Published : 29 Sep 2022 04:14 PM
Last Updated : 29 Sep 2022 04:14 PM

“12 துறைகளில் 30 இளைஞர்கள்... அரசு இயந்திரத்தில் பாயும் புதிய ரத்தம்” - புத்தாய்வுத் திட்டத்தை விவரித்த முதல்வர் ஸ்டாலின்

முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தின் மூலம் அரசு இயந்திரத்தில் இளைய, புதிய ரத்தம் பாய்ச்சப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், "தனிமனிதராக இருந்தாலும், நிறுவனமாக இருந்தாலும், ஆட்சியாக இருந்தாலும், தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். அத்தகைய புத்தாய்வுத் திட்டத்தை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். இதில் முப்பது இளைய - தனித்திறமைசாலிகள் இணைக்கப்பட்டுள்ளார்கள்.

பல்லாயிரம் பேர் தேர்வு எழுதி, பல கட்ட மதிப்பீட்டுகளுக்குப் பின், அதில் முப்பது பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அடுத்த இரண்டாண்டுகளுக்கு இவர்கள் இப்பணியில் ஈடுபடப் போகிறார்கள். நமது இளைஞர்களின் ஆற்றலைப் பயன்படுத்தி, அரசு நிர்வாகத்தின் செயல்பாட்டை மேம்படுத்துவதுதான் இத்திட்டத்தின் மைய நோக்கம். அரசின் திட்டங்கள், அவற்றின் குறிக்கோள்களை முழுமையாக அடையவும், குக்கிராமம் வரை திட்டத்தின் பயன்கள் மக்களைச் சென்று சேரவும் இது உதவும்.

திட்டங்கள் மக்களைச் சென்று சேர்வதில் எங்கெல்லாம் குறைபாடு நேர்கிறது எனக் கண்டறிவது, அவற்றிற்கான தீர்வை முன்வைப்பது, திட்டங்களின் சிறப்பான செயலாக்கத்துக்குப் புதிய தொழில்நுட்பங்களை முழுமையாகப் பயன்படுத்துவது, தரவுகளின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பது, இவைதான் இத்திட்டத்தில் நாம் முக்கியமாக கவனம் செலுத்தவுள்ள பணிகள்.

இதற்காக, திருச்சி பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனத்துடன் கைகோத்துள்ளோம். உலக அளவில் தலைசிறந்து விளங்கும் வல்லுநர்கள் பயிற்சியளிக்க உள்ளார்கள். பயிற்சியின் முடிவில், தங்களுக்கு ஒதுக்கப்படும் துறைகளில், தேர்வு செய்யப்பட்ட இளைஞர்கள் தங்கள் பணியைத் தொடங்குவார்கள். இரண்டாண்டுகளில், பல்வேறு கள ஆய்வுகளை மேற்கொள்வார்கள். அதில் பெற்ற பாடங்கள், அனுபவங்கள், சேகரித்த தரவுகளின் அடிப்படையில் ஓர் அறிக்கையை அவர்கள் அளிக்க வேண்டும்.

நீர்நிலைகளை மேம்படுத்துதல், வேளாண் உற்பத்தி வளர்ச்சி, அனைவருக்கும் வீடு, கல்வித்தரத்தை உயர்த்துதல், அனைத்துச் சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, உட்கட்டமைப்பு மற்றும் தொழில் வளர்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர்களை வளர்த்தெடுத்தல் முதலிய 12 முக்கியமான துறைகளில் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்கள் கவனம் செலுத்தவுள்ளனர்.

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், நோபல் பரிசு பெற்ற பொருளியலாளர் எஸ்தர் டப்லோ முதலிய உலகப் புகழ்பெற்ற அறிஞர்கள், இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் ஆகியோர் இதில் வழிகாட்ட உள்ளனர். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான திராவிட மாடல் திட்டங்களைப் பற்றி அறிந்துகொள்வதற்கும், அவற்றின் வெற்றிக்குப் பங்களிக்கவும் ஒரு மிகச் சிறந்த வாய்ப்பாக இது இருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை.

இளைஞர்களின் ஆற்றல், தமிழ்நாட்டின் தனித்துவமான ஆட்சி நிர்வாகம், உலக அளவிலான சிறந்த உத்திகள் ஆகிய மூன்றும் ஒரு புள்ளியில் இணைவதுதான் இந்தத் திட்டத்தின் சிறப்பம்சம். இரண்டாண்டு முடிவில் ‘பொதுக்கொள்கை மற்றும் மேலாண்மை’யில் முதுகலை சான்றிதழ் பெறுவதுடன், தகுதியின் அடிப்படையில் முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொள்ளவும் இதில் வழியுள்ளது என்பதை உணர்ந்து, இளைஞர்கள் இதனை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பலரது சிந்தனைகள், பலரது கனவுகள் ஆகியவற்றின் கூட்டுச் சேர்க்கையாக 'திராவிட மாடல்' அரசு திகழ வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இளைஞர்களது புதுமையான சிந்தனைகள் அரசுடன் கைகோக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அரசு இயந்திரத்தில் இளைய - புதிய ரத்தம் பாய்ச்சப்படுகிறது. புதுமையான தமிழகத்துக்கான பாதை வகுக்கப்படுகிறது" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x