Published : 24 Oct 2022 06:41 AM
Last Updated : 24 Oct 2022 06:41 AM

இன்று தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்: ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி: தீமையை நன்மை வெற்றி கொள்வதை இந்த தீபத் திருவிழா குறிப்பிடுகிறது. ஞானம், இரக்கம் மற்றும் நம்பிக்கையுடன் நம் இதயங்களை ஒளிரச் செய்வதில் இத்திருநாள் நமக்கு உள்ளூக்கம் அளிக்கிறது. ஒரே குடும்பமாக பண்டிகையைக் கொண்டாடி, மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வோம். அனைவருக்கும் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் பசுமையான தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: தீபாவளியையொட்டி நம் மண்ணின் மைந்தர்கள் உழைப்பில் உருவாகும் பொருட்களை வாங்கினால் இந்தியர் அனைவரின் வாழ்வும் ஒளிரும் என்ற பிரதமரின் வரிகளை நினைவு கூர்ந்து, நாம் வாங்கும் பொருட்கள் மூலம் எளியோரின் கொண்டாட்டமாகவும் தீபாவளியை மாற்றுவோம். அனைவரின் வாழ்விலும் ஒளியேற்றுவதோடு, சுய சார்பான இந்தியாவை படைக்கும் வகையிலும் இந்த தீபாவளி அமையட்டும். அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி: தன்னலமும், அகம்பாவமும், அரக்க குணமும் கொண்டு அதிகாரம் செய்ய நினைப்போரை தர்மம் தண்டித்து, நியாயத்தையும் சமாதானத்தையும் நிலைநாட்டும் பண்டிகைதான் தீபாவளி. தமிழக மக்கள், தீயசக்திகளின் ஆணவத்தை அழித்து, அதிமுகவின் நல்லாட்சி நடைபெறும் வகையில் இந்த தீபாவளிக்கு ஏற்றப்படும் ஒளி நிலைத்திருக்கட்டும்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் தினமாகவும் கருதப்படும் இந்நன்னாளில், தனி மனிதர் வாழ்வில் மட்டுமின்றி, சமுதாயத்தின் அங்கமாகிய மக்கள் அனைவரின் உள்ளங்களிலும் தீப ஒளிகள் ஏற்றப்பட வேண்டும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: தீமை மறைந்து, நன்மை பெருகும் என்ற நம்பிக்கையுடன்தான் ஏழை மக்கள் தீபாவளியை கொண்டாடுகின்றனர். அவர்களின் நம்பிக்கை பொய்த்துப் போகாமல், நாட்டைச் சூழ்ந்துள்ள தீமைகளை நாம் ஒன்று சேர்ந்து வெல்வோம் என சபதமேற்போம். அறியாமை எனும் இருளைப் போக்கி, வெற்றியையும், வளர்ச்சியையும் இந்த தீபாவளித் திருநாள் கொண்டு வரட்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: மக்களுக்கு மகிழ்ச்சி நிலைக்க இல்லாமை கூடாது. இல்லாமையை விரட்ட கல்வியும், வேலைவாய்ப்பும் கட்டாயம். வேலைவாய்ப்பு மட்டுமின்றி சமூக நீதி, அமைதி, வளம், வளர்ச்சி, ஒற்றுமை, நல்லிணக்கம், சகோதரத்துவம், பன்முகத்தன்மை உள்ளிட்டவை பெருகவும், மக்கள் வாழ்வில் இல்லாமை இருள் விலகி, இன்ப ஒளி நிறையவும் தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்.

மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: மங்களகரமான இந்த தீபாவளி பண்டிகை மக்கள் உள்ளங்களில் உள்ள துன்பங்களை அகற்றி, அனைவரின் இல்லங்களிலும் தீப ஒளியால் மகிழ்ச்சி பரவ வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன். அனைவருக்கும் எனது இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை: அனைவருக்கும் என் உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: இருள் நீங்கி, ஒளி தரும் பண்டிகையான தீபாவளியைக் கொண்டாடுவதால் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகும். தீய குணங்கள் நீங்கி, நல்லெண்ணம் ஓங்கும் என்பதே ஐதீகம், சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் பட்டாசுகளை வெடித்து மகிழ வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்: தீமைகள் எல்லாம் விலகி, நன்மைகள் பெரும் வெளிச்சமாகப் பரவட்டும், ஒவ்வொருவரிடமும் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிறைந்து அன்பு தழைக்கட்டும்.

வி.கே.சசிகலா: தீப ஒளியால் இருள் அகன்று, தீமைகள் விலகி, நன்மைகள் பிரகாசிக்கும் தினமாகக் கொண்டாடப்படும் இந்நன்னாளில், அனைவரது இல்லங்களிலும், உள்ளங்களிலும் துன்பம் விலகி, இன்ப ஒளி வீசட்டும், வாழ்வில் வளமும், நலமும் பெருகட்டும்.

சமக தலைவர் ஆர்.சரத்குமார்: தீபாவளித் திருநாளில் மக்கள் வாழ்வு செழிப்புடனும், ஆரோக்கியத்துடனும் முன்னேற்றம் காண்பதாக அமையட்டும்.

ஐயுஎம்எல் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன்: இந்தியா ஆன்மிகத்தில் முதன்மை பெற்றுத் திகழும் புண்ணிய பூமி. இங்குள்ளோர் ஒருதாய் மக்கள் என்ற உணர்வில் திளைத்தவர்கள். அந்த உணர்வை உலகம் முழுவதும் பரப்ப, இந்த நாளில் அனைவரும் முனைவோம். எல்லோருக்கும் நல் வாழ்த்துகள்.

பாமக தலைவர் அன்புமணி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் எம்.பி. சு.திருநாவுக்கரசர், கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தேசியவாத காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் கோல்டன் அபுபக்கர், இந்திய தேசிய லீக் மாநில பொதுச் செயலாளர் ஜகிருத்தீன், கோகுல மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் எம்.வி.சேகர், தேசிய முன்னேற்றக் கழக தலைவர் ஜி.ஜி.சிவா, ஜம்மியத் உலமா ஹிந்த் மாநிலச் செயலர் எம்.ஜி.கே.நிஜாமுதீன் உள்ளிட்டோரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x