Published : 25 Oct 2022 05:42 PM
Last Updated : 25 Oct 2022 05:42 PM

தீபாவளி காற்று மாசு | சவுகார்பேட்டையில் அதிக அளவு; பெசன்ட் நகரில் குறைந்த அளவு

சென்னை: தீபாவளி நாளான அக்.24-ம் தேதியன்று, காற்றுத்தர குறியீட்டு அளவு காலை 6 மணி முதல் மறுநாள் அக்.25-ம் தேதி காலை 6 மணி வரை, மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி 345 லிருந்து 786 வரை அதிகரித்துள்ளது. இது மிக மோசமான அளவுகள் என கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி: உச்ச நீதிமன்றத்தின் ஆணையின் படி மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மாநில மாசு கட்டுப்பாடு வாரியங்கள்/ மாசு கட்டுப்பாடு குழுமங்கள் முக்கியமான நகரங்களில் குறுகிய கால கண்காணிப்பாக அதாவது 14 நாட்களுக்கு (தீபாவளிக்கு 7 நாட்களுக்கு முன்பாகவும் தீபாவளிக்கு 7 நாட்களுக்கு பின்பாகவும்) முக்கிய காற்று மாசு காரணிகளின் அளவுகளை கண்காணிக்க மாநிலங்களை அறிவுறுத்தியுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் (2022) தீபாவளி பண்டிகை அன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என அறிவித்தது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் மாசுபாட்டுத் தாக்கத்தை கண்டறிய சுற்றுப்புற காற்றின் தர ஆய்வையும் ஒலி மாசு அளவையும் பெருநகர சென்னை மாநகரத்தின் பெசன்ட் நகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, சவுகார்பேட்டை, வளசரவாக்கம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய ஏழு இடங்களில் மேற்கொண்டது.

உச்ச நீதிமன்ற ஆணையின் அடிப்படையில் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வழிகாட்டு வரைமுறைகளின் படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் 14 நாட்களுக்கு (அதாவது தீபாவளிக்கு 7 நாட்களுக்கு முன்பாகவும் தீபாவளி அன்றும் தீபாவளிக்கு 7 நாட்களுக்கு பின்பாகவும்) காற்று மாசு காரணிகளின் அளவுகளை கண்காணித்து வருகிறது. மேலும் ஒலி மாசுபாட்டின் அளவு தீபாவளிக்கு முன் (அதாவது) 18.10.2022 மற்றும் தீபாவளி பண்டிகையன்று 24.10.2022 மேற்கொள்ளப்பட்டது.

தீபாவளி பண்டிகைக்கு முன் அதாவது 18.10.2022 அன்று குறைந்த அளவாக ஒலி மாசு பெசன்ட் நகரில் 54.84 dB(A)ம், அதிக அளவாக ஒலி மாசு வளசரவாக்கத்தில் 65.5 dB(A)ம் ஆக கண்டறியப்பட்டது, மேலும் தீபாவளி அன்று (அதாவது 24.10.2022) குறைந்த அளவாக ஒலி மாசு பெசன்ட் நகரில் 66dB(A)ம், அதிகபட்ச அளவாக ஒலி மாசு திருவொற்றியூரில் 79.7 dB(A)ம் கண்டறியப்பட்டது. மேற்கூறிய கண்டறியப்பட்ட ஒலி மாசு அளவுகள் தீபாவளி அன்று வரையறுக்கப்பட்ட தேசிய ஒலிமாசுபாட்டின் அளவுகளை விட அதிக அளவாக உள்ளது என கண்டறியப்பட்டது. (பகல் நேரங்களில் 65.0 dB(A), இரவு நேரங்களில் 55.0 dB(A).

தீபாவளி நாளான 24.10.2022 அன்று, காற்றுத் தர குறியீட்டு அளவு காலை 6 மணி முதல் மறுநாள் 25.10.2022 காலை 6 மணி வரை, மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி 345 லிருந்து 786 வரை (மிக மோசமான அளவுகள்) என கண்டறியப்பட்டது (குறைந்த அளவாக பெசன்ட் நகரிலும் (345) அதிக அளவாக சவுகார்பேட்டையிலும் (786) கண்டிறியப்பட்டது). இதற்கு முக்கிய காரணிகளாக, பொதுமக்கள் பெருமளவில் பட்டாசுகளை வெடித்தும் வாண வெடிகளை பெரும் அளவுகளில் வெடித்ததினாலும் மேலும் காற்றில் காணப்பட்ட அதிகமான ஈரத்தன்மையும் மற்றும் காற்றின் மிகக் குறைந்த வேகமும் ஆகும். மேற்கூறிய வானிலை அமைப்பு, பட்டாசு வெடிப்பதனால் ஏற்படும் புகை வான்வெளியில் விரவுதற்கு ஏதுவான சூழ்நிலை அல்ல. இதுவே, சென்னை மாநகரத்தின் காற்றுத்தர குறியீட்டு அளவு 2022 ஆம் ஆண்டின் தீபாவளி அன்று அதிகமானதற்குக் காரணம் ஆகும்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியாளர்கள், மாநகராட்சி ஆணையாளர்கள், காவல்துறை, பள்ளி, கல்லூரி மாணவர்கள், செய்தி மற்றும் ஊடகங்கள் மூலமாக பட்டாசு வெடிப்பதனால் ஏற்படும் தாக்கத்தை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டது. தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம் மக்களிடம் பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை கையாளும் படியும், பட்டாசுகளை மருத்துவமனை, வழிபாட்டுதளங்கள், எளிதில் தீ பற்றக்கூடிய இடங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் வெடிப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தியது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x