Published : 10 Nov 2016 09:59 AM
Last Updated : 10 Nov 2016 09:59 AM

தேர்தல் முடிவு மாறுதலை ஏற்படுத்தும்: பிரேமலதா நம்பிக்கை

தமிழகத்தில் நடைபெற உள்ள 3 தொகுதிகளின் தேர்தல் முடிவு நல்ல மாறுதலை ஏற்படுத்தும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் வெ.அப்துல்லா சேட்டுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வரும் அவர், தஞ்சையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. நாட்டில் லஞ்சம், ஊழல், கருப்பு பணம் அதிகமாக உள்ள நிலையில், இந்த நடவடிக்கை நாட்டை மிகப் பெரிய வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுசெல்லும். இதேபோல, வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தையும் மீட்க வேண்டும்.

தமிழகத்தில் 3 தொகுதி தேர்தலில் வாக்காளர்களுக்கு அதிமுக ரூ.1,000, திமுக ரூ.500 தரும் நிலையில், இந்த அறிவிப்பு தேர்தல் முடிவில் நல்ல மாறுதலை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம். மோடியின் அறிவிப்பை இந்த 2 கட்சிகளும் வரவேற்காததில் இருந்தே, இவர்களிடம் கருப்பு பணம் அதிகம் உள்ளதை அறியலாம்.

தமிழகத்தை 50 ஆண்டுகளாக இந்த 2 கட்சிகளும் மாறி மாறி ஆட்சிசெய்து மோசமான நிலைக்குக் கொண்டுசென்று விட்டன. காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு, மீனவர், கச்சத்தீவு பிரச்சினைகளுக்குக் காரணமே இந்தக் கட்சிகள்தான்.

தமிழகத்தில் மறைமுகமாக கவர்னர் ஆட்சி நடக்கிறது. முன்பு, மத்திய அரசின் திட்டங்களை எதிர்த்து வந்த தமிழக அரசு, இப்போது அனைத்தையும் செயல்படுத்து வதில் இருந்தே இதனைப் புரிந்துகொள்ளலாம். மக்கள் இதற்கு தேர்தலில் பதிலடி தர வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x