Published : 18 Oct 2022 11:51 AM
Last Updated : 18 Oct 2022 11:51 AM

ஜெயலலிதா மரணம் | சசிகலா உட்பட 4 பேர் மீது விசாரணைக்கு உத்தரவிட ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை

கோப்புப் படம்

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவில், சசிகலா உள்ளிட்ட 4 பேர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து, இவர்கள் மீதான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தின் அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையின் பரிந்துரைகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள்:

  • 2016 செப்டம்பர் 22-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகவே ஜெயலலிதாவுக்கு அதிக காய்ச்சல் இருந்துள்ளது. மருத்துவர் சிவக்குமார் பரிந்துரையின்படி பாராசிட்டமால் எடுத்துக் கொண்டுள்ளார்.
  • போயஸ் கார்டனில் மயங்கி விழுந்த ஜெயலலிதாவை தாங்கிப் பிடித்த சசிகலாவும், பணியாளர்களும் தாமதிக்காமல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
  • சுயநினைவின்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
  • ஜெயலலிதாவுக்கு கட்டுப்பாடற்ற நீரழிவு நோய், மாறுபட்ட ரத்த அழுத்தம், தைராய்டு, உடல் பருமன், எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி போன்ற உபாதைகள் இருந்துள்ளன.
  • 2016 செப்டம்பர் 27-ஆம் தேதி காவிரி நதிநீர்க் கூட்டம் நடைபெற்றபோது புகைப்படம் எடுக்க ஜெயலலிதா அனுமதித்த போதும், ராமலிங்கம் IAS அதனை தடுத்துள்ளார். அன்று இரவே ஜெயலலிதாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
  • 2016 அக்டோபார் 11-ம் தேதி அமெரிக்க மருத்துவர் ஸ்டூவார்ட் ரஸ்ஸலால் பரிந்துரைக்கப்பட்ட ஆஞ்சியோ சிகிச்சை ஜெயலலிதாவுக்கு செய்யப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.
  • ஆஞ்சியோகிராம் செய்வதற்கு அடிப்படைத் தேவையான ரத்தத்தில் கிரியேடினின் அளவு சரியாக இருந்தும், ஏன் ஒத்திவைக்கப்பட்டது என்ற காரணத்தை விளக்கவில்லை.
  • ஆஞ்சியோவை ஒத்திவைக்க லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீகே தொலைபேசியில் பரிந்துரைத்ததாகவும், மருத்துவர் பாபு ஆபிரகாம் முரண்பட்ட தகவலை ஆணையத்தில் பதிவு செய்துள்ளார்.
  • இந்த முடிவை மாற்றுவதற்கான உரிமை அமெரிக்கா மருத்துவரைத் தவிர, ஆர்.1-ன்னும் (சசிகலா ) பெற்று இருந்தார்.
  • நெருக்கடியின் போது முடிவு எடுக்கும் திறன் பெற்றவர்கள், கார்டியோ அறுவை சிகிச்சையை தொடராமல் தவறு இழைத்து இருக்கலாம்.
  • இது அமெரிக்கா மருத்துவரின் கருத்துப்படி மறைந்த முதல்வரின் உயிரை காப்பாற்றும் விளைவை ஏற்படுத்தி இருக்கலாம்.
  • சசிகலா வெளியேற்றப்பட்டு, 2012-ல் மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்ததிலிருந்து அவர்கள் இருவருக்கும் இடையே சுமுக உறவு இல்லை.
  • சசிகலாவைக் குற்றம்சாட்டுவதைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது.
  • ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் 5 ஆம் தேதி இரவு 11.30 என மருத்துவமனை அறிவித்தது. ஆனால் அவர் இறந்த நேரம் 2016 டிசம்பர் 4ஆம் தேதி மதியம் 3 மணி முதல் 3.50-க்குள் இருக்கும்.
  • 2016 டிசம்பர் 4 ஆம் தேதி மதியம் 3 மணி முதல் 3.30 மணிக்குள் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவை ஜெயலலிதாவின் மருமகன் ஜெ தீபக் அனுசரித்துள்ளார்.
  • வி.கே.சசிகலா, சிவக்குமார், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து, அவர்கள் 4 பேரையும் விசாரணைக்கு உட்படுத்த உத்தரவிட வேண்டும்.
  • மருத்துவர் பாபு ஆபிரகாம் ஆஞ்சியோ தொடர்பாகவும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை முறைகள் தொடர்பாகவும் முரண்பட்ட தகவலை பதிவு செய்திருப்பதால் அவர் விசாரிக்கப்பட வேண்டும்
  • அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் பல்வேறு நாட்களில் அரசுக்கு கடிதம் வாயிலாக தெரிவிக்கவில்லை என்பதை குற்றமாக கருதி விசாரிக்கப்பட வேண்டும்
  • ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என செய்தியாளர் சந்திப்பில் பொய்யான தகவலை தெரிவித்த அப்பல்லோ குழுமத் தலைவர் பிரதாப் சி ரெட்டி விசாரிக்கப்பட வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x