Published : 22 Nov 2016 09:38 AM
Last Updated : 22 Nov 2016 09:38 AM

மாசுபடும் நீர் ஆதாரம், நலிவடையும் விவசாயம்: கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரப்படுமா வண்டலூர் ஏரி?



விவசாயிகள், பொதுமக்களின் நீண்டகால கோரிக்கை

வண்டலூர் ஏரியை தூர்வாரி, நீர் வந்துசேரும் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். ஏரியில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள், விவசாயிகள் கடந்த 20 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.

தாம்பரம் அடுத்த வண்டலூர் பகுதியின் குடிநீர், விவசாயத் தேவைக்கான பிரதான ஆதாரமாக இருப்பது வண்டலூர் பெரிய ஏரி. இதன் மொத்த பரப்பளவு 102 ஏக்கர். இதையொட்டி அமைந்திருக்கும் வண்டலூர் மலையில் இருந்து, மழைக் காலங்களில் 3 மாதங்கள் வரை ஏரிக்கு தண்ணீர் வந்தவண்ணம் இருக்கும். மழைநீர், ஜிஎஸ்டி சாலையைக் கடந்து, சின்ன ஏரி வழியாக பெரிய ஏரிக்கு வந்து சேரும். அதேபோல வண்டலூர், ஓட்டேரி, கிளாம்பாக்கம் போன்ற பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீரும், கால்வாய்கள் வழியாக ஏரிக்கு வந்து சேரும்.

இங்கு கனமழை பெய்தால், தண்ணீர் அனைத்தும் ஏரியில் எளிதில் வந்து சேர்ந்துவிடும். ஆனால், தற்போது கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் மழை நீர் முறையாக ஏரிக்கு வருவ தில்லை. கடந்த 20 ஆண்டுகளாக ஏரியின் நீர்வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றாததா லும், தூர்வாராத தாலும் ஏரிக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு கனமழையின்போது கூட, கால்வாய் ஆக்கிரமிப்புகள் காரணமாகவே ஜிஎஸ்டி சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மழைநீர் வண்டலூர் ஏரிக்கு வந்த பிறகு, கலங்கள் வழியாக முடிச்சூர் ஏரியை அடைந்து, கடைசியாக அடையாறு ஆற்றில் கலக்கும் வகையில் நீர்வழிப் பாதைகள் இருந்தன. கால்வாய்கள் ஆக்கிரமிப்பால், வண்டலூர் மலையில் இருந்து வந்த அதிக அளவு மழைநீர், பெருங்களத்தூர், முடிச்சூர் பகுதிகளை மூழ்கடித்தது.

வண்டலூர் ஏரியை நம்பி சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடந்தது. படிப்படியாக நீர்வரத்து குறைந்ததால், தற்போது 50 முதல் 60 ஏக்கரில் மட்டுமே விவசாயம் நடக்கிறது. அதுவும், 2 போகம் மட்டுமே பயிர் செய்யப்படுகிறது.

ஏரியில் உள்ளாட்சி அமைப்புகள் குப்பைகளையும், செப்டிக் டேங்க் கழிவுகளையும் கொட்டுகின்றன. சுற்று வட்டாரங்களில் தனியார் கழிவுநீர் லாரிகள் மூலம் அள்ளப்படும் செப்டிக் டேங்க் கழிவுகளையும் இங்குதான் கொட்டுகின்றனர். வண்டலூர் ஏரியை கழிவு கொட்டும் இடமாகவே மாற்றிவிட்டனர். இதனால் ஏரி நீர் மாசுபடுகிறது. இது மட்டுமின்றி, இரவு நேரங்களில் மண் திருட்டும் நடக்கிறது.

இதுபற்றி வண்டலூர் விவசாயி கள் சங்க தலைவர், இரணியப்பன், ‘தி இந்து’விடம் கூறியதாவது:

வண்டலூர் ஏரியில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டு விவசாயம் செய்தது ஒரு காலம். இப்போதைய நிலை வேறு. ஆக்கிரமிப்புகள் அதிகரித்துவிட்டதால், ஏரிக்கு நீர் வரத்து குறைந்துவிட்டது. இதனால் 110 ஏக்கராக இருந்த சாகுபடி நிலப்பரப்பு 50 ஏக்கராக குறைந்து விட்டது. 3 போகம் விளைந்த பூமி தற்போது 2 போகம் மட்டுமே பயிர் செய்யும் நிலைக்கு வந்துவிட்டது. இதே நிலை நீடித்தால், அதுவும் இல்லாமல் போய்விடும்.

மழைநீர் கால்வாய்களை சீரமைக்காததால், ஏரிக்கு போதிய நீர் வருவதில்லை. ஏரியை சீரமைக்கக் கோரி அரசியல் கட்சியினர், பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் பயனில்லை.

ஏரியை தூர் வாரி, நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, உபரிநீர் வெளியேறும் கலங் கல் பகுதியை உயர்த்த வேண்டும். இது இங்குள்ள விவசாயிகளின் 20 ஆண்டு கோரிக்கை.

இவ்வாறு அவர் கூறினார்.

வண்டலூரை சேர்ந்த சமூக ஆர்வலர் கோபால் கூறும்போது, ‘‘சுற்றுவட்டாரத்தில் உள்ள குடி யிருப்பு பகுதிகளுக்கு வண்டலூர் ஏரிதான் நீர் ஆதாரமாக உள்ளது. ஊராட்சி சார்பில் 10 கிணறுகள் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஏரியில் குப்பைகள், கோழிக் கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது. இரவில் கழிவுகளைக் கொட்டி எரிக்கின்றனர். இதனால் ஏரி கெட்டுப்போகிறது. நிலத்தடி நீர் மாசடையும் அபாயம் உள்ளது. ஏரிக்கு நீர் வரும் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியை முழுவதுமாக தூர் வார வேண்டும். குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்’’ என்றார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x