Last Updated : 24 Nov, 2016 09:07 AM

 

Published : 24 Nov 2016 09:07 AM
Last Updated : 24 Nov 2016 09:07 AM

சில்லறை தட்டுப்பாட்டால் சிகரெட் விற்பனை 40 சதவீதம் வரை சரிவு: பீடி விற்பனையும் குறைந்தது

சில்லறை தட்டுப்பாடு காரணமாக சிகரெட் விற்பனை 40 சதவீதம் வரை சரிந்துள்ளது. இதேபோல பீடி விற்பனையும் சரிந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சென்னை ஜாம்பஜாரைச் சேர்ந்த சிகரெட் மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர் இர்பான் கூறும்போது, “சிகரெட் உற்பத்தி நிறுவனங்கள் எங்களிடம் இருந்து 500, 1000 ரூபாய் நோட்டுகளை வாங்குவதில்லை என்பதாலும், பழைய நோட்டுகளை வாங்கினால் அவற்றை மாற்ற வங்கி முன்பு மணிக்கணிக்கில் காத்துக்கிடக்க வேண்டும் என்பதாலும் சில்லறை விற்பனையாளர்களிடம் இருந்து பழைய ரூபாய் நோட்டுகளை நாங்கள் வாங்குவதில்லை. மேலும் சில்லறை கொடுத்தால் மட்டுமே சிகெரெட் வாங்க முடியும் என்பதால் வாடிக்கை யாளர்கள் சிகரெட் புகைப்பதை குறைத்துவிட்டனர். இதன் எதிரொலியாக சில்லறை விற்பனையாளர்கள் எங்களிட மிருந்து சிகரெட் பாக்கெட்டுகள் வாங்குவதையும் 40 சதவீதம் வரை குறைத்துவிட்டனர்” என்றார்.

சென்னை சேப்பாக்கத்தில் கடை வைத்துள்ள காஜா முகமது கூறும்போது, “500, 1000 ரூபாய் நோட்டுகளின் பண மதிப்பு நீக்கம் செய்யப்படும் வரை நாளொன்றுக்கு சராசரியாக ரூ.7 ஆயிரத்துக்கு சிகரெட்டுகள் விற்பனையாகும். ஆனால், தற்போது சில்லறை தட்டுப்பாடு காரணமாக ரூ.3,000 வரை மட்டுமே சிகரெட்டுகள் விற்பனையாகிறது” என்றார்.

திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வாடிக்கையாளர் சுரேஷ் கூறும்போது, “முன்பெல்லாம் தினமும் ஒரு பாக்கெட் சிகரெட் வாங்குவேன். சில்லறை தட்டுப் பாடு ஏற்பட்ட பிறகு கையில் உள்ள சில்லறையை வைத்துதான் சாப்பிட முடியும் என்பதால் அதை பாதியாக குறைத்துவிட்டேன். அதுவும், அதிக விலைகொண்ட சிகரெட்களை வாங்குவதில்லை” என்றார்.

பீடி உற்பத்தி பாதிப்பு

தமிழ்நாடு மாநில பீடி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலர் முகமது அஸ்லாம் ‘தி இந்து’விடம் கூறும்போது, “சில்லறை தட்டுப்பாட்டால் பீடி விற்பனையில் 20 சதவீதம் வரை சரிவு ஏற்பட்டுள்ளது. பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு வாரம்தோறும் கூலி கொடுக்கவும் முடியவில்லை. இதனால், பெரும்பாலான இடங்களில் பீடி உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x