Published : 29 Nov 2016 03:34 PM
Last Updated : 29 Nov 2016 03:34 PM

50 சதவீதம் மட்டுமே மழை பொழிவு: வறட்சியின் பிடியில் திண்டுக்கல் மாவட்டம்

முன்னெச்சரிக்கை பணிகளை தொடங்குமா மாவட்ட நிர்வாகம்?

*

திண்டுக்கல் மாவட்டத்தில் நீர்நிலை ஆதாரங்களில் முற்றிலுமாக நீர் வற்றிவருவதால் மாவட்டத்தின் பல பகுதிகள் தற்போதே வறட்சியின் பிடியில் சிக்கத்துவங்கியுள்ளன. விவசாயத்திற்கு மட்டுமின்றி குடிநீருக்கும் தற்போதே சிக்கல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் வறட்சியை சமாளிக்க முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தற்போதே மாவட்ட நிர்வாகம் களம் இறங்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள், மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையை தொடர்ந்து, வடகிழக்கு பருவ மழையும் ஏமாற்றியதால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலை ஆதாரங்கள் வெகுவேகமாக வறண்டுவருகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தின் சராசரி மழை அளவு 836 மில்லிமீட்டர். இந்த ஆண்டில் இதுவரை பெய்துள்ள மழை அளவு 418.83 மில்லிமீட்டர். நவம்பர் மாதத்தில் மட்டும் 163 மில்லிமீட்டர் மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் பெய்ததோ 35.74 மில்லிமீட்டர் தான். மொத் தம் இந்த ஆண்டில் 418 மில்லி மீட்டர் மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது சராசரி மழைபொழிவில் 50 சதவீதம். மாவட்டத்தில் மொத்தமுள்ள ஏழு அணைகளில் பாதிக்கும் கீழ் தான் தண்ணீர் உள்ளது. அணைகள் தூர் வாரப்படாததால் தேங்கியுள்ள தண் ணீரையும் முழுமையாக பயன் படுத்தமுடியாத நிலையில் உள் ளது. ஒவ்வொரு அணையிலும் குறைந்தது 5 அடி தண்ணீர் பயன்படுத்த முடியாதநிலையில் வண்டல்மண் கலந்த தண்ணீராக உள்ளது.

வறண்ட குளம், கிணறுகள்

மாவட்டத்தில் பொதுப்பணித் துறை, ஊராட்சி ஒன்றியங்களுக்கு சொந்தமாக மொத்தம் 2093 குளங்கள் உள்ளன. இவை முற்றிலும் வற்றி காணப்படுகின்றன. ஊருக்கு அருகிலுள்ள சில குளங்களில் சாக்கடை கழிவுநீர் தேங்கிநிற்கிறது. அணைகள், குளங்களை நம்பி விவசாயம் செய்துவந்த விளைநிலங்கள் எல்லாம் தண்ணீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு பயிரிடப்படாமல் விடப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் மொத்தமுள்ள 91488 பாசனகிணறுகளில் 60 சதவீத கிணறுகள் வறண்டுவிட்டன. ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் இறவை பாச னத்தை நம்பி விவசாயம் செய்து வந்தவர் களும் விவசாய பரப்பை குறைத் துக்கொண்டனர்.

குடிநீர் தட்டுப்பாடு

பருவமழை முறையாக பெய்தாலே கோடைக்காலமான ஏப்ரல், மே மாதங்களில் மாவட்டத் தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். பருவமழை பொய்த்துவிட்ட நிலையில் தற்போதே கிராமப்பு றங்களில் குடிநீர் பிரச்சினை தலைதூக்கியுள்ளது.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான கொடைக்கானல் நகருக்கு நீர்ஆதாரமாக விளங்கும் மனோரத்தினம் சோலை அணை முற்றிலுமாக வறண்டுவிட்டது.

இதனால் நகர மக்களுக்கே குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலை யில் கோடைகாலத்தில் வரும் சுற்றுலாப்பயணிகளையும் சமாளிப் பது என்பது மிகவும் கடினமானது தான். பழநிக்கு பாலாறு பொருந் தலாறு அணை, ஆயக்குடி பேரூராட்சி பகுதிக்கு வரதமாநதி அணை, ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதிக்கு பரப்பலாறு அணை ஆகியவற்றில் தேங்கியுள்ள குறைந்த அளவு தண்ணீர், நகர மக்களின் குடிநீர் தேவைகளை தற்போது பூர்த்தி செய்துவருகிறது. இது எத்தனை நாளைக்கு என்பது கேள்விக்குறியாக உள்ளது. இது மாவட்டத்தில் ஒரு பகுதியின் நிலைதான்.

வேடசந்தூர் பகுதியில் குடகனாறு வறண்டதால் விவசாயம், குடிநீர் ஆகியவற்றிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பயிரிடப்பட்ட கடலை பயிர்களை காப்பாற்ற முடியாத நிலையில் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். வைகை ஆற்றில் தண்ணீர் இல்லாததால் ஆற்றுப்பாசனத்தை நம்பிய விளைநிலங்களும் தரிசாக காணப்படுகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் உருவாகியுள்ள சூழ்நிலையை கருத்தில்கொண்டு மாவட்ட நிர்வாகம் தற்போதே வறட்சிநிவாரண பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்பதே விவசாயிகள், பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

கொடைக்கானல் நகரில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நகராட்சி நிர்வாகம் தயாராகி வருகிறது.

திண்டுக்கல் மாநகராட்சியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம், ஆத்தூர் நீர்த்தேக்க திட்டம் ஆகியவற்றால் சில மாதங்கள் சமாளிக்கலாம். ஆனால் கோடைகாலம் வரை மக்களுக்கு முழுஅளவில் குடிநீர் விநியோகம் செய்வது என்பது சிரமம் தான்.

பனிகாலம் துவங்குவதற்கு முன்பே இரவு மற்றும் அதிகாலை யில் பனிப்பொழிவு மாவட்டத்தில் அதிகளவு காணப்படுகிறது. இதனால் மழைக்கான வாய்ப்பு மிகவும் குறைந்துவருகிறது.

விவசாயி சச்சிதானந்தம் கூறிய தாவது: விவசாயிகள் வறட்சி பாதிப்பில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள பயிர் இன்சூரன்ஸ் திட் டத்தை அரசு அறிவித்துள்ளது. இதற்கான தொகை கட்ட முடியாத நிலை யில் விவ சாயிகள் உள்ளதால் இதை அரசே செலுத்தவேண்டும். மாடு களுக்கு தீவின பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அரசு மானிய விலையில் விநியோகிக்க வேண் டும். வறட்சி மாவட்டமாக அறி வித்து விவசாயிகளுக்கு நிவா ரணம் வழங்கவேண்டும். பொது மக்கள் குடிநீருக்கு பட உள்ள சிரமத்தை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. மாவட்ட நிர்வாகம் தற்போதே வறட்சி குறித்து ஆய்வு செய்து வறட்சியை சமாளிக்க மேற்கொள்ளப்பட வேண்டிய பணி களில் தீவிரம் காட்டவேண்டும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x