Published : 17 Oct 2022 06:03 AM
Last Updated : 17 Oct 2022 06:03 AM

நாட்டில் இந்தியைவிட மற்ற மொழி பேசும் மக்களே அதிகம்; இந்தி திணிப்பை கைவிட்டு ஒற்றுமையை வளர்க்க வேண்டும்: மோடிக்கு ஸ்டாலின் கடிதம் 

சென்னை: இந்தியைத் திணிக்கும் முயற்சிகளைக் கைவிட்டு, ஒற்றுமையை வளர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு பிரதமரை, முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழி நாடாளுமன்றக் குழு, குடியரசுத் தலைவரிடம் ஒர் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில், ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் மற்றும் மத்திய கல்வி நிறுவனங்களில் கட்டாயம் இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், ஆங்கிலத்துக்குப்பதிலாக இந்தியை இடம்பெறச் செய்ய வேண்டுமென்றும் பரிந்துரைத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. அதேபோல, கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளிட்ட வற்றிலும் இந்தி மொழியேபயிற்று மொழியாக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆள்சேர்ப்புக்கான தேர்வில், கட்டாயத் தாள்களில்ஆங்கிலத்தை நீக்கிவிட்டு, இந்தியை முதன்மைப்படுத்தும் வகையில் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நமது அரசியலமைப்பின் கூட்டாட் சிக் கொள்கைகளுக்கு எதிரானவை. நாட்டின் பன்மொழிக்கட்டமைப்புக்கு தீங்கு விளைவிப்பதாக இவை அமைந்து விடும். அரசமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில், தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் சம உரிமையைக் கொண்டவை. இந்தியாவில், இந்தி பேசும் மக்களைவிட, பிற மொழிகள் பேசும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது இந்தி ஆதிக்கத்திலிருந்து நமது வளமான மற்றும் தனித்துவமான மொழிகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன்தான், ஆங்கிலம் இணைப்பு மொழியாக அங்கீகரிக்கப்பட்டு, மத்திய அரசின் அலுவல் மொழியாக நீடிக்கிறது. அனைத்து மாநில மொழிகளின் உரிமைகள், பாதுகாப்புக்காக தொடர்ந்து குரல் கொடுக்கிறோம்.

மக்களின் உணர்வுகளை மதித்து, முன்னாள் பிரதமர் நேரு, ‘இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை, ஆங்கிலமும் தொடர்ந்து அலுவல் மொழிகளில் ஒன்றாக இருக்கும்’ என்று உறுதியளித்தார். இந்த நிலைப்பாடு நீடிக்க வேண்டும். இந்தியைத் திணிப்பதற்காக சமீபத்தில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் நாட்டை பிளவுபடுத்தும். மேலும், இந்தி பேசாத மக்களை இரண்டாந்தரக் குடிமக்கள்போல பிரித்தாளும் தன்மைகொண்டவை. இது தமிழகத்துக்கு மட்டுமல்ல, தாய்மொழியைப் போற்றும் எந்த மாநிலத்துக்கும் ஏற்புடை யதாக இருக்காது. அனைத்து மொழிகளும் மத்திய அரசின் அலுவல் மொழி என்ற நிலையை எட்ட வேண்டும்.

‘ஒரே நாடு' என்ற பெயரில், இந்தி மொழியை ஊக்குவிப்பதற்காக தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்வது, பல்வேறு மொழிகள், பண்பாடுகளைக் கொண்ட இந்திய மக்களின் சகோதரத்துவத் தைச் சிதைப்பதுடன், ஒருமைப்பாட்டுக்கும் ஊறு விளைவிக்கும் என அஞ்சுகிறேன். தமிழ் உட்பட அனைத்து மொழிகளையும் அலுவல் மொழியாக 8-வது அட்டவ ணையில் சேர்ப்பதும், அனைத்து மொழிகளையும் ஊக்குவிப்பதும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமவாய்ப்பை வழங்குவதும் தான் மத்திய அரசின் அணுகுமுறையாக இருக்க வேண்டும். பல்வேறு வழிகளில் இந்தியைத் திணிக்கும் வகையில் அமைந்துள்ள அலுவல்மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகளை முன்னெடுத்துச் செல்லாமல், பெருமைவாய்ந்த இந்திய ஒற்றுமைச் சுடரைத் தொடர்ந்து ஒளிரச் செய்ய வேண்டும். இவ்வாறு கடிதத்தில் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x