Last Updated : 23 Sep, 2022 02:41 AM

1  

Published : 23 Sep 2022 02:41 AM
Last Updated : 23 Sep 2022 02:41 AM

புதுச்சேரி | ஜிப்மர் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு - ஆளுநர் தமிழிசை நேரில் ஆய்வு

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு உள்ளதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஜிப்மர் மருத்துவமனையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் சாய் ஜெ. சரவணன்குமார் உள்ளிட்டோர் ஆய்வின்போது உடனிருந்தனர்.

ஜிப்மர் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாக வெளியான செய்தி குறித்தும், ஜிப்மர் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் வழிமுறைகளையும் அதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் உள்கட்டமைப்பு வசதிகளை பற்றியும் ஆய்வின்போது தமிழிசை கேட்டறிந்தார். சுமார் 2 மணி நேரம் இந்த கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில்:

‘‘புதுச்சேரி ஜிப்மரில் மருந்துகள் தட்டுப்பாடு உள்ளதாக எழுந்த தகவல்களின் பேரில் இங்கு வந்து ஆய்வு செய்து, அவசர கூட்டம் நடத்தியுள்ளோம். எங்களை பொறுத்தவரையில் மக்கள் தான் முதல் பலன் கிடைக்க வேண்டியவர்கள். அதிகாரிகள், மருத்துவர்கள் இரண்டாம்பட்சம் தான்.

புதுச்சேரி ஜிப்மர், பொதுமக்களுக்கு பலவித மருத்துவ சேவைகளை செய்து வருகிறது. குறிப்பாக கடந்தாண்டு 2 லட்சத்து 47 ஆயிரம் பேர் புறநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்றுள்ளனர். இதில், 1.70 லட்சம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 60 ஆயிரம் பேர் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள். மீதம் 10 ஆயிரம் பேர் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். ஜிப்மரில் புறநோயாளர்கள் யாரும் வெளியே சென்று மருந்து வாங்க சொல்வதில்லை, அனைவருக்கும் இங்கே இலவசமாக மருந்துகள் வழங்கப்படுவதாக அவர்கள் கூறினார்கள். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு, உள்நோயாளர்களாக இலவசமாக சிகிச்சையளிக்கப்படுகிறது.

எனினும், யாரையும் வெளியே சென்று மருந்து வாங்கச் சொல்லக்கூடாது என்று அறிவுறுத்தினோம். இங்கே சலுகை விலை மருந்து விற்பனையகம் உள்ளது. அங்கு கூட்ட நெரிசலைத் தவிர்க்க கூடுதல் கவுன்ட்டர்களை திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. உள்நோயாளிகளின் உறவினர்கள், இங்கே இலவசமாக தங்கவும் ஏற்பாடு செய்ய வலியுறுத்தினேன். அதேபோல், சிகிச்சை நிலவரம் குறித்த தகவல் மையம் அமைக்கவும் வலியுறுத்தினேன். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வந்து சென்ற பிறகு, பிரதமரின் காப்பீடு திட்டத்தில் சிகிச்சையளிப்பது தடையின்றி நடைபெறுகிறது.

இத்திட்டத்தில் புதுச்சேரியில் உள்ள 150 பேருக்கு கடந்த மாதம் மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இப்போது, மத்திய அரசு மூலம் ரூ.40 கோடிக்கு இங்கே புதிய மருத்துவக் கருவிகள் வாங்கப்பட்டுள்ளது. ஜிப்மரில் அனைத்தும் இலவசமாக கிடைக்க வேண்டும், மருந்துக்காக மக்கள் அலையக்கூடாது என அறிவுரை கூறியுள்ளோம்.

காரைக்காலில் ஜிப்மர் கிளை ரூ.30 கோடிக்கு சீரமைக்க ஒப்பந்தம் போட்டிருந்தோம். ஆனால் தற்போது புதிய கட்டிடம் கட்டவேண்டும் என மாற்றியுள்ளோம். தற்போது மருந்து தட்டுப்பாடு இல்லை. ஒரு சில மருந்துகள் மட்டும் இல்லை என்பதால், மருந்து சீட்டு கொடுத்தோம் என்று மருத்துவர்கள் கூறினார்கள். அதுவும் கூடாது என்று கோரிக்கை வைத்திருக்கிறோம்.’’ என்றார்.

அப்போது ஜிப்மரில் காய்ச்சலுக்கான பாராசிட்டமால் மாத்திரைகூட இல்லை என்ற புகார் கூறப்படுகிறது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஆளுநர் முதலில் அப்படியெல்லாம் இல்லை என்று மறுத்து, பின்னர் இயக்குநரை அழைத்துக் கேட்டு, "பாராசிட்டமால் கூட இல்லாமல் இருந்தது தப்புதான். அதுவும் தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. இனி இதுபோன்ற தப்பு நடக்காது என்பதை உறுதி செய்துள்ளோம். தொடர்ந்து பொதுமக்கள் மீது அக்கறை உள்ளதால், இங்கு நேரில் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுத்துள்ளோம். தொடர்ந்து, கண்காணித்து குறைகளை சரி செய்ய வலியுறுத்தி வருகிறோம்.’’ என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து ஆளுநர் தமிழிசை ஜிப்மர் மருத்துவமனையில் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் அங்குள்ள மருந்தகங்களில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் மருந்துகள் இருப்பு உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டார். முன்னதாக ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால், மருத்துவர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது,

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x