Published : 02 Oct 2022 12:36 AM
Last Updated : 02 Oct 2022 12:36 AM

அரிசி கடத்தல் | உடந்தையாகும் அலுவலர்கள்மீது கடும் நடவடிக்கை - முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

படம் விளக்கம்: மதுரை மாவட்டம் பெருங்குடி, வில்லாபுரம் நகர கூட்டுறவு கடன் சங்க நியாய விலை கடையில் கூட்டுறவு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

மதுரை: மதுரை மாவட்டம் பெருங்குடி, வில்லாபுரம் நகர கூட்டுறவு கடன் சங்க நியாய விலைக்கடைகளில் கூட்டுறவு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெ.ராதாகிருஷ்ணன், "நியாய விலைக்கடைகள் மூலம் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தரமாக வழங்குவதை உறுதி செய்ய வேண்டுமென தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நியாய விலை கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

தமிழகத்தில் மொத்தம் 35,595 நியாய விலைக் கடைகளும், மதுரை மாவட்டத்தில் 1300க்கும் மேலான கடைகள் உள்ளன. மாவட்டந்தோறும் 75 கடைகள் வீதம் தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகள் புனரமைக்கப்படும். மாநில அளவில் அந்தியோதய அன்ன யோஜனா திட்டத்தின்கீழ் 18.64 லட்சம் குடும்ப அட்டைகள், 96.54 லட்சம் அரிசி பெறும் குடும்ப அட்டைகள், 3.84 லட்சம் சர்க்கரை பெறும் குடும்ப அட்டைகள், 60,056 கவுரவ குடும்ப அட்டைகள் உள்ளன.
தமிழகத்தில் ரூ.238 கோடி மதிப்பீட்டில் 20 இடங்களில் மொத்தம் 2.86 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவுடைய சேமிப்பு கிட்டங்கிகள் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

மதுரையில் தோப்பூரில் புதிய உணவுப்பொருள் சேமிப்பு கிட்டங்கிகள் கட்டப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் இதுவரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக 10,252 கோடியில் வேளாண்மை கடன், 40,000 கோடியில் தங்க நகை கடன், 10,000 கோடிக்கும் மேல் சுழல் நிதி, சிறு கடனுதவி உட்பட மொத்தம் ரூ.67 ஆயிரம் கோடியில் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

அரிசி கடத்தல் போன்ற குற்றங்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மூன்று மாதங்களில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிந்து 11,121 பேர் கைதும், 113 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

அப்போது, இணைப்பதிவாளர்கள் குருமூர்த்தி (கூட்டுறவு சங்கங்கள்), பிரியதர்ஷினி (பாண்டியன் கூட்டுறவு பண்டகசாலை) ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x