Published : 06 Oct 2022 07:38 AM
Last Updated : 06 Oct 2022 07:38 AM

அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பில் இடையூறு; சேனல்களை பார்க்க முடியாமல் தவிப்பு: இருட்டடிப்பு நடக்கிறதா என்று பொதுமக்கள் கேள்வி

சென்னை: தசரா, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறை வந்ததால் பொதுமக்கள் பலர் தங்கள் வீடுகளில் தொலைக்காட்சி சேனல்களில் மூழ்கும் நிலை ஏற்பட்டது. இதில் சில தினங்களாக தமிழகத்தில் கோவை உள்ளிட்ட சில நகரங்களில் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு இடையூறு ஏற்பட்டு சேனல்களை பார்க்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர்.

இதுகுறித்து கேபிள் ஆபரேட்டர்கள் சிலரிடம் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள்: கோவை, மதுரை உள்ளிட்ட சில நகரங்களில் தனியார் சேனல்கள் 5ஜி அலைவரிசை தொழில்நுட்பத்துக்கு மாறுவதற்கான சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்றன, அதை கேபிள் டிவி ரிசீவர்கள் பெறுவதில் தொழில் நுட்ப பிரச்சினை ஏற்படுவதால் சில சேனல்கள் சரிவர தெரியாமல் இருக்கலாம். சென்னையில் ஆங்காங்கே குழிகள் தோண்டி வேலை பார்ப்பதால் ஏற்பட்ட இடையூறு கூட இதற்கு காரணமாக இருக்க வாய்ப்புள்ளது. சில நாட்களாக மட்டுமே இச்சூழல் நிலவுகிறது.

மேலும் 5ஜி அலைவரிசை சிக்னல்களை பெறும் வகையில் பில்டர்களை பொருத்த வேண்டும் என்று டிராய் வலியுறுத்திய நிலையிலும், மேற்படி பில்டர்களை பொருத்தாமல் விட்டதாலும் இப்பிரச்சினை எழுந்திருக்கலாம். ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் சேட்டிலைட் இணைப்பில் ட்ரிப் ஆகும்போது இது போன்ற பிரச்சினை அனைத்து கேபிள் இணைப்புகளுக்கும், அனைத்து சேனல்களுக்கும் 5 நிமிடம் வரை ஒளிபரப்பில் பிரச்சினை இருக்கும். நடப்பாண்டில் அக்டோபர் மாதத்தில் இந்த பிரச்சினை எழுந்துள்ளது. இது வரும்அக்.10-ம் தேதி வரை நீடிக்கும். மேலும் அரசு, எஸ்சிவி, பாலிமர் என எந்த சேனல் இணைப்பு வைத்திருந்தாலும் வரிசையாக சேனல் வாரியாக ஒளிபரப்பில் 5 நிமிடங்கள் வரை பாதிப்பு இருக்கும்.

இணைப்புக்கு ஏற்றவாறு இந்த பாதிப்பை உணர முடியும். அரசு தனது கேபிள் இணைப்பை இணையதளம் மூலம் பல பகுதிகளுக்கு வழங்கி வருகிறது. இதை 5ஜியில் இணைக்கும் சோதனை முயற்சியில் ஈடுபட்டதால் கடந்த நான்கைந்து நாட்களாக அரசு கேபிள் மூலம் இணைப்பு பெற்றவர்களுக்கு ஒளிபரப்பில் பாதிப்பு இருந்திருக்கும். ஆனால், சன் டிவி உள்ளிட்ட பிரபல சேனல்கள் பாதிப்பின்றி தெரிகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர். சம்பந்தப்பட்டவர்கள் துரிதமாக செயல்பட்டு இப்பிரச்சினையை சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x