Published : 15 Oct 2022 07:03 AM
Last Updated : 15 Oct 2022 07:03 AM

பெரியாறு தண்ணீரை எடுப்பதில் விதிமீறலா? - பி.ஆர்.பாண்டியன் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மோதல்

பி.ஆர்.பாண்டியன், நாட்டுத்துரை, இளங்கோவன், எஸ்.பி.இளங்கோவன்.

ஒய்.ஆண்டனிசெல்வராஜ்/ கணேஷ்ராஜ்

மதுரை: பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் 14,707 ஏக்கரில் இருபோக சாகுபடி நடைபெறுகிறது. தேனி மாவட்டம் சின்னமனூரின் கிழக்குப் பகுதி மேட்டுப்பாங்கான பகுதி என்பதால் ஆறு, கால்வாய் மூலம் பாசன வசதி பெற முடியாத நிலை இருந்தது. இதனால் முத்துலாபுரம், வெள்ளையம்மாள்புரம், ஓடைப்பட்டி, அப்பிபட்டி, எரசக்கநாயக்கனூர், கன்னிசேர்வைபட்டி, சீப்பாலக்கோட்டை, சுக்காங்கல்பட்டி உள்ளிட்ட கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் கடந்த காலங்களில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. பின்னர் விவசாயிகள் ஒருங்கிணைந்து குழாய்கள் பதித்து வைகை அணைக்குச் செல்லும் முல்லை பெரியாறு நீரை 20 கி.மீ. தூரத்துக்கு குழாய்களில் கொண்டு சென்று மானாவாரி நிலங்களை வளமாக மாற்றினர்.

இதற்காக முல்லை பெரியாறில் இருந்து 200 மீட்டர் தொலைவில் பட்டா நிலங்களில் விவசாயிகள் குழாய்கள் அமைத்தனர். இந்நிலையில், முத்துலாபுரம் பிரிவில் உள்ளபாசன நீர் செல்லும் 37 குழாய்களை நெடுஞ்சாலைத் துறையினர் செப்.19-ம் தேதி அகற்றினர். இதனால் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் கருகின. இந்த நடவடிக்கையின் பின்னணியில் நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது: பெரியாறு மூலம் ஒரு பகுதிமட்டுமே நேரடிப் பாசன வசதிபெறுகிறது. மற்றொரு மேட்டுப்பகுதிக்கு ஆற்றில் இருந்து நேரடியாக இல்லாமல் சிறிது தொலைவில் கிணறு அமைத்து அதில் ஊறக்கூடிய தண்ணீரை கொண்டு சென்று சாகுபடி செய்யப்படுகிறது. அந்தப் பாசன பகுதியில் நிதி அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு பூர்வீகச் சொத்து உள்ளது. அவர், பொறுப்புக்கு வந்த பிறகு மின் இணைப்புகளைத் துண்டிக்கச் செய்தார். பின்னர் நாங்கள் போராட்டம் நடத்தியதால், மின் இணைப்பை துண்டிப்பது தடுத்து நிறுத்தப்பட்டது. ஒரு மாதத்துக்கு முன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலையீட்டில் தேனி மாவட்ட ஆட்சியரை வைத்து 40 இடங்களில் விவசாயிகள் பதித்திருந்த குழாய்களை மீண்டும் உடைத்து எடுத்தனர்.

நிரந்தரமாகவே தண்ணீர் கொண்டு செல்வதை நிறுத்த வேண்டும் என்பதற்காக செப். 4-ம் தேதி சென்னைக்கு விவசாயிகளை வைத்து நிதி அமைச்சர் கூட்டம் நடத்தினார். இந்த விவசாயிகள் அமைச்சரால் அழைத்து வரப்பட்டவர்கள். இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறையினர் யாரும் பங்கேற்கவில்லை. விவசாயிகள் தண்ணீரை பம்ப் செய்யக்கூடாது என்று தீர்மானம் போட்டு ஒரு தவறான கோப்பை அமைச்சர் தயார்செய்து முதல்வருக்கு அனுப்பிஇருக்கிறார். பாதிக்கப்பட்ட விவசாயிகளை அழைத்து கருத்துக்கேட்கவே இல்லை.அமைச்சரவைமுடிவு, அரசியலமைப்பு, கூட்டாட்சிக்கு எதிராகச் செயல்படலாமா? இவ்வாறு அவர் தெரிவித்தார். ஓடைப்பட்டி விவசாயி நாட்டுத்துரை, தென்பழநி விவசாயி இளங்கோவன் ஆகியோர் கூறும்போது, “இத்திட்டத்துக்காக பல லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளோம். பல மாதங்கள் திட்டமிட்டு பெரும் சிரமத்துக்கு இடையே பாசன நீரைக்கொண்டு வந்தோம். தண்ணீரை திருடவும் இல்லை. முறையாகப் பாசன நீர் பெறும் எங்களது குழாய்களை அகற்றியது ஏன் என்று புரியவில்லை” என்றனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மதுரை மாவட்டச் செயலாளர் எஸ்.பி.இளங்கோவன் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்காகவே வைகை அணை கட்டப்பட்டது. ஆனால், தேனி மாவட்டத்தில் விவசாயிகள் சிலர் சட்டவிரோதமாக குழாய்கள் மூலம் ஆற்றில் நேரடியாக தண்ணீர் எடுப்பதால் மதுரை, ராமநாதபுரம் மாவட்டவிவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். மழைக் காலத்தில் தண்ணீர் எடுப்பதில் பாதிப்பு இல்லை. மழையில்லாதபோது தண்ணீர்உரிமை பெற்றுள்ள மற்ற மாவட்டவிவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். அதனால், மேட்டுப்பகுதி விவசாயிகளும் பாசன வசதி பெறுவதற்கு தமிழக அரசு மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றார். வேளாண் துறை அதிகாரி ஒருவர்கூறியதாவது: குழாய் மூலம் தண்ணீரை எடுக்கும் செயல்களில் வசதிபடைத்த, அரசியல் செல்வாக்குள்ள விவசாயிகள்தான் ஈடுபடுகிறார்கள். இதற்கு நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை என்பதேஉண்மை. வைகை அணை உள்ளபகுதி பாறையாக அமைந்துள்ளது. உறை கிணறு அமைத்தாலும் தண்ணீர் வர வாய்ப்பில்லை என்பதால் பாசன நீரை குழாய்கள் மூலம் நேரடியாக எடுக்கின்றனர் என்றார். நிதி அமைச்சர், விவசாயிகளுக்கு இடையேயான இந்த விவகாரம், பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x