Last Updated : 08 Oct, 2022 06:07 AM

 

Published : 08 Oct 2022 06:07 AM
Last Updated : 08 Oct 2022 06:07 AM

2-ஆம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டம் நிறைவடைந்த பிறகு 3 வழித்தடங்களில் ஓட்டுநர் இல்லாத 138 ரயில்கள் இயக்க திட்டம்

சென்னை: சென்னையில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் நிறைவடைந்த பிறகு,3 வழித்தடங்களில் 3 பெட்டிகளைக் கொண்ட ஓட்டுநர் இல்லாத 138 மெட்ரோ ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வழித்தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களைத் தயாரிக்க ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையும், பரங்கிமலை - சென்னை சென்ட்ரல் வரையும் 2 வழித்தடங்களில் 55 கி.மீ. தொலைவில் 52 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில், 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை 3-வது வழித்தடத்தில் 45.8 கி.மீ. தொலைவுக்கும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் வரை 4-வது வழித்தடத்தில் 26.1கி.மீ. தொலைவுக்கும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை 5-வது வழித்தடத்தில் 47 கி.மீ. தொலைவுக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இந்தப் பணிகளை 2025-ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

26 ரயில்களுக்கு ஒப்பந்தம்: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் நிறைவடைந்த பிறகு, 3 வழித்தடங்களில் ஓட்டுநர் இல்லாத 138 மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் நிறைவடைந்த பிறகு, மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை 3-வது வழித்தடம் மற்றும் மாதவரம் - கோயம்பேடு வரை 5-வது வழித்தடத்தில் 70 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன. கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை 4-வது வழித்தடத்தில் 26 மெட்ரோ ரயில்களும், கோயம்பேடு முதல் எல்காட் (சோழிங்கநல்லூர் முன்பாக வரும் மெட்ரோநிலையம்) வரை 5-வது வழித்தடத்தில் 42 மெட்ரோ ரயில்களும் என்று மொத்தம் 138 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன. ஒவ்வொரு ரயிலும் 3 பெட்டிகளைக் கொண்டிருக்கும்.

இதில், முதல்கட்டமாக, ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளைக் கொண்ட 26 மெட்ரோ ரயில்களை தயாரிக்க அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு கடந்தஜூலையில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டு முதல்மெட்ரோ ரயிலை தயாரித்து ஒப்படைப்பார்கள். மற்ற வழித்தடங்களில் இயக்கப்படவுள்ள ரயில்களுக்கான ஒப்பந்தம் அடுத்தடுத்த கட்டங்களில் வழங்கப்படும். இந்த 3 வழித்தடங்களிலும் பணிகள் முடிந்தபிறகு, ஒட்டுமொத்தமாக 173 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை இருக்கும். தினசரி 25 லட்சம் பயணிகளை ஏற்றிச் செல்லும் விதமாக அமையும். இது பொது போக்குவரத்து பயணிகளில் 25 சதவீத அளவில் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

சென்னை மெட்ரோ ரயில்நிறுவன முன்னாள் திட்ட இயக்குநரும், நாக்பூர் மெட்ரோ ரயில் திட்ட பொது ஆலோசகருமான ஆர்.ராமநாதன் கூறும்போது, "டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில், ஓட்டுநர் இல்லாத ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதுபோல, சென்னை மெட்ரோரயில் நிறுவனத்தில் ஓட்டுநர் இல்லாத ரயில்களை இயக்க வேண்டும். மெட்ரோ ரயில்கள் எல்லாம்தானியங்கி முறையில் இயங்கும்விதமாகவே அமைக்கப்பட்டுள்ளன. எனவே, ஓட்டுநர் இல்லாதரயில்களை தைரியமாக இயக்க வேண்டும்" என்றார்.

ஒரு ரயில் பெட்டி விலை ரூ.10 முதல் 12 கோடி

சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட பல நாடுகளில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்தியாவில் டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில், ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலில், ஓட்டுநருக்கான தனி அறை இருக்காது. கட்டுப்பாட்டு அறையில் இருந்து தானியங்கி முறையில் இயக்கப்படும். இதற்காக, புதிய மென்பொருள் பயன்படுத்தப்படும். ஒரு மெட்ரோ ரயில் பெட்டியின் விலை ரூ.10 முதல் 12 கோடியாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x