Published : 25 Nov 2016 02:42 PM
Last Updated : 25 Nov 2016 02:42 PM

கூட்டுக் குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம்: காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மணல் குவாரிகளை மூட விவசாயிகள் வலியுறுத்தல்

திருச்சி மாவட்டத்தில் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வரைமுறையின்றி செயல்படும் மணல் குவாரிகளால் இந்த ஆறுகளில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்கள் வறண்டு போகும் நிலையைத் தடுக்க மணல் குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் தமிழக அரசை வலியுறுத்துகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் பாய்ந்தோடும் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள் தான் திருச்சி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரங்களாக உள்ளன.

குடிநீர் ஆதாரங்கள் இல்லாத, நிலத்தடி நீர் மட்டம் குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளிலிருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

மாயனூர் முதல் கல்லணை வரை…

கரூர் அருகே உள்ள மாயனூர் கதவணையிலிருந்து தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை வரையிலான பகுதியில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் இந்த திட்டத்துக்கென கிணறுகள் அமைக்கப்பட்டு, ராட்சத மோட்டார்கள் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சி குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

காவிரி ஆற்றில் பெருகமணி அருகிலுள்ள கிணறு மூலம் கரூர் காகித ஆலைக்கும், திருபாலத்துறையிலிருந்து சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கும், முத்தரசநல்லூரிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கும், கம்பரசம்பேட்டையிலிருந்து திருச்சி மாநகருக்கும், வேங்கூர் அருகிலிருந்து பெல் நிறுவனம் மற்றும் துப்பாக்கித் தொழிற்சாலை, கனரக உலோக ஊடுருவி தொழிற்சாலை உள்ளிட்ட ஏறத்தாழ 15 இடங்களில் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.

விதிமுறை மீறி அள்ளப்படும் மணல்…

இந்தநிலையில், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் ஏறத்தாழ 15-க்கும் மேற்பட்ட இடங்களில் மணல் குவாரிகள் அமைக்கப்பட்டு, அரசு விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை விவசாயிகள் முன் வைத்து வருகின்றனர். மணல் குவாரிகள் எப்படி செயல்பட வேண்டுமென உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியும், அதை மீறி, தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில் மணல் ஏற்றப்பட்டு, வெளி மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே தென்மேற்குப் பருவ மழையும், வடகிழக்குப் பருவ மழையும் பொய்த்துவிட்டன. கர்நாடகம் போதிய தண்ணீர் விடாததால் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதும் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது.

தண்ணீர் வற்றும் அபாயம்…

இந்தநிலையில், ஆறுகளில் தொடர்ந்து அதிக அளவில் மணல் அள்ளப்படுவதால் சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமன்றி, ஆறுகளில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர் திட்ட கிணறுகளிலும் தண்ணீர் வற்றிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கூட்டுக் குடிநீர் திட்டக் கிணறுகள் வற்றினால், குடிநீரின்றி 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பெரும் திண்டாட்டத்துக்குள்ளாவார்கள். இந்த பிரச்சினை வரும் கோடையில் மிகக் கடுமையாக இருக்கும் என்பதால், இந்த விஷயத்தில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்வது மிகவும் அவசியம் என்கின்றனர் விவசாயிகள்.

நிலத்தடி நீர் மட்டம் பாதிப்பு…

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க (இந்திய கம்யூனிஸ்ட் சார்பு) மாவட்டச் செயலாளர் அயிலை சிவ.சூரியன், ‘தி இந்து’விடம் கூறியது:

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் ஏற்கெனவே எந்த விதிமுறைக்கும் கட்டுப்படாமல் 70 முதல் 80 சதவீத மணல் அள்ளப்பட்டு விட்டன. ஆனாலும், தொடர்ந்து மணல் குவாரிகள் செயல்பட்டு வருவது நிலத்தடி நீர் மட்டத்தை வெகுவாகப் பாதித்துள்ளது.

50 கிலோ மீட்டர் தொலைவுக்குள் ஏறத்தாழ 15-க்கும் மேற்பட்ட குவாரிகள் செயல்படுவதால் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் திருச்சி மாவட்டம் மட்டுமன்றி சுற்றுவட்டாரப் பகுதிகளும் கடும் நெருக்கடியைச் சந்திக்கும் நிலை உள்ளது.

ஆறுகளிலிருந்து ராட்சத பொக்லைன் இயந்திரங்களை வெளியேற்றிவிட்டு, உள்ளூர் தேவைக்கு மட்டும் மணல் அள்ளிக்கொள்ள அனுமதிக்க வேண்டும். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கும் மனு அளித்துள்ளோம் என்றார்.

குடிநீருக்குப் பஞ்சம் ஏற்படும்…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்தநல்லூர் ஒன்றியச் செயலாளர் எம்.வினோத் மணி, ‘தி இந்து’விடம் கூறியது:

ஏற்கெனவே உள்ள மணல் குவாரிகளால் ஆறுகளில் பல இடங்களில் பெரும் பள்ளங்கள் ஏற்படுத்தப்பட்டதால் அதில் மூழ்கி பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்தநிலையில் புதிதாக சில மணல் குவாரிகளைத் திறக்கவும் அரசு திட்டமிட்டு வருவது வேதனையளிக்கிறது.

மணல் குவாரிகளால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. காவிரிக் கரையில் உள்ள கிராமங்களில் 20 அடி ஆழத்தில் கிடைத்த தண்ணீர் தற்போது 200 அடி ஆழத்துக்கும் கீழே சென்றுவிட்டது. இந்த நிலை தொடர்ந்தால் குடிநீருக்குப் பெரும் பஞ்சம் ஏற்படும்.

மணல் குவாரிகளால் ஆற்றின் இயல்பான நீரோட்டமும் தடுக்கப்படுகிறது. ஆற்றின் கரையோரங்களில் தண்ணீர் வருவதில்லை. மேலும், மணல் ஏற்றிச் செல்ல வரும் லாரிகளுக்காக ஆறுகளின் குறுக்கே பெரிய அணை போன்று சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பிரச்சினை தொடர்பாக விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மக்களைத் திரட்டி பெரிய அளவிலான போராட்டத்தை நடத்த திட்டமிட்டு வருகிறோம் என்றார்.

பாதிப்பு இருந்தால் நடவடிக்கை…

இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமியிடம் கேட்டபோது, “ஆறுகளில் அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர் திட்டக் கிணறுகளில் நீர்மட்டம் குறைவதால் மணல் குவாரிகளை மூட வேண்டுமென்ற கோரிக்கை, என் கவனத்துக்கு வந்தது.

இதுதொடர்பாக பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதார அமைப்பிடம் உரிய ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன். அவ்வாறு பாதிப்புகள் இருந்தால், அதற்கு தகுந்தாற்போல நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

நிலத்தடி நீர் மட்டம் குறைவதை சமாளிக்க பல்வேறு திட்டங்கள்...

திருச்சி மாவட்டத்தில் மட்டும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 45 இடங்களில் கண்காணிப்புக் கிணறுகள் அமைக்கப்பட்டு, ஆண்டுதோறும் பருவ மழைக்கு முன்பும், பருவ மழைக்குப் பின்பும் என இரு முறை நிலத்தடி நீர் மட்டம் கணக்கிடப்படுகிறது. இதில், சராசரியாக 1991-ல் தரைமட்டத்தில் இருந்து 12 மீட்டர் ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர் மட்டம் 2000-த்தில் 5.8 மீட்டரானது. 2005-ல் 9.1 மீட்டராகவும், 2010-ல் 10.5 மீட்டராகவும், 2014-ல் 13 மீட்டராகவும், தற்போது (2016-ல்) 12 மீட்டராகவும் உள்ளது. இதன்படி பார்க்கும்போது 1991-ம் ஆண்டின் நீர் மட்ட நிலை மீண்டும் தற்போது ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியபோது, “போதிய மழையின்மை, ஆறுகளில் நீர் வரத்து இல்லாதது ஆகியவற்றால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவது உண்மைதான். இதைச் சமாளிக்க மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் மட்டத்தைச் செறிவூட்டுதல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இப்போது பிரச்சினை இல்லை என்றாலும் கோடைக் காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அப்போது மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x