Published : 18 Oct 2022 05:57 PM
Last Updated : 18 Oct 2022 05:57 PM

ரஜினிகாந்த் தனது தகவலின் ஆதாரத்தை உறுதி செய்திருக்க வேண்டும்: அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கை

தூத்துக்குடி மருத்துவமனையில் ரஜினிகாந்த் | கோப்புப் படம்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக தான் தெரிவித்த தகவலின் ஆதாரத்தை ரஜினிகாந்த் உறுதி செய்திருக்க வேண்டும் என்று நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2018-ம் ஆண்டு தூத்துக்குடி சென்றார். ஆறுதல் கூறிய பின் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், `ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானப் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளே காரணம்' என்று தெரிவித்திருந்தார்.

இதன்பிறகு சென்னை விமானநிலையத்தில் இதுகுறித்து பேசிய ரஜினிகாந்த், 'ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் புகுந்த சமூக விரோதிகள்மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறையினர் மீது சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தியதால்தான் வன்முறை வெடித்தது. தமிழ்நாட்டில் மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டால் தமிழ்நாடு சுடுகாடாகத்தான் மாறும்" என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இந்தக் கருத்து குறித்து நேரில் ஆஜர் ஆகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் சார்பில் ரஜினிக்கு சம்மன் அளிக்கப்பட்டது. இதற்கு எழுத்து மூலம் பதில் அளித்த ரஜினிகாந்த், "ஸ்டெர்லைட் ஆலை வன்முறை குறித்து எனக்கு எதுவும் தெரியாது. வன்முறையை ஏவிவிட்டது சமூக விரோதிகளாக இருக்கலாம் என்றுதான் நினைத்தேன். அப்படி எந்த சமூக விரோதியையும் எனக்கு தெரியாது" என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக ஆணையத்தின் அறிக்கையில், "சமூக விரோதிகளால்தான் கலவரம் உண்டானது என்று தான் கூறியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என ரஜினி கூறினார். ரஜினிகாந்த போன்ற பிரபலம் ஒரு கருத்தைத் தெரிவிக்கும்போது அவர் கூறும் தகவலின் ஆதாரத்தை உறுதி செய்திருக்க வேண்டும். பிரபலங்கள் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x