Last Updated : 01 Nov, 2016 12:42 PM

 

Published : 01 Nov 2016 12:42 PM
Last Updated : 01 Nov 2016 12:42 PM

தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய மனு தள்ளுபடி

பணப்பட்டுவாடா குற்றச்சாட்டுக்கு ஆளான அதிமுக, திமுக வேட்பாளர்கள் மீண்டும் போட்டியிடுவதால் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் இடைத்தேர்லை ஒத்திவைக்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.பிரகாஷ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் கடந்த மே மாதம் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. பணப்பட்டுவாடா காரணமாக அரவக்குறிச்சி, தஞ்சாவூர் பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இவ்விரு தொகுதிகளுக்கும், எம்எல்ஏ உயிரிழந்ததால் காலியான திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் நவ. 19-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ஒத்திவைப்புக்கு காரணமான அதிமுக, திமுக வேட்பாளர்களை மீண்டும் அக்கட்சிகள் சார்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீண்டும் போட்டியிட தடையில்லை என தேர்தல் ஆணையமும் அறிவித்துள்ளது. தேர்தல் ஒத்திவைப்புக்கு காரணமான வேட்பாளர்கள் மீண்டும் போட்டியிடுவதால் இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறாது. இதனால் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு முதலாம் அமர்வில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த மனுவை விசாரிக்க வலியுறுத்தவில்லை எனத் தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், "இந்த மனுவை தாக்கல் செய்தவர் வழக்கறிஞர், சாதாரண ஆளில்லை. வழக்கறிஞருக்கு எதை செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பது தெரிந்திருக்க வேண்டும். தேவையில்லாத காரணத்துக்காக வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கக் கூடாது. ஒருவர் மீது குற்றச்சாட்டு வைக்கும்போது அதற்கு ஆதாரம் இருக்க வேண்டும். இந்த மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை. இதுபோன்ற ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடியானது. இந்த மனுவை தாக்கல் செய்ததற்காக மனுதாரருக்கு அபராதம் விதிக்க வேண்டும்" என்றனர்.

நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த மனுதாரர், தனக்கு அபராதம் விதிக்க வேண்டாம் என்றார். இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x