Published : 19 Oct 2022 06:20 AM
Last Updated : 19 Oct 2022 06:20 AM

சட்டப்பேரவையில் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானம்; பாஜக வெளிநடப்பு: இதர கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றம்

சென்னை: சட்டப்பேரவையில் இந்தி திணிப்புக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானம் பாஜக தவிர்த்த மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது. தீர்மானத்தை எதிர்த்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவையில் தீர்மானத்தை கொண்டுவந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 1938 முதல் இந்தி மொழித் திணிப்பு தொடர்கிறது. நாமும் எதிர்த்துக் கொண்டே இருக்கிறோம். இது வெறும் மொழிப் போராட்டம் மட்டுமல்ல; தமிழினத்தை, தமிழர் பண்பாட்டைக் காக்கும் போராட்டம். தொடரும்.

பெரும் மொழி மற்றும் பண்பாட்டுக்கு சொந்தக்காரர்களாகிய நம்மை மூன்றாம்தர குடிமக்களாக ஆக்கிவிடப் பார்க்கும் முயற்சிகளுக்கு நாம் எதிர்க்குரல் எழுப்ப வேண்டும். இந்திக்கு தாய்ப்பாலும், இந்தியாவின் மற்ற மொழிகளுக்கு கள்ளிப் பாலும் புகட்ட நினைப்பது, இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்குப் பேராபத்தை விளைவிக்கக்கூடியது என்பதால் இந்த தீர்மானத்தை முன்மொழிகிறேன். மத்திய அரசின் உள்துறை அமைச்சரும், அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழுத் தலைவருமான அமித் ஷா தலைமையிலான குழு குடியரசுத் தலைவரிடம் அளித்த அறிக்கை நாடு முழுவதும் விவாதத்துக்குள்ளாகியுள்ளது.

குறிப்பாக, தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் முன்னாள் பிரதமர் நேரு அளித்த வாக்குறுதிக்கு முரணாகவும் பரிந்துரைகளை அளித்துள்ளது. அதில், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் ஆங்கிலத்துக்குப் பதில் இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும். இந்தியை பொது மொழியாக்கும் வகையில், தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளிட்ட மத்திய அரசின் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் இந்தியே பயிற்று மொழியாக ஆக்கப்பட வேண்டும். இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கான, கட்டாயத் தாள்களில் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு, இந்தியை மட்டுமே முதன்மைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டவையும் அடங்கும்.

இவ்வாறு ஆங்கிலத்தை புறந்தள்ளி, அரசமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள இந்தி பேசாத மாநில மக்களின் 22 மொழிகளையும் ஒதுக்கிவைத்து, எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில், அரசமைப்பு சட்டத்தின் கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு எதிரான, நம் நாட்டின் பன்மொழிக் கட்டமைப்புக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அளிக்கப்பட்டுள்ள இந்த பரிந்துரைகளை ஏற்கக்கூடாது என்று பிரதமருக்கு கடந்த அக்.16-ம் தேதி தமிழக அரசால் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இந்த பேரவையில் அண்ணா நிறைவேற்றிய இருமொழிக் கொள்கை தீர்மானத்துக்கு எதிராக, பிரதமராக இருந்த நேரு அளித்த வாக்குறுதிக்கு மாற்றாக 1968 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் அலுவல் மொழி தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதன் அடிப்படையில் ஆங்கில மொழி பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிராக தற்போது நாடாளுமன்ற குழுவின் பரிந்துரைகள் அமைந்திருப்பது கவலைக்குரியதாக பேரவை கருதுகிறது. தமிழ் மொழியைக் காத்திட, ஆங்கிலம் அலுவல் மொழியாக தொடர்ந்திட, அரசமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அழியாமல் காத்திட, இந்தி பேசாத மாநில மக்களின் உரிமைகளை நிலைநாட்ட தமிழகம் மீண்டும் முன்னோடி மாநிலமாக நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு தலைவரால் கடந்த செப். 9-ம் தேதி குடியரசுத் தலைரிடம் அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அம்மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என மத்திய அரசை இந்த பேரவை வலியுறுத்துகிறது. உறுப்பினர்கள் அனைவரும் இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

முதல்வர் கொண்டுவந்த தீர்மானத்தை பேரவைத் தலைவர் மு.அப்பாவு ஆதரித்து பேசினார். இதேபோல், துரைமுருகன் (திமுக) எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), சிந்தனைச் செல்வன் (விசிக), வி.பி.நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), சதன் திருமலைக்குமார் (மதிமுக), எம்.எச்.ஜவாஹிருல்லா (மநேம), ஈஸ்வரன் (கொமதேக), தி.வேல்முருகன்(தவாக) ஆகியோர் வரவேற்றனர். பாஜக சார்பில் பேசிய நயினார் நாகேந்திரன், முதல்வர் கொண்டுவந்த தீர்மானத்தை ஏற்கவில்லை எனக் கூறி அவையில் இருந்து கட்சி உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்தார். இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் முதல்வர் கொண்டுவந்த தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x