Published : 29 Sep 2022 03:48 AM
Last Updated : 29 Sep 2022 03:48 AM

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.300 கோடியில் திருப்பணி - முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.300 கோடி மதிப்பிலான திருப்பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக நேற்று தொடங்கிவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கனிமொழி எம்.பி., தலைமைச் செயலர் வெ.இறையன்பு, அறநிலையத் துறைச் செயலர் பி.சந்திரமோகன், ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர்.

சென்னை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.300 கோடி மதிப்பிலான திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, 6 நாட்கள் கோயில் வளாகத்திலேயே தங்கி விரதம் இருந்து, சூரசம்ஹார நிகழ்ச்சியைக் கண்டு விரதம் முடிப்பார்கள்.

அகத்தியர், அப்பர் சுவாமிகள், அருணகிரிநாதர், ஆதிசங்கரர், பகழிக்கூத்தர், குமரகுருபரர் ஆகியோரால் பாடல்பெற்ற, தொன்மையான தலம் இதுவாகும்.

2021-22-ம் ஆண்டு அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில் “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.150 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்’’ என்று அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, கோயிலில் திருப்பணிகள் மற்றும் இதர பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

உபயதாரரான வாமசுந்தரி இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் மூலம் ரூ.200 கோடியில் கோயில் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வரிசை முறை, காத்திருப்பு அறை, நடைபாதை, மருத்துவ மையம், ஓய்வறை அமைத்தல், பொது அறிவிப்பு கட்டுப்பாட்டு அறை, தீத்தடுப்பு கண்காணிப்பு, முடி காணிக்கை செலுத்தும் இடம், பொருட்கள் பாதுகாப்பு அறை, அன்னதானக் கூடம், கோயில் வளாகத்தில் சாலை வசதி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

பக்தர்கள் தங்கும் விடுதி

மேலும், கோயில் நிதி ரூ.100 கோடியில் பக்தர்கள் தங்கும் விடுதி, சலவைக் கூடம், சுகாதார வளாகம், பேருந்து நிலையம், திருமண மண்டபங்கள், பஞ்சாமிர்தம் மற்றும் விபூதி தயாரிப்புக் கட்டிடம், பணியாளர் குடியிருப்பு, கோயிலின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு தடுப்புச் சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மொத்தம் ரூ.300 கோடி மதிப்பிலான திருப்பணிகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.

அறநிலையத் துறை வரலாற்றில் மிகப்பெரிய அளவில் திருப்பணி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த நிகழ்ச்சியில், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, கனிமொழி எம்.பி., தலைமைச் செயலர் வெ.இறையன்பு, துறைச் செயலர் பி.சந்திரமோகன், ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேபோல, திருச்செந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் இரா.கண்ணன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் இரா.அருள்முருகன், உறுப்பினர்கள் வி.செந்தில்முருகன், அனிதா குமரன், ந.ராமதாஸ், பா.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x