலையத்திலிருந்து வீரிய ஒட்டுரக முந்திரிக் கன்றுகளை வாங்கி வந்து வளர்த்து வருகிறோம். வளர்க்கப்பட்ட அந்த தாய் மரத்திலிருந்து சிறு சிறு கிளைகளை எடுத்தும், வனத் துறையின் நர்சரியில் வாங்கியும் ஒட்டு சேர்க்கப்படுகிறது. இவ்வாறு ஒட்டு சேர்த்த கன்றுகளில் 70 சதவீத கன்றுகளே தரமானதாக அமைகிறது. மற்ற தரமற்ற கன்றுகள் அழிக்கப்படுகின்றன.

விருத்தாசலம் முந்திரி ஆராய்ச்சி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் வீரிய ஒட்டுரக முந்திரிக் கன்றுகளுக்கு இணையாகவும், அதைவிட அதிக தரத்துடனும் முந்திரிக் கன்றுகளை நாங்கள் உற்பத்தி செய்கிறோம். ஆனால், அரசின் அங்கீகாரம் கிடைக்காததால் இடைத்தரகர்களிடம் விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

எனவே, வனத் துறைக்குத் தேவையான முந்திரிக் கன்றுகளை எங்களைப் போன்ற விவசாயிகள் நடத்தும் நர்சரி கார்டன்களில் அரசு வாங்கினால் அது எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

தோட்டக்கலைத் துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் அது குறித்த விழிப்புணர்வு விவசாயிகளுக்கு முழுமையாக கிடைப்பதில்லை. தமிழக அரசின் மானிய திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை விவசாயிகளுக்கு ஏற்படுத்த வேண்டும் என சிலுவைச்சேரி கிராம மக்கள் பலரும் கோரிக்கை விடுக்கின்றனர்.

இங்கு, உற்பத்தி செய்யப்படும் மரக்கன்றுகள் பல்வேறு வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்பட்டாலும் கூட தமிழகத்தில் குறிப்பாக அரியலூர் மாவட்டத்தில் இதன் விற்பனை குறைவாகவே உள்ளது. எனவே, தமிழக அரசின் மரக்கன்று நடும் திட்டத்தில் ஆண்டுக்கு லட்சக்கணக்கான மரக்கன்றுகள் வனத் துறை மூலம் நடப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இதற்கான மரக்கன்றுகள் வனத் துறைக்குச் சொந்தமான நர்சரி கார்டன் மற்றும் வெளிமாநிலங்களிருந்து வாங்கப்படுகின்றன.

இதற்கு மாற்றாக இவ்வாறு தனியார் மற்றும் கூட்டுறவு மூலம் உற்பத்தி செய்யப்படும் மரக்கன்றுகளை நேரடியாக கொள்முதல் செய்யவேண்டும். இதனால் இடைத்தரகர்கள் தலையீடு இல்லாமல் மரக்கன்றுக்கு உரிய விலை கிடைக்கும் எனவும் மரக்கன்று உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

நாளைய உலகத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், குடிநீர் தட்டுப்பாடு நீங்கவும் அடிப்படைத் தேவையான மரங்களை வளர்க்க, மரக்கன்றுகளை உற்பத்தி செய்யும் சிலுவைச்சேரி விவசாயிகளுக்கான அடிப்படைத் தேவைகளை அரசு செய்துகொடுத்தால், இதுபோன்ற பல நர்சரி கார்டன்கள் இன்னும் ஏராளமாக உருவாகும் என்பதே இப்பகுதி மக்கள் அனைவரின் எதிர்பார்ப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x