

புதுச்சேரி: மாயமான ரூ.8.84 கோடி சம்பள பணத்தை புதுச்சேரி அரசு பல் மருத்துவக் கல்லூரியிடம் தனியார் வங்கி நிர்வாகம் ஒப்படைக்க துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 3 மாநிலங்களுக்கு புதுச்சேரி போலீஸார் விரைந்துள்ளனர்.
புதுவை கோரிமேட்டில் மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் வங்கிக் கணக்கு புதுச்சேரியில் தனியார் வங்கி ஒன்றில் உள்ளது. கூட்டுறவு சங்கம் மூலம் இயங்கும் கல்லுாரியில் பணியாற்றும் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்கவில்லை. தீபாவளியை முன்னிட்டு 3 மாத சம்பளம் வழங்க ஒப்புதல் பெறப்பட்டது.
இதற்காக, ரூ.8 கோடி பணம், அரசு கருவூலம் மூலம் பல் மருத்துவக் கல்லூரி வங்கிக் கணக்குக்கு 3-ம் தேதி இரவு அனுப்பப்பட்டது. ஏற்கெனவே இருந்த தொகையுடன் சேர்த்து ரூ.8.84 கோடி பணம் கல்லூரி வங்கிக் கணக்கில் இருந்தது. இந்த மொத்த பணமும் இரவு 9 மணிக்கு திடீரென மாயமானது.
ஊழியர்கள் வங்கிக் கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படாததால் தனியார் வங்கியிடம் விசாரித்த கல்லுாரி டீன் கென்னடி பாபு, அன்றிரவே கோரிமேடு சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்தார். உடனடியாக செயல்பட்ட சைபர் க்ரைம் போலீஸார், வங்கியின் தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், தனியார் வங்கியின் மண்டல மேலாளர் நித்தியானந்தம், கிளை மேலாளர் அசோக்குமார் ஆகியோரை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அழைத்து நேற்று முன்தினம் விசாரித்தார். அப்போது, வங்கியில் போதிய பாதுகாப்பு வசதி இல்லை என்பதும், அரசு ஊழியர்களுக்கான பணம் வந்த சிறிது நேரத்தில் அதை மர்ம நபர்கள் எடுத்ததும் தெரியவந்தது. இதனால் அந்தப் பணத்துக்கு வங்கி நிர்வாகம்தான் பொறுப்பேற்க வேண்டும். உடனடியாக சம்பள பணத்தை கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டார்.
வங்கி நிர்வாகமும் பணத்தை வங்கியின் மூலம் ஒப்படைப்பதாக உறுதி அளித்தனர். சைபர் க்ரைம் போலீஸார் பணத்தை மீட்டவுடன் வங்கி நிர்வாகத்திடம் ஒப்படைக்க ஆளுநர் அறிவுறுத்தினார்.
இதுதொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் கூறும்போது, “வங்கியின் நோடல் அதிகாரி உதவியுடன் மாயமான ரூ.8.84 கோடியில் ரூ.40 லட்சம் முடக்கம் செய்யப்பட்டது. இதேபோல, சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் குறிப்பிட்ட தனியார் வங்கியின் கணக்குகளில் இருந்து ரூ.20 கோடி வரை மர்ம நபர்களால் மோசடியாக பணம் எடுக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.
கல்லூரி நிர்வாக பிரிவில் செயல்பட்டு வந்த கணக்கு சார்ந்த 2 அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. மாயமான ரூ.8.84 கோடி, சென்னை வங்கிக் கணக்கு, கேரளம் மற்றும் மேற்கு வங்கத்தில் சில வங்கிக் கணக்குக்கு சென்றிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனால் கொல்கத்தா, சென்னை, திருவனந்தபுரத்துக்கு போலீஸார் சென்றுள்ளனர். அதேபோல், இத்தொகையில் இருந்து மாற்றப்பட்ட ரூ. 1.5 கோடி தொகை வங்கிக் கணக்குகளில் இருந்து எடுக்க முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.
இதுபற்றி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்டபோது, “பல் மருத்துவக் கல்லூரியில் ரூ. 8 கோடி எடுத்துள்ள புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க சைபர் க்ரைமுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அரசு பணம் கஜானாவுக்கு கொண்டு வரப்படும். விசாரணை நடந்து வருகிறது” என்றார்.