Published : 17 Nov 2016 09:07 AM
Last Updated : 17 Nov 2016 09:07 AM

ரியல் எஸ்டேட் புள்ளிகளின் புது உத்தி: பணத்தைக் கொடுத்து சொத்து வாங்கலாமா?

ஐநூறும்.. ஆயிரமும்..: உங்கள் சந்தேகங்களுக்கு நிபுணர்கள் பதில் அளிக்கிறார்கள்

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வது மற்றும் கையில் இருக்கும் நோட்டுகளை வங்கியில் செலுத்துவது தொடர்பாக ’தி இந்து உங்கள் குரலில்’ பொதுமக்கள் பதிவு செய்திருந்த சந்தேகங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் கே.அழகுராமன் மற்றும் ரிசர்வ் வங்கி தரப்பு தரும் பதில்கள் இங்கே..

வாங்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கலாமா?

பேருந்து, பால் பூத்கள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட இடங்களில் ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் நவம்பர் 24-ம் தேதி வரை பெறப்படும் என்கிறது ரிசர்வ் வங்கி. ஆனால், அப்படியும் ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க மறுக்கிறார்களே.. இதற்கு சட்டப்படியான நடவடிக்கை ஏதும் எடுக்க முடியுமா?

- சி.கண்ணப்பன் - கோரிப்பாளையம்; மதுரை

மறுப்பதற்கு காரணம் பொதுமக்கள்தான்

அரசால் அறிவிக்கப்பட்ட இடங்களில் பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க மறுப்பதற்குக் காரணம் பொதுமக்கள்தான். உதாரணத்துக்கு, 100 ரூபாய்க்கு ஒரு பொருளை வாங்கிவிட்டு 500 ரூபாயை எடுத்து நீட்டுகிறார்கள். அதற்கு மீதி 400 ரூபாய் சில்லறை தரவேண்டி இருக்கிறது. 100 ரூபாய் நோட்டுகளுக்குத் தட்டுப்பாடு இருக்கும் நிலையில் எப்படி சில்லறை கொடுக்க முடியும். இந்தக் காரணத்தால் தான் வாங்க மறுக்கிறார்கள். அதேசமயம், கொடுக்கும் முழு பணத்துக்கும் பொருள் தர மறுத்தாலோ, இந்த ரூபாய் செல்லாது என்று சொன்னாலோ சம்பந்தப்பட்ட அந்த நிறுவனங்கள் மீது நிச்சயம் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க முடியும்.

பணத்தைக் கொடுத்து சொத்து வாங்கலாமா?

டப்பில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் டிசம்பர் 30-க்குப் பிறகு செல்லாது என்கிறார்கள். ஆனால், எனக்குத் தெரிந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர், உங்களுக்கு ஏதாவது சொத்து வாங்க வேண்டுமானால் சொல்லுங்கள். அதற்கு ஈடாக ரூ. 60 கோடி வரை பணம் வாங்கிக்கொள்ள நான் தயார் என்கிறார். இவர் சொல்வதை நம்பி சொத்து வாங்குவது பாதுகாப்பானதா? இப்படிப் பெறப்படும் பணத்தை ரியல் எஸ்டேட் புள்ளிகள் வங்கிகளில் எப்படி மாற்றுவார்கள்?

- மு.கந்தசாமி, சேலம்.

வாங்கினால் வசமாக சிக்கிக் கொள்வீர்கள்

ரியல் எஸ்டேட் அதிபர் உங்களை வசமாக சிக்க வைக்கப் பார்க்கிறார். அவர் சொன்னதை நம்பி நீங்கள் ஒரு சொத்து வாங்கினால், தனது சொத்துகளை உங்களுக்கு விற்றதாகக் கணக்குக் காட்டி அதற்கான வருமான வரியைக் கட்டி அவர் தப்பித்துக் கொள்வார். விற்பனை பத்திரத்தில் உங்களது பெயர், ’பான்’ எண் விவரங்கள் இருக்கும் என்பதால் உங்களைத் தேடி வருமானவரித் துறை வரும். அந்த சொத்துகளை வாங்குவதற்கு உங்களுக்கு ஏது அவ்வளவு பணம்? அதற்கு வருமான வரி கட்டினீர்களா… என்றெல்லாம் கேள்வி கேட்பார்கள். இதற்கு உரிய ஆவணங்கள் இல்லாதபட்சத்தில் நீங்கள் முதலீடு செய்த தொகைக்கும் கணக்கில் வராத பிற தொகைக்கும் சேர்த்து அபராதம் விதிக்கப்படுவதுடன் சிறைத் தண்டனையும் விதிக்க வாய்ப்பு இருக்கிறது. அதே சமயம், இவ்வளவு பெரிய தொகையைப் பரிவர்த்தனை செய்த ரியல் எஸ்டேட் உரிமையாளருக்கு இந்த விஷயத்தில் எவ்விதமான ரிஸ்க்கும் இருக்காது.

கள்ளப் பணத்தை இப்படி மாற்றினால்?

ங்கள் ஊர் பக்கம் சில கிராமத்து கோயில்களில் நிர்வாகம், கோயில் வருமானத்தை வங்கிக் கணக்கில் போடாமல் 500, 1000 ரூபாய் பணமாக வைத்திருக் கிறார்கள். இதையெல்லாம் இப்போது கல்லூரி மாணவர்களின் அடையாள அட்டைகளைக் கொண்டு மாற்றுகிறார்கள். இது கறுப்புப் பணம் இல்லை தான். ஆனால், இதே உத்தியை கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களும் பின்பற்ற ஆரம்பித்தால் என்னாகும்?

- ஏ.பழனியப்பன், தேவகோட்டை.

கையில் மை வைப்பதால் இனி வாய்ப்பில்லை

நீங்கள் சொல்வது போல் ஒரு சிறு அளவிலான பணத்தை மட்டுமே மாற்ற முடியும். கோடி கோடியாய் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தை இப்படி மாற்ற முடியாது. எனினும், சிறு தொகையைக் கூட முறைகேடாக மாற்றக் கூடாது என்பதற்காகத்தன் விரலில் மை வைக்கும் முறையை அமலுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஹவாலா பணத்தை காப்பாற்ற முடியுமா?

னக்குத் தெரிந்த நபர் ஒருவரின் இரண்டு மகன்கள் வெளிநாட்டில் வேலையில் இருக்கிறார்கள். சேலத்தில் இருக்கும் தனது தந்தைக்கு இவர்கள் பெரும்பாலும் குருவி (ஹவாலா) மூலமாகத்தான் பணம் அனுப்புவார்கள். அப்படி அனுப்பப்பட்ட பணத்தில் ரூ 45 லட்சத்தை அவர்களது தந்தையார் சேமித்து வைத்திருக்கிறார். உழைத்துச் சேமித்த இந்தப் பணத்தை காப்பாற்ற வழி ஏதும் உண்டா?

எஸ்.குணசேகரன் கடலூர்.

நிச்சயம் காப்பாற்ற முடியாது

ஹவாலா மூலம் வந்த பணத்தை உழைத்து சேமித்த பணம் என்ற அடைமொழிக்குள் கொண்டுவர முடியாது. அப்படியானால் அவர்கள் முறையாக வங்கிகள் வாயிலாக இங்கே அனுப்பி இருக்க வேண்டும். அப்படி அனுப்பி இருந்தால் அந்தப் பணத்துக்கு ஏற்கெனவே வரி கட்டப்பட்டிருக்கும். அதைவிடுத்து தற்போது, தனி நபர் ஒருவர் ’நான் 45 லட்சத்தை சேமித்து வைத்திருக்கிறேன்’ என்று சொல்வதை அரசோ, வருமான வரித்துறையோ ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது.

செல்வந்தர்கள் வரிசைக்கு வரவில்லையே?

றுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை இது என்கிறார்கள். ஆனால், கடந்த ஒரு வாரமாக, நடுத்தர வர்க்கத்தினரும் ஏழைகளும் மட்டும்தான் வரிசையில் நின்று பணத்தை மாற்றிச் செல்கிறார்கள். செல்வந்தர்களோ, சினிமா பிரபலங்கள் உள்ளிட்டவர்களோ வரிசைக்கு வரவில்லை. இவர்களுக்கெல்லாம் வேறு வழிகளில் பணத்தை மாற்றிக்கொடுக்கிறார்களா? அப்படியானால் பிரதமரின் திட்டம் தோல்வியா? அல்லது செல்வந்தர்கள் வேறு ஏதாவது திட்டம் வைத்திருக்கிறார்களா?

கே.சாய்ராம் செக்காலை.

அவர்களை நிர்பந்தங்கள் பாதிக்கவில்லை

வங்கிகளில் நீண்ட வரிசை, பழைய நோட்டுகள் செல்லாது, நான் புது நோட்டு மாற்றிவிட்டேன்; நீங்கள் மாற்றவில்லையா... இதுபோன்ற உரையாடல்களும் நிர்பந்தங்களும்தான் பொதுமக்கள் வங்கிகளில் குவிவதற்கு முக்கியக் காரணம். செல்வந்தர்களையும் சினிமா பிரபலங்களையும் இந்த நிர்பந்தங்கள் பாதிக்கவில்லை. அதனால், அவர்கள் வரிசைக்கு வரவில்லை. அதுவுமில்லாமல், காசோலைகள் மூலமாக வங்கிகளில் பணம் எடுக்கலாம் என்பதால் பணியாளர்கள் மூலமாக வங்கிகளில் பணத்தை அவர்கள் எடுத்துக் கொள்ளமுடியும். வரிசைக்கு வரவில்லை என்பதற்காக அவர்களுக்கு வங்கிகள் சிறப்பு ஏற்பாடு செய்து கொடுத்திருக்கலாம் என சந்தேகிக்க வேண்டியதில்லை. அதேபோல், ஆரம்ப நிலையில் இருக்கும்போதே பிரதமரின் திட்டம் தோல்வி என்ற முடிவுக்கும் வரவேண்டியதில்லை.

பணம் மாற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள்

ங்கிகளில் 4500 ரூபாயை அடையாள ஆவணம் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்கிறார்கள். இதை சாதகமாக்கிக் கொண்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் அடையாள ஆவணங்களை வைத்தும், வங்கி அதிகாரிகள் வங்கி வாடிக்கை யாளர்களின் அடையாள ஆவணங்களை வைத்தும், சிம்கார்டு விற்பனை செய்யும் கடைகளில் தரப்படும் அடையாள ஆவணங்களை வைத்தும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு கறுப்புப் பணம் நல்ல பணமாக மாற்றப்படுகிறது. இதற்கு வங்கி அதிகாரிகளும் உடந்தையாக இருக்கிறார்கள். இதை தடுப்பதற்கு வழி இருக்கிறதா?

- முகம்காட்ட விரும்பாத முன்னோடி வங்கி ஒன்றின் அதிகாரி

குறிப்பிட்டு புகார் தந்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்

இது தொடர்பாக சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி தரப்பில் கேட்டபோது, ’’இதுபற்றி எங்களுக்கும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்திருக்கின்றன. இந்த முறைகேடுகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற முறைகேடுகள் நடப்பதாக யாராவது குறிப்பிட்ட நபர்கள் அல்லது நிறுவனங்கள் மீது புகார் தந்தால் விசாரணை நடத்தப்பட்டு உண்மையாக இருக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று சொன்னார்கள்.

தொகுப்பு: குள.சண்முகசுந்தரம்/ப.முரளிதரன்

நீங்கள் செய்யவேண்டியது... 044-42890012 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர்முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களைப் பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x