Published : 30 Sep 2022 04:55 AM
Last Updated : 30 Sep 2022 04:55 AM

தேர்வு செய்யப்பட்ட 30 இளம் வல்லுநர்களுக்கு பயிற்சி - ‘முதல்வரின் புத்தாய்வு திட்டம்’ தொடங்கி வைத்தார் முதல்வர்

‘தமிழக முதல்வரின் புத்தாய்வுத் திட்ட’த்தின்கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள 30 இளம் வல்லுநர்களுக்கு 30 நாட்கள் வகுப்பறை பயிற்சியுடன் கூடிய 2 ஆண்டு புத்தாய்வுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து, மடிக்கணினிகளை வழங்கினார். படம்: பு.க.பிரவீன்

சென்னை: ‘தமிழ்நாடு முதல்வரின் புத்தாய்வு திட்ட’த்தை தமிழக அரசு, அறிமுகப்படுத்தியுள்ளது. திறன்மிகு இளைஞர்களின் ஆற்றல், திறமையை பயன்படுத்தி நிர்வாக செயல்முறைகளின் செயல்திறனை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம்.

இத்திட்டத்தில் 3 கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டு 30 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 30 நாள் வகுப்பறை பயிற்சி திருச்சி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து சென்னை அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியில் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.65 ஆயிரம், இதர செலவினங்களுக்காக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

இந்நிலையில், அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியில் 30 நாட்கள் பயிற்சியை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து, மடிக்கணினிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, க.பொன்முடி, எஸ்.ரகுபதி, கே.ஆர்.பெரியகருப்பன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை செயலர் த.உதயச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இத்திட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவு:

தனிமனிதர், நிறுவனம், ஆட்சியாக இருந்தாலும், தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். அத்தகைய புத்தாய்வுத் திட்டத்தை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். நமது இளைஞர்களின் ஆற்றலைப் பயன்படுத்தி, அரசு நிர்வாகத்தின் செயல்பாட்டை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம். அரசின் திட்டங்கள், அவற்றின் குறிக்கோள்களை முழுமையாக அடையவும், குக்கிராமம் வரை அதன் பயன் மக்களைச் சென்று சேரவும் இது உதவும்.

திட்டங்கள் மக்களைச் சென்றுசேர்வதில் எங்கெல்லாம் குறைபாடு நேர்கிறது எனக் கண்டறிவது, அவற்றுக்கான தீர்வை முன்வைப்பது, திட்டங்களின் சிறப்பான செயலாக்கத்துக்குப் புதிய தொழில்நுட்பங்களை முழுமையாகப் பயன்படுத்துவது, தரவுகளின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பது, இவைதான் இத்திட்டத்தில் நாம் முக்கியமாக கவனம் செலுத்தவுள்ள பணிகள்.

நீர்நிலைகளை மேம்படுத்துதல், வேளாண் உற்பத்தி வளர்ச்சி, அனைவருக்கும் வீடு, கல்வித் தரத்தை உயர்த்துதல், அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, உட்கட்டமைப்பு மற்றும் தொழில் வளர்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர்களை வளர்த்தெடுத்தல் முதலிய 12 முக்கிய துறைகளில் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்கள் கவனம் செலுத்தவுள்ளனர்.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான திராவிட மாடல் திட்டங்களைப் பற்றி அறிந்துகொள்வதற்கும், அவற்றின் வெற்றிக்குப் பங்களிக்கவும் ஒரு மிகச் சிறந்த வாய்ப்பாக இது இருக்கும் என்பதில் ஐயமில்லை. அரசு இயந்திரத்தில் இளைய - புதியரத்தம் பாய்ச்சப்படுகிறது. புதுமையான தமிழகத்துக்கான பாதை வகுக்கப்படுகிறது. இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x