Last Updated : 24 Nov, 2016 10:02 AM

 

Published : 24 Nov 2016 10:02 AM
Last Updated : 24 Nov 2016 10:02 AM

மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களுக்கு எளிமையான கல்வி: பிளக்ஸ் போர்டுகள் மூலம் கற்பிக்கும் கோவை ஆசிரியை

சிறுவயதிலேயே கல்வி மறுக்கப் பட்டு, வேலைக்கு அமர்த்தப்படும் குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுப்பது என்பது சவாலானது. அந்தப் பணியை புதுமையாகவும், எளிமையாகவும் செய்து வருகிறார் கோவையைச் சேர்ந்த ஆசிரியை ஜோதிமணி.

தொழில் நகரமான கோவையில் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகம். சமூகம், குடும்பச் சூழல்களால், விவரம் அறியாத சிறுவயதிலேயே பணிக்கு அமர்த்தப்படும் குழந்தைகளுக்கு ஆறுதல் அளிப்பது தேசிய குழந்தைத் தொழில் ஒழிப்புத் திட்டம் மட்டுமே.

இத்திட்டத்தால் மீட்கப்படும் குழந்தைகளுக்கு, கல்வியை எளிமைப்படுத்தி ‘பிளக்ஸ் போர்டுகள்’ மூலம் பாடம் நடத்தி வருகிறார் மேட்டுப்பாளையம் குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளி ஆசிரியை ஆர்.ஜோதிமணி.

மேட்டுப்பாளையம் எஸ்.எம்.நகரில் உள்ள இந்த சிறப்புப் பள்ளியில் 17 குழந்தைகள் படிக்கின்றனர். இவர்களுக்கு சாதாரணமாக கரும்பலகையில், சாக்பீஸில் எழுதி பாடம் நடத்துவதைத் தவிர்த்துவிட்டு, கவனத்தை ஈர்க்கும் வண்ண வண்ண பிளக்ஸ்களில் பாடங்களை அச்சிட்டு நடத்துகிறார் இவர். செலவுகளைக் கூட பெரிதாகக் கருதாமல் மீட்கப்பட்ட குழந்தைகள் நலனுக்காக புதுமையான முயற்சியை எடுத்துள்ள இவரைப் பெற்றோர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஆர்வமே பிரதானம்

ஆசிரியை ஜோதிமணி கூறியதாவது: பாக்கு உரிக்கும் தொழிலில் இருந்து மீட்கப்பட்ட அசாம் குழந்தைகளும், காய்கறி மண்டி, உணவகங்களில் இருந்து மீட்கப்பட்ட உள்ளூர் குழந்தைகளுமே இந்த மையத்தில் படிக்கிறார்கள். படிப்பை விட்டு, வேலைக்குச் சென்று மீண்டும் படிக்க அழைத்து வரப்பட்டவர்கள் என்பதால், படிப்பின் மீது ஆர்வத்தைத் தூண்ட வேண்டும். இல்லாவிட்டால் படிப்பை வெறுத்துவிடுவார்கள். இது சவாலானது என்பதால் எங்களுக்கு பல பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அந்தப் பயிற்சியோடு, நாம் எடுக்கும் புதுமையான கற்பித்தல் குழந்தைகளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இருந்தது. எனது கணவர் ராஜசேகர் பிளக்ஸ் டிசைனராக வேலை செய்கிறார். அவரது உதவியால், பாடங்களையும், ஓவியங்களையும் பிளக்ஸ் போர்டில் வண்ணத்தில் அச்சிட்டு பாடம் நடத்தத் தொடங்கினேன். சலிப்பு ஏற்படாத வகையில், புதிய புதிய விஷயங்களை அதில், சொல்லிக் கொடுப்பதால் மாணவர்களுக்கு ஆர்வம் அதிகமாகிவிட்டது. முன்பெல்லாம் புத்தகத்தை எடுத்தாலே ‘வரமாட்டேன்’ என அடம் பிடித்த குழந்தைகள் கூட, இன்று தேடி வந்து பாடம் கற்கிறார்கள். அடுத்ததாக அசாம் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கவும், அவர்களுக்கு கல்வி ஆர்வத்தைத் தூண்டவும் முயற்சிப்பேன் என்றார்.

ஜோதிமணி

கோவை மாவட்ட தேசிய குழந்தைத் தொழில் ஒழிப்பு திட்ட இயக்குநர் டி.வி.விஜயகுமார் கூறும் போது, ‘‘கோவை, திருப்பூரில் உள்ள 31 சிறப்புப் பள்ளிகளில் 852 பேர் படிக்கிறார்கள். மீட்கப்பட்ட குழந்தைகள் என்பதால், அவர் கள் போக்கில் கல்வி வழங்க வேண்டும். புறச் சூழல்களால் ஏற்பட்ட அழுத்தமும் அவர்களிடம் இருக்கும். எனவே புத்தகக் கல்வி யைத் தாண்டி, உடல் பராமரிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நாளிதழ் களைப் படிப்பது போன்றவற்றை சொல்லிக் கொடுக்கிறோம். புத்தகக் கல்வியை எளிமையாக்குவதே இதன் நோக்கம். அந்த வகையில், இன்னும் ஒரு படி மேலே சென்று, ஜோதிமணி போன்ற ஆசிரியர்கள், குழந்தைகளின் கல்வியை மிகவும் எளிமையாக்குகிறார்கள். இந்தத் திட்டத்தை மேலும் விரிவு செய்ய ஆலோசிக்கிறோம்’’ என்றார்.

2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி இந்தியாவில் 10 - 19 வயதுடைய 25 கோடி பேரில், சுமார் 7 முதல் 8 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த நிலை மாற இதுபோன்ற ஆசிரியர்களின் முயற்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டியது அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x