Last Updated : 21 Nov, 2016 03:14 PM

 

Published : 21 Nov 2016 03:14 PM
Last Updated : 21 Nov 2016 03:14 PM

அழிவின் விளிம்பில் கீரைகள்: பள்ளியில் தோட்டம் அமைத்து பராமரிக்கும் மாணவர்கள்

அழிவின் விளிம்பில் உள்ள கீரைச் செடிகளை கிராமத்து மாணவர்கள் பள்ளியில் தோட்டம் அமைத்து பராமரித்து வருகின்றனர்.

தேனி மாவட்டம், கோட்டூர், சீலையம்பட்டி, சிந்தலச்சேரி ஆகிய கிராமங்களில் 7 ஆண்டுகளுக்கு முன்பு 180 ஏக்கருக்கு மேல் அகத்தி, பொன்னாங்கண்ணி, அரைக்கீரை உள்ளிட்ட பல வகை கீரைகள் சாகுபடி செய்யப்பட்டு வந்தன. இப்பகுதியில் பறிக்கப் படும் கீரைகள், மாவட்டம் முழுவ தும் விற்பனை செய்யப்பட்டு வந் தது. ஆனால் கீரைகளின் மகத்து வம் பற்றி மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமலும், உணவு முறைகள் மாறி விட்டதாலும் கீரை சாப்பிடும் பழக்கம் குறைந்துவிட்டது. இதனால் விவசாயிகள் பலர் கீரை சாகுபடியை கைவிட்டனர்.

இதற்கிடையே, மாவட்டத்தில் போதிய மழை இல்லாததாலும், கீரை சாகுபடிக்கு தமிழக அரசு கொடுத்த வந்த மானியம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டதாலும், தற்போது கீரை சாகுபடியின் பரப்பளவு 12 ஏக்கராக சுருங்கி அழிவின் விளம்பில் உள்ளது. ஆனால், கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள், விடுமுறை நாட்களில் எந்த தோட்டத் தில் எந்த கீரை சாகுபடி செய்திருந்தாலும், அதனை விவசாயிகளிடம் இருந்து பெற்று வந்து, தாங்கள் படிக்கும் அரசு உதவி பெறும் நடு நிலைப் பள்ளி யில் நட்டு பராமரித்து வருகின் றனர். இதனால், பள்ளி வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என கண்களை கவரும் கீரைத் தோட்டமாக உள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பள்ளியின் தலைமை ஆசிரியர் பி. முருகு கூறுகையில், இப் பள்ளி கடந்த 1951-ம் ஆண்டு கட்டப்பட்டது. இதில் 37 மாணவ, மாணவியர் தற்போது படித்து வருகின்றனர். பள்ளியைச் சுற்றி முன்னாள் மாணவர்கள் ஆலமரம், வேம்பு மரங்களை வளர்த்திருந்தனர். ஆனால், திண்டுக்கல் - குமுளி சாலை விரிவாக்கத்துக்கு அந்த மரங்கள் வெட்டப்பட்டன. இதற்கிடையில், இப்பகுதி விவசாயிகள் பலர் கீரை சாகுபடியை கை விட்டுவிட்டு மாற்று விவசாயத்துக்கு மாறி விட்டனர். ஆனால், அவர்களின் குழந்தைகள் உடல் நலத்துக்கு நன்மை தரும் கீரை செடிகள் வளர்ப்பில் ஆர்வம் காட்ட தொடங்கினர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி வளாகத்தில் சிறிய இடத்தில் தோட்டம் அமைத்து கீரை வளர்க்க தொடங்கினர். மாணவர்களின் உற்சா கத்தை கண்டு நாங்களும் ஊக்கப் படுத்தியதால் தற்போது பள்ளி வளாகம் முழுவதும் பொன்னாங்கண்ணி, முருங்கை, அகத்தி, தண்டங்கீரை, அரைக் கீரை என பலவகை கீரைகளை தோட்டம் அமைத்து வளர்த்து வருகின்றனர். மேலும் வாழை, பப்பாளி, மாதுளை, நெல்லி, மா போன்ற பலன் தரும் மரங்களையும் வளர்த்து வருவதோடு, துளசி, புதினா, பச்சிலை என மூலிகைச் செடிகளும், கப்பை, சேனக்கிழங்கு என கிழங்கு வகைளையும் வளர்த்து வருகின்றனர். மழையில் லாத காலத்திலும் தினந்தோறும் பள்ளிக்கு வரும்போது, அருகில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து பாட்டிலில் தண்ணீர் கொண்டு வந்து கீரை தோட்டத்துக்கு ஊற்றுகின்றனர். சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றி காப்பாற்றி வருகின்றனர். படிப்பிலும் மாணவ, மாணவியர் படுசுட்டியாக இருக்கின்றனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x