Published : 18 Oct 2022 03:05 PM
Last Updated : 18 Oct 2022 03:05 PM

‘அலுவல் மொழி குறித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது’ - தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

சென்னை: அலுவல் மொழி தொடர்பான பாராளுமன்றக் குழுத் தலைவரால் குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அம்மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழி நாடாளுமன்றக் குழு, குடியரசுத் தலைவரிடம் கடந்த வாரம் ஒர் அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் மற்றும் மத்திய கல்வி நிறுவனங்களில் கட்டாயம் இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியை இடம்பெறச் செய்ய வேண்டுமென்றும் பரிந்துரை செய்து உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த அறிக்கைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த பரிந்துரைகள் அனைத்தும் நமது அரசியலமைப்பின் கூட்டாட்சி கொள்கைகளுக்கு எதிரானவை என்றும், நாட்டின் பன்மொழி கட்டமைப்புக்கு தீங்கு விளைவிப்பவை என்றும் முதல்வர் விமர்சித்திருந்தார். மேலும், இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இந்நிலையில், இந்தப் பரிந்துரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "இந்திய ஒன்றியத்தில் இந்தி மொழியைத் திணிப்பதை ஒன்றிய அரசு தனது வழக்கமாகக் கொண்டுள்ளது. தமிழினத்தைத் தமிழர் பண்பாட்டைக் காக்கும் போராட்டமாகத் தொடர்ந்து கொண்டு இருக்கிறோம்.

அமித் ஷா குழுவின் பரிந்துரைகள், இந்தி பேசாத மாநில மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும். ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தி திணிப்புதான் என்று பாஜக நினைக்கிறது. ஒரே நாடு ஒரே மொழி என்ற பெயரில் பிற தேசிய மொழிகளை அழிக்க முயற்சி செய்கிறது பாஜக அரசு. ஆங்கிலத்தை மொத்தமாக அகற்ற பாஜக அரசு முயற்சி செய்கிறது. மேலாதிக்கம் செலுத்தும் மொழியாக இந்தியை மாற்றிக்கொண்டிருக்கின்றனர். ஆங்கிலத்தை அகற்றுவதற்கு பின்னால் இந்தியை அமர வைக்கும் எண்ணம்தான் உள்ளது" என்று முதல்வர் பேசினார். பின்னர் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இந்தி திணிப்புக்கு எதிராக பேரவையில் கொண்டுவரப்பட்ட தனித் தீர்மானம்: "ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சராகவும், அலுவல் மொழி தொடர்பான பாராளுமன்றக் குழுத் தலைவராகவும் உள்ள அமித் ஷா தலைமையிலான குழு சமீபத்தில் குடியரசுத் தலைவரிடம் அளித்துள்ள அறிக்கை இன்று நாடு முழுவதும் விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது. குறிப்பாக, தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநில மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் வகையிலும், இந்த நாட்டின் பிரதமராக இருந்த நேரு அளித்த வாக்குறுதிக்கு முரணாகவும் பல பரிந்துரைகளை அளித்துள்ளது.

அந்தப் பரிந்துரைகளில், ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி., ஐஐஎம்., எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் ஆங்கிலத்திற்கு பதில் இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்; இந்தியை பொது மொழியாக்கிடும் வகையில், தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளிட்ட ஒன்றிய அரசின் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் இந்தி மொழியே பயிற்று மொழியாக ஆக்கப்பட வேண்டும்; இளைஞர்களின் வேலைவாய்ப்பில், கட்டாயத் தாள்களில் ஆங்கிலத்தை நீக்கி விட்டு, இந்தியை மட்டுமே முதன்மைப்படுத்த வேண்டும்;என்பன உள்ளிட்டவையும் அடங்கும்.

இப்படி ஆங்கிலத்தைப் புறந்தள்ளி, அரசமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள இந்தி பேசாத மாநில மக்களின் 22 மாநில மொழிகளையும் அடியோடு ஒதுக்கி வைத்து, எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில், அரசமைப்பு சட்டத்தின் கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு எதிரான, நம் நாட்டின் பன்மொழிக் கட்டமைப்பிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அளிக்கப்பட்டுள்ள இந்தப் பரிந்துரைகளை ஏற்கக் கூடாது, நடைமுறைபடுத்தக் கூடாது என பிரதமருக்கு 16-10-2022 அன்று தமிழக அரசால் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இந்த மாபெரும் அவையில் பேரறிஞர் அண்ணா கொண்டு வந்து நிறைவேற்றிய இரு மொழிக் கொள்கை தீர்மானத்திற்கு எதிராக, பிரதமராக இருந்த நேரு இந்தி பேசாத மாநிலங்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு மாறாக, 1968 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் அலுவல் மொழி தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதன் அடிப்படையில், ஆங்கில மொழி பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளதற்கும் எதிராக, இப்போது அளிக்கப்பட்டுள்ள பாராளுமன்றக் குழுவின் பரிந்துரைகள் அமைந்திருப்பது கவலைக்குரியதாக இப்பேரவை கருதுகிறது.

அன்னைத் தமிழ்மொழியைக் காத்திட, ஆங்கிலம் அலுவல் மொழியாக தொடர்ந்திட, ஏன் அரசமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அழியாது காத்திட, இந்தி பேசாத மாநில மக்களின் உரிமைகளை நிலைநாட்டிட தமிழ்நாடு மீண்டும் முன்னோடி மாநிலமாக நின்றிடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

அலுவல் மொழி தொடர்பான பாராளுமன்றக் குழுத் தலைவர் அவர்களால் கடந்த 9-9-2022 அன்று குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அம்மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என ஒன்றிய அரசினை இந்தப் பேரவை வலியுறுத்துகிறது."

பேரவையில் இருமொழிக் கொள்கையை நிறைவேற்றிய பேரறிஞர் அண்ணாவின் அதே உணர்வுடன், இந்தத் தீர்மானத்தைத் தற்போது முன்மொழிந்துள்ளேன். உறுப்பினர்கள் அனைவரும் இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இதனைத் தொடர்ந்து அவை முன்னவர் துரைமுருகன், தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளர் வேல்முருகன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா, மதிமுக சதன் திருமலைக் குமார், சிபிஐ ராமச்சந்திரன், சிபிஎம் நாகை மாலி,விசிக சிந்தனைச் செல்வன், பாமக ஜி.கே.மணி, காங்கிரஸ் செல்வபெருந்தகை, ஓபிஎஸ் ஆகியோர் ஆதரித்து பேசினர். இதனைத் தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாஜக இந்தி தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x