Published : 19 Oct 2022 06:50 PM
Last Updated : 19 Oct 2022 06:50 PM

சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.110 - அதிக விலை விற்றும் லாபம் கிடைக்காத தமிழக விவசாயிகள்

மதுரை; சின்ன வெங்காயம் விலை நிலையாக இல்லாமல் தினமும் ஒரு விலைக்கு விற்கிறது. இன்று தரத்திற்கு தகுந்தார்போல் கிலோ ரூ.80 முதல் ரூ.110 வரை விற்பனையானது.

அன்றாட சமைலுக்கு அத்தியாவசியமான சாம்பார் வெங்காயம் என்று கூறப்படும் சின்ன வெங்காயம் தென்னிந்தியாவில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. நெல்லை, சேலம், திண்டுக்கல், தேனி, பெரம்பலூர், கோவை, திருச்சி, நாமக்கல், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்பட தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டிற்கு சராசரியாக 4 லட்சம் டன்கள் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தியாவில் இருந்து சிங்க்பூர், இலங்கை, மலேசியா, இந்தோனேசியா உள்பட வெளி நாடுகளுக்கு சின்ன வெங்காயம் ஏற்றுமதி ஆகிறது. கடந்த சில ஆண்டிற்கு முன் பெரிய வெங்காயம் விலை கிலோ ரூ.100-ஐ கடந்தது. அதனால், வெளிநாடுகளில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்து விலை உயர்வை கட்டுப்படுத்தினர். தற்போது அதுபோல், சின்ன வெங்காயம் விலை கடந்த 2 வாரமாக விலை அதிகமாக விற்கிறது. மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் நேற்று கிலோ ரூ.80, ரூ.110 ஆகிய அடிப்படையில் விற்பனையானது. கீழ மாரட் வீதியில் உள்ள வெங்காயம் சந்தையில் கிலோ ரூ.75, ரூ.80, ரூ.90, ரூ.100 என்ற அளவில் விற்பனையாகிறது.

மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் காசிமாயன் கூறுகையில், ‘‘500 டன் வர வேண்டிய இடத்தில் தற்போது 200 டன் மட்டுமே வருகிறது. கர்நாடகாவின் மைசூர், தமிழகத்தில் தாராபுரம், ஆண்டிப்பட்டி, திண்டுக்கல், சேலம் பகுதிகளில் இருந்து மாட்டுத்தாவணிக்கு அதிகளவு சின்ன வெங்காயம் வரும். கடந்த சில மாதம் முன் வரை வெங்காயம் கிலோ ரூ.13, ரூ.15 வரைதான் விவசாயிகளுக்கு விலை கிடைத்தது. அதனால், விலை கிடைக்காமல் விவசாயிகள் தற்போது சின்ன வெங்காயம் சாகுபடியை குறைத்தது ஒரு புறமும், மழையும் இந்த விலை உயர்வுக்கு காரணம்’’ என்றார்.

கீழ மாரட் வீதி வெங்காயம் சந்தை வியாபாரி மலைகண்ணன் கூறுகையில், ‘‘வரத்து மிக குறைவாகிவிட்டது. அதுவும் தற்போது புது வெங்காயம்தான் அதிகம் வருகிறது. பழைய வெங்காயம் குறைவாகவே வருகிறது. சின்ன வெங்காயத்தை பொறுத்தவரையில் விலை அதிகமானால் அதனை வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்ய முடியாது. ஏனெனனில் தமிழகத்தில்தான் இந்த வெங்காயம் அதிகம் விளைவிக்கப்படுகிறது. குறிப்பாக திண்டுக்கல், தேனி பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. சமீப வாரமாக பெய்யும் மழையால் சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வு விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் பெரிய லாபம் இல்லை’’ என்றார்.

தமிழக அரசு சின்ன வெங்காயம் விலை உயர்வை கட்டுப்படுத்தி அதன் விளைச்சலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x