Published : 28 Sep 2022 04:05 AM
Last Updated : 28 Sep 2022 04:05 AM

ஆம்னி பேருந்து கட்டணத்தை உரிமையாளர்களே நிர்ணயிப்பார்கள் - போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்

ஆம்னி பேருந்து கட்டணங்களை முறைப்படுத்துவது தொடர்பாக, பேருந்து உரிமையாளர்கள், சங்கப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம், சென்னைஎழிலகத்தில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நேற்று நடந்தது. படம்:ம.பிரபு

சென்னை: மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில், ஆம்னி பேருந்து கட்டணத்தை அதன் உரிமையாளர்கள் ஓரிருநாளில் நிர்ணயம் செய்வார்கள் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

விழாக் காலங்களின்போது ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார் கூறப்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், சென்னையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள், போக்குவரத்து துறை ஆணையர் இல.நிர்மல்ராஜ் உள்ளிட்ட அதி காரிகள் பங்கேற்றனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் குளிர்சாதனம், படுக்கை வசதிகொண்ட பேருந்துகள் உள்ளன. இதைவிட கூடுதல் வசதியை எதிர்பார்ப்பவர்கள் ஆம்னி பேருந்துகளை நாடிச் செல்கின்றனர். அரசு பேருந்துகள் சேவை நோக்கில் இயக்கப்படுகின்றன. ஆனால் ஆம்னி பேருந்துகள் தொழில் ரீதியாக இயங்குகின்றன. இரண்டுக்குமான கட்டணங்களை ஒப்பிடுவது தவறு. மேலும், அந்த பேருந்துகளில் கட்டணத்தை உயர்த்துவதால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவது இல்லை. அவர்கள் அரசு பேருந்துகளில் பயணிக்கின்றனர்.

மற்ற நாட்களைவிட விழாக்காலங்களில்தான் பேருந்துகள் நிரம்புகின்றன என்ற கருத்தை உரிமையாளர்கள் தொடர்ந்து முன்வைத்தனர். எனவே, மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையிலும், உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படாத வகையிலும் ஓரிருநாளில் கட்டணத்தை நிர்ணயிப்பதாக உரிமையாளர்கள் கூறியுள்ளனர். அந்த கட்டணத்தைவிட அதிகம் வசூலித்தால் நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x