Last Updated : 25 Nov, 2016 12:37 PM

 

Published : 25 Nov 2016 12:37 PM
Last Updated : 25 Nov 2016 12:37 PM

மாவோயிஸ்ட் ஊடுருவல் அட்டப்பாடி காடுகளில் சி.ஆர்.பி.எஃப். கமாண்டே வீரர்களின் ஜங்கிள் கேம்ப் பயிற்சி

அட்டப்பாடி காடுகளுக்குள் மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில் கேரள, தமிழக போலீஸார் மற்றும் வனத் துறையினர் ஈடுபட்டுள்ள நிலையில், அப்பகுதியில் ‘ஜங்கிள் கேம்ப்’ என்ற கடினமான பயிற்சியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சி.ஆர்.பி.எஃப்.) கமாண்டோ வீரர்கள் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள குருடம்பாளையத்தில் சி.ஆர்.பி.எஃப். பயிற்சிக் கல்லூரி உள்ளது. இங்கு, கமாண்டே படைகளுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படும்.

பெண் கமாண்டோக்கள்

அதன்படி, கடந்த ஒரு வருடமாக பல்வேறு பயிற்சிகள் பெற்ற 9 பெண் கமாண்டோக்கள் உட்பட 65 பேர் கொண்ட குழுவினர், தற்போது கூடுதல் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பசி, தூக்கம் மற்றும் ஆழ்மன அச்சம் போன்றவற்றை வெற்றிகொள்ளவும், மனதையும் உடலையும் உறுதியாக்கவும் இறுதிக்கட்ட கடினப் பயிற்சியை அவர்கள் மேற்கொண்டுள்னர்.

இதையொட்டி, நேற்று முன்தினம் அவர்கள் பல குழுக்களாக பிரிக்கப்பட்டனர். தமிழக-கேரள எல்லையில் உள்ள வனப் பகுதியான மேட்டுப்பாளையம் பாலமலை காட்டுக்குள் அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்.

இவர்கள் ஏறத்தாழ ஒரு வாரம் அடர்ந்த காட்டுக்குள்ளேயே தங்கியிருந்து, பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். இப்பயிற்சியை முடித்து திரும்பும் இவர்கள் டி.எஸ்.பி. தகுதி கொண்ட கமாண்டிங் அலுவலராக பணியில் அமர்த்தப்படுவர் என்கின்றனர் பயிற்சியளிக்கும் சி.ஆர்.பி.எஃப் உயரதிகாரிகள்.

தீவிரவாதிகள் தாக்குதல்

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “இந்த வீரர்கள் பணிக் காலத்தில் வட மாநிலங்களில் காட்டுக்குள் பதுங்கியுள்ள நக்சல் மற்றும் மாவோயிஸ்ட்கள் போன்ற தீவிரவாதிகளின் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவர்களைப் பிடிக்கவும், சுற்றி வளைக்கவும் இதுபோன்ற பயிற்சிகள் மிகவும் முக்கியம். இந்த ஆண்டிலிருந்தே இந்த கடினப் பயிற்சி, பெண் கமாண்டோக்களுக்கும் வழங்கப்படுகிறது.

‘ஜங்கிள் கேம்ப்’ என்ப்து மிகவும் கடினமான, இறுதிக்கட்ட பயிற்சி. மத்திய துணை ராணுவப் படையினரான சி.ஆர்.பி.எஃப். கமாண்டோ வீரர்களுக்கு இது மிகவும் அவசியம்.

முதலில், மூத்த அதிகாரிகளிடம் கொரில்லா முறை தாக்குதல்களை கற்றுக்கொள்வார்கள். தொடர்ந்து, தலா 4 பேர் கொண்ட சிறு சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, அடர்ந்த வனப் பகுதிக்குள் அனுப்பிவைக்கப்படுவார்கள். குறைந்தது ஒரு வாரம் வனத்தில் தங்கியிருக்க வேண்டும்.

காட்டு யானை, சிறுத்தை, விஷ பாம்பு, பூச்சிகள் உள்ளிட்டவை இருக்கும் அடர்ந்த காட்டுக்குள் செல்லும் இவர்களுக்கு, வழித்தட வரைபடமோ, வெளியுலக தொடர்புகொள்ள தொலைத்தொடர்பு சாதனங்களோ வழங்கப்படுவதில்லை.

பிஸ்கெட், 5 லிட்டர் தண்ணீர்

அவர்களுக்கு 5 லிட்டர் தண்ணீர் மற்றும் 300 கிராம் பிஸ்கட்டுகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. காட்டுக்குள் கிடைக்கும் இயற்கையான உணவுப் பொருட்களின் உதவியுடன் அவர்கள் வாழ வேண்டும். மேலும், ஓயாமல் இடம்பெயர்ந்தபடி இருக்க வேண்டும்.

நவீன இயந்திரத் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், கத்திகள் உள்ளிட்ட அயுதங்கள் வைத்துள்ள இவர்கள், இரவு நேரங்களில் மரங்கள் மீதோ, பாறை இடுக்குகளிலோ, குகைகளிலோ தங்கிருக்க வேண்டும்.

மாவோயிஸ்ட்கள் உள்ளிட்டோர் மறைந்திருந்து தாக்குதல் நடத்தினால், எதிர்த்தாக்குதல் நடத்தி எதிரிகளைச் சமாளிப்பதுடன், காயமின்றித் தப்ப வேண்டும். பின்னர், பாதையைக் கண்டறிந்து மீண்டும் பயிற்சிக் கல்லூரி முகாமுக்கு திரும்ப வேண்டும்” என்றனர்.

தற்போது, கேரள-தமிழக எல்லைப் பகுதியான அட்டப்பாடி பிரதேசங்களில், மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில் அதிரடிரப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது மாவோயிஸ்ட்கள் அடிக்கடி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

கர்நாடக கும்பல்

மேலும், சோமன் தலைமையிலான மாவோயிஸ்ட் கும்பலுடன், கர்நாடகாவில் இருந்து வந்துள்ள மாவோயிஸ்ட்கள் இணைந்துள்ளதாகவும் உளவுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, இரு மாநில எல்லைப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், மாவோயிஸ்ட்கள் பதுங்கியுள்ளதாக கருதப்படும் அட்டப்பாடி வனத்தையொட்டியுள்ள பாலமலைப் பகுதியில் சி.ஆர்.பி.எஃப். கமாண்டோ வீரர்கள் பயிற்சிக்குச் சென்றுள்ளனர். இவர்கள் பல குழுக்களாக பிரிந்து வனத்தில் நுழைந்திருப்பது பயிற்சிக்காகவா அல்லது நிஜ தேடுதல் வேட்டையா என்பது புரியாத புதிராக உள்ளது என்கின்றனர் இந்தக் காட்டுப் பகுதியைச் சுற்றியுள்ள பழங்குடி கிராம மக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x