Published : 08 Oct 2022 12:47 PM
Last Updated : 08 Oct 2022 12:47 PM

'அதிகாரத்தை வெளிப்படுத்தும் ஆணவ மனப்பான்மை' - திமுக அமைச்சர்கள் மீது சீமான் விமர்சனம்

கோப்புப் படம் | நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

சென்னை: திமுக அரசின் அமைச்சர்கள் பொதுமக்களையும், அரசுப் பணியாளர்களையும் அவமதிக்கும் வகையில் தொடர்ந்து நடந்துகொள்வது அதிகாரத் திமிரினை வெளிப்படுத்தும் ஆணவ மனப்பான்மை என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வேலூர் மாவட்டம், பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகள் மருத்துவர்கள், மற்றும் மருத்துவக் கருவிகள் பற்றாக்குறையைத் தீர்க்க பலமுறை கோரியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தமிழ்நாடு அரசு, அங்குப் பணியாற்றி வந்த அரசு மருத்துவர்கள் மீது பழி சுமத்தி, அவர்களைப் பணியிடமாற்றம் செய்து தண்டிக்கும் எதேச்சதிகார போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. திமுக அரசின் அமைச்சர்கள் பொதுமக்களையும், அரசுப் பணியாளர்களையும் அவமதிக்கும் வகையில் தொடர்ந்து நடந்துகொள்வது அதிகாரத் திமிரினை வெளிப்படுத்தும் ஆணவ மனப்பான்மையேயாகும்.

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையைப் போக்க திமுக அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? கடந்த நான்கு மாதங்களாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பாம்புக்கடி உள்ளிட்ட அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகளின் பற்றாக்குறை அதிகளவில் உள்ளதாக அரசு மருத்துவர்களே குற்றஞ்சுமத்தும் நிலையில் அவற்றை திமுக அரசு சரி செய்யாதது ஏன்?

பெரும்பாலான கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் இடிந்துவிழும் நிலையிலுள்ள பழைய கட்டிடங்களில் இயங்கும் நிலையில், அவற்றை புதிய கட்டிடங்களாக மாற்ற தமிழ்நாடு அரசு எந்த முயற்சியும் ஏன் எடுக்கவில்லை? திமுக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அரசு மருத்துவமனைகளின் நிர்வாக வசதிக்கு போதிய நிதியை ஏன் ஒதுக்கப்படவில்லை?

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது வாக்குறுதி அளித்தபடி, அரசு மருத்துவர்களுக்குப் பத்தாண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஊதிய உயர்வு இதுவரை ஏன் வழங்கவில்லை? அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் தற்காலிக செவிலியர்களை ஏன் பணி நிரந்தரம் செய்யவில்லை? என்ற இந்த கேள்விகளுக்கெல்லாம் திமுக அரசு என்ன பதில் கூறப்போகிறது?

எனவே, அரசு மருத்துவமனைகளின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தாமல், மருத்துவர், செவிலியர் பற்றாக்குறையைச் சரிசெய்யாமல், அவர்களது குறைகளையும் கோரிக்கைகளையும் தீர்க்காமல், வெற்று விளம்பர அரசியலுக்காக திடீரென அமைச்சர்கள் ஆய்வு என்ற பெயரில் அரசு மருத்துவர்களைத் தரக்குறைவாகப் பேசுவதும், பணியிட மாற்றம் செய்வதும் ஏற்புடையதல்ல. அரசு தன் மீதான தவறுகளை மறைப்பதற்காக அரசு மருத்துவர்களையும், செவிலியர்களையும் பலிகடா ஆக்குவது எவ்வகையில் நியாயமாகும்?

ஆகவே, வேலூர் மாவட்டம், பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மீதான பணியிடமாற்ற நடவடிக்கையை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன். மேலும், தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு மருத்துவமனைகளின் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தி, மருத்துவர் மற்றும் செவிலியர் பற்றாக்குறையைச் சரிசெய்ய வேண்டுமெனவும், அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தரவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x