Published : 04 Nov 2016 09:54 AM
Last Updated : 04 Nov 2016 09:54 AM

உள்ளாட்சி 31: அரசியலுக்கு வாருங்கள் இளைஞர்களே, மிக எளிதாக களம் காண்போம்!

எழுத்தாளர் நண்பர் அவர். அரசியல் கட்டு ரைகளை எழுதித் தள்ளுவார். இளைய தலைமுறையினர் அரசியலுக்கு வர வேண்டும் என்கிற அக்கறை அதில் இருக்கும். கட்டுரைகளில் கையைப் பிடித்து இழுக்காத குறையாக இளைஞர்களை அரசியலுக்கு இழுப்பார். பேசுவதிலும் ஆளுமை மிக்கவர். ஒருமுறை கல்லூரி ஒன்றில் பேசுவதற்காக அவரை அழைத்திருந்தார்கள். வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் நிகழ்ச்சி அது. இன்றைய தலைமுறைக்காக, இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரத்துக்காக காந்தி, நேரு போன்ற தேசத் தலைவர்கள் எப்படி எல்லாம் பாடுபட்டார்கள் என்று நிகழ்ச்சியில் விவரித்தார். எப்படி எல்லாம் போராடி இந்த வாக்குரிமையைப் பெற்றோம் என்று விவரித்தார். அந்த வாக்கை பணத்துக்காக விற்பது பாவம் இல்லையா என்று கேட்டார். நண்பர் இதைப் பேசும்போது அருகிலிருந்த மாவட்ட ஆட்சியர் பதறிவிட்டார். இன்னொரு நண்பரிடம் அவர், ‘என்னங்க கல்லூரியில் அரசியல் எல்லாம் பேசுகிறார்? மாணவர்கள் என்ன ஆவார்கள்?’ என்று அதிர்ச்சியாகக் கேட்டிருக்கிறார்.

மாணவர்கள் அரசியல் பேசக் கூடாது. பெண்கள் அரசியல் பேசக் கூடாது. கல்வி நிலை யங்களில் அரசியல் பேசக் கூடாது. அலுவல கத்தில் அரசியல் பேசக் கூடாது. வீடுகளில் அரசியல் பேசக் கூடாது. தேநீர் கடையில் அரசியல் பேசக் கூடாது. எங்குதான் பேசுவது அரசியலை? சரி, ஏன் பேசக் கூடாது அரசி யலை. ஏனெனில், அந்த ஆட்சியர் உட்பட நமது பெரும்பான்மைப் பொதுச் சமூகம் கற்பிதம் செய்துக்கொண்டிருக்கும் அரசியல் அப்படி. மலினமான அரசியல் அது. தேசத் தலைவர்களைப் பற்றி பேசுவது அரசியலா? அவர்களின் தியாகத்தைப் பேசுவது அரசியலா? எப்படியெல்லாம் போராடி வாக்கு ரிமையைப் பெற்றோம் என்று பேசுவது அரசியலா? அந்த வாக்குரிமையை விற்பது தவறு என்று பேசுவது அரசியலா? அதுதான் அரசியல் என்று நீங்கள் நினைத்தால் ‘ஆம், அதுதான் அரசியல்’.

பெரும்பான்மைச் சமூகம் நினைப்பதுபோல அரசியல் என்றால் கட்சிகள் அல்ல. அரசியல் என்றால் தேர்தல் அல்ல. அரசியல் என்றால் ஓட்டு அல்ல. அரசியல் என்றால் காலில் விழுவது அல்ல. அரசியல் என்றால் அயோக்கி யத்தனம் செய்வது அல்ல. அரசியல் என்றால் கறை வேட்டிகளோ காவி வேட்டிகளோ அல்ல. எங்கெல்லாம் உயிர்கள் சமூகமாக இருக்கின்றனவோ அங்கெல்லாம் இருக்கிறது அரசியல். அது மனிதனிடம் இருக்கிறது. தாவரங்களிடம் இருக்கிறது. விலங்குகளிடம் இருக்கிறது. குறிப்பிட்ட தாவரங்கள் தங்கள் அருகே மாற்றுத் தாவரங்களை வளரவிடாது. ஒரு ஆண் யானை அல்லது தாய் யானை ஒரு மந்தைக்கு தலைமை ஏற்க முடியாது. சித்தி அல்லது பெரியம்மா யானைதான் தலைவியாக முடியும். நம் மூதாதையரான குரங்கு கூட்டத்திடம் இருக்கிறது அரசியல். தேனீயிடம் இருக்கிறது அரசியல். எறும்பிடம் இருக்கிறது அரசியல். நம் வீட்டுக்குள் இருக்கிறது அரசியல். அலுவலகத்தில் இருக்கிறது அரசியல். அரசியல் இருந்தால்தான் அது ஆரோக்கியமான சமூகம்.

ஏனெனில் அரசியல் என்பது நமது அடிப்படைத் தேவை. அது ஒரு நிர்வாகம். அது ஒரு சித்தாந்தம். அது ஒரு கலாச்சாரம். அது ஒரு கலை. அது ஓர் அறிவியல். அது ஒரு விளையாட்டு. அது ஒரு கூறு. அது ஒரு பார்வை. நீங்கள் ஒரு விஷயத்தை எப்படி பார்க்கிறீர்கள் என்பதே அரசியல். காந்தியின் கண்ணாடி அணிந்து பார்த்தீர்கள் எனில் அது அகிம்சை அரசியல். ஹிட்லரில் கண்களால் பார்த்தீர்கள் எனில் அது அழிவு அரசியல். அரசியல் செய்யாமல் ஆரோக்கியமான மாற்றங்கள் நிகழாது. நமது குழந்தைகளை அரசியல் பேச விடுங்கள். இளமையில் கல் என்பார்கள். அவர்கள் இளமையில் அரசியல் கற்கட்டும். அவர்கள் அரசியல் கற்காததின் விளைவே இன்றைய சீரழிவு.

நமது குழந்தைகள் அரசியலுக்கு வராமல் இன்றைய அரசியல் தேங்கியிருக்கிறது. அங்கே கொசுக்கள் பெருகிவிட்டன. நோய்கள் பரவுகின்றன. அங்கே நாற்றமெடுக்கிறது. அரசியல் எனில் அது ஆறு போல இருக்க வேண்டும். அடுத்தடுத்த தலைமுறைக்கு வழிவிட வேண்டும். வழிவிடும்போது ஒற்றை மரபில் அல்லாமல் விசாலமான பரப்பில் வழிவிட வேண்டும். அதுவே ஆழப்படுத்தப்பட்ட ஜனநாயகம். அகலப்படுத்தப்பட்ட ஜனநாயகம். திறந்தவெளி ஜனநாயகம். நிரந்தரப் பொதுச் செயலாளர், நிரந்தரத் தலைவர், நிரந்தர முதல்வர் என்பதெல்லாம் ஒரு பெருமையா? 50 ஆண்டுகள், 60 ஆண்டுகளாக தலைவராக இருப்பது எல்லாம் ஒரு சாதனையா?

ஒரு கலையோ அறிவியலோ விளை யாட்டோ அதனை அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தும்போதுதான் புதுமைகள் பிறக்கும். புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும். ஆதார சக்திக்கு அப்போதுதானே புத்துயிர் ஊட்ட முடியும். எம்.எஸ்.சுப்புலட்சுமியை ஆராதித்தோம். ஸ்வர்ணலதாவும் ஷ்ரேயா கோஷலும் வரவில்லையா? நியூட்டனை வியந்தோம். சுந்தர் பிச்சை உருவாகவில்லையா? கவாஸ்கரை கைத்தட்டினோம். சச்சின் சாதிக்கவில்லையா? அப்படிதானே அரசியலும். எல்லாவற்றுக்கும் அமெரிக்காவைக் கைகாட்டுகிறோம். இதோ அதிபர் தேர்தல் நடக்கிறது. ஒபாமா ஒதுங்கிவிட்டார். ஜிம் கார்ட்டரும், ரொனால்டு ரீகனும், ஜார்ஜ் புஷ்ஷும், பில் கிளிண்டனும் அரசியலில் அட்டையைப் போலவா ஒட்டிக் கொண்டிருந்தார்கள்? வழிவிடுங்கள். வழிகாட் டுங்கள். வழி நடத்துங்கள். பழமையைப் போற்றுவோம். புதுமையை வரவேற்போம்.

எல்லாம் சரி, இளைஞர்களாகிய நாங்கள் அரசியலில் நுழைவது அவ்வளவு எளிதா? எவ்வளவுதான் நல்லவராக இருந்தாலும் ஒரு கட்சியில் சேர்ந்து சட்டமன்ற உறுப்பினர் ஆகிவிட முடியுமா? குறைந்தபட்சம் மாவட்டம், வட்டம், கிளை எதையாவது பிடித்துவிட முடியுமா? ஏற்கெனவே ஊருக்கு ஊர் வாரிசு அரசியல் சந்தி சிரிக்கிறது. இதில் நாங்கள் எப்படி நுழைய முடியும்? குறிப்பாக, எங்களால் செலவு செய்ய முடியாதே. நீங்கள் கேட்பது புரிகிறது.

உண்மைதான், இன்றைய ஆளும் கட்சியாகட்டும், எதிர்க் கட்சியாகட்டும், இதர கட்சிகளாகட்டும் அவ்வளவு சீக்கிரம் உள்ளே நுழைய முடியாத இரும்புக் கோட்டைகளாக இருக்கின்றன. தேர்தலில் போட்டியிட முற்படும் நபர்களிடம் கேட்கப்படும் முதல் கேள்வியே, ‘எவ்வளவு செலவு செய்வீர்கள்?’ என்பதுதான்.

ஆனால், வழி இருக்கிறது நண்பர்களே. மிகவும் எளிமையான வழி அது. அரசியலில் நுழைய கட்சிகள் எதற்கு? கட்சிகளின் சின்னங்கள் எதற்கு? உள்ளாட்சி இருக்கிறது. பஞ்சாயத்துக்கள் இருக்கின்றன. நீங்கள் உள்ளம் வைத்தால் போதும், உள்ளே இழுக்க அவை தயாராக இருக்கின்றன. பெரியதாக போராட வேண்டாம். ராமநாத புரம் மாவட்டம், மைக்கேல்பட்டினம் பஞ் சாயத்தில் எத்தனை ஓட்டுக்கள் என்று நினைக்கிறீர்கள்? வெறும் ஆயிரம் ஓட்டுக்கள். அரியனேந்தல் பஞ்சாயத்தில் 1800 ஓட்டுக்கள். திருநெல்வேலி மாவட்டம், ஜமீன் தேவர் குளத்தில் 1200 ஓட்டுக்கள். திருவள்ளூர், அதிகத்தூரில் 1800 ஓட்டுக்கள். இவர்கள் எல்லாம் சாதிக்கவில்லையா? தங்கள் கிராமங்களை முன்னோடி கிராமங்களாக்கிக் காட்டவில்லையா. 500-க்கும் குறைவான ஓட்டுக்களைக் கொண்ட பஞ்சாயத்துக்கள் எல்லாம் இருக்கின்றன. உங்கள் சொந்த கிராமம் இருக்கிறதல்லவா? அங்கே கிராமப் பஞ்சாயத்தில் போட்டியிடலாமே. பஞ்சாயத்துத் தலைவராக வேண்டாம், குறைந்தபட்சம் பஞ்சாயத்து வார்டு உறுப்பினராக போட்டி யிடலாமே. 100, 200 சொச்சம் ஓட்டுக்கள்தானே. கட்சி தேவையில்லை. சின்னங்கள் தேவை யில்லை. கட்சிகள் கை வைக்க இயலாத கவச குண்டலங்கள் அல்லவா அவை. அப்படியே நுழைந்தாலும் சட்டமன்ற தொகுதியைப் போன்றெல்லாம் சமாளிப்பது சிரமமான காரியம் இல்லையே.

சரி, போட்டியிடுவதற்கு தகுதிகள் என்ன? 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். அந்தப் பகுதியின் வாக்காளராக வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்க வேண்டும். அரசு ஊழியராக இருக்கக் கூடாது. குற்றப் பின்னணி கூடாது. குற்ற வழக்கில் தண்டிக் கப்பட்டிருக்கக் கூடாது. பஞ்சாயத்து தலைவருக்குப் போட்டியிட வைப்புத் தொகை பொதுப் பிரிவினருக்கு ரூ.600 / பட்டியல் பிரிவினருக்கு ரூ.300. பஞ்சாயத்து வார்டு உறுப்பினருக்குப் போட்டியிட வைப்புத் தொகை பொதுப் பிரிவினருக்கு ரூ.200 / பட்டியல் பிரிவினருக்கு ரூ.100. ஒன்றிய வார்டு உறுப்பினருக்குப் போட்டியிட பொதுப் பிரிவினருக்கு ரூ.600 / பட்டியல் பிரிவினருக்கு ரூ.300. மாவட்டப் பஞ்சாயத்து வார்டு உறுப்பி னருக்குப் போட்டியிட பொதுப் பிரிவினருக்கு ரூ.1000/ பட்டியல் பிரிவினருக்கு ரூ.500.

வெற்றியோ, தோல்வியோ... களம் காண்பதே முக்கியம். அரசியலுக்கு வாருங் கள் நண்பர்களே, வரவேற்கிறோம்.

- பயணம் தொடரும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x