Published : 19 Nov 2016 10:41 AM
Last Updated : 19 Nov 2016 10:41 AM

ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் வழங்கப்படுமா?- ராமதாஸ்

குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலம் முடிந்து ஏழு ஆண்டுகளாகிவிட்ட நிலையில் இதுவரை புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழக அரசு எவ்வளவு வேகமாக செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்வதற்கான மிகச்சிறந்த அளவீடு, பொதுவினியோகத் திட்டத்திற்கான குடும்ப அட்டை வழங்கப்படும் முறை தான். தமிழகத்தில் குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலம் முடிந்து ஏழு ஆண்டுகளாகிவிட்ட நிலையில் இதுவரை புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படவில்லை. இவை எப்போது வழங்கப்படும் என்பதும் தெரியவில்லை.

தமிழ்நாட்டில் தற்போது பயன்பாட்டிலுள்ள குடும்ப அட்டைகள் 2005ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டவை. அவற்றின் செல்லத்தக்க காலம் 2009ஆம் ஆண்டுடன் முடிவடைந்து விட்ட நிலையில், 2010ஆம் ஆண்டில் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், போலி குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால், அவற்றைக் கணக்கெடுத்து நீக்கும் பணிகள் நடைபெற்று வருவதைக் காரணம் காட்டி, குடும்ப அட்டைகளின் செல்லத்தக்கக் காலத்தை 2011ஆம் ஆண்டு ஜூன் வரை ஒன்றரை ஆண்டுகளுக்கு அப்போதைய திமுகஅரசு நீட்டித்தது. அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு ஐந்தாண்டு பதவிக்காலத்தில் குடும்ப அட்டைகளை புதுப்பிப்பதற்கு எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. 2014&ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டாக குடும்ப அட்டைகளின் காலத்தை நீட்டித்து வந்த அதிமுக அரசு, அதன்பின் ஸ்மார்ட் அட்டை வழங்குவதாகக் கூறி காலம் கடத்தி வருகிறது. ஆனால், இதுவரை ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்படவில்லை.

ஸ்மார்ட் குடும்ப அட்டைகளை வழங்குவதில் பெரிய அளவில் சிக்கல் எதுவும் இல்லை. ஆதார் எண் திட்டத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் உள்ள விவரங்களின்படி ஸ்மார்ட் குடும்ப அட்டைகளை எளிதாக தயாரிக்க முடியும். ஆனால், அதற்கான முயற்சிகளில் அரசு தீவிரம் காட்டவில்லை. அதனால் தான் ஸ்மார்ட் அட்டைகள் தயாரிக்கும் பணி தாமதமாகிறது. தமிழக சட்டப்பேரவையில் 03.09.2015 அன்று உறுப்பினர்களின் வினாக்களுக்கு பதிலளித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ்,‘‘ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்குவதற்கான பணிகள் தொடங்கி விட்டன. சுமார் 80% பணிகள் நிறைவடைந்து விட்டன. முதல்கட்டமாக சென்னை மற்றும் திருச்சியில் 39 நியாயவிலைக்கடைகளில் ஸ்மார்ட் அட்டை திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைப்பார்’’ என்று கூறினார். அதன்பின் 15 மாதங்கள் நிறைவடைந்த பின்னரும் எந்த முன்னேற்றமும் இல்லை.

2016 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கான மானியக் கோரிக்கையில்,‘‘அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் மின்னணு விற்பனைக்கருவி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆதார் விவரத் தொகுப்பினை இணைக்கலாம். மேற்குறிப்பிட்ட விவரங்கள் பெறப்பட்டபின், மின்னணு குடும்ப அட்டை வழங்கத் தேவையான செம்மைப்படுத்தப்பட்ட பொதுவிநியோகத்திட்ட பயனாளிகள் விவரத் தொகுப்பு உருவாக்கப்படும். புதிய மின்னணு குடும்ப அட்டைகள் 2016ஆம் ஆண்டு இறுதிக்குள் வழங்கப்படும்’’ என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது. 2016ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் ஆறு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்படுவதற்கான அறிகுறி தென்படவில்லை.

அண்டை மாநிலமான ஆந்திராவிலும், கேரளத்திலும் ஸ்மார்ட் அட்டைகள் சில ஆண்டுகளுக்கு முன்பே வழங்கப்பட்டுவிட்ட நிலையில், தமிழகத்தில் இத்திட்டத்திற்காக ரூ.318 கோடி ஒதுக்கப்பட்ட பிறகும் ஸ்மார்ட் அட்டை வழங்கப்படாதது நிர்வாகத்தின் இயலாமையையே காட்டுகிறது. தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றப்போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அதிமுக, 6 ஆண்டுகள் ஆகியும் புதிய குடும்ப அட்டைகளையோ, ஸ்மார்ட் அட்டைகளையோ வழங்காததற்காக வெட்கப்பட வேண்டும். குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலம் முடிவடைந்து 7 ஆண்டுகள் ஆகியும் புதிய அட்டை கிடைக்காமல் கந்தலான அட்டையை கொண்டு செல்லும் அவலம் தமிழகத்தில் தான் நிலவுகிறது.

ஆதார் விவரங்கள் கிடைக்கவில்லை, ஸ்மார்ட் அட்டைக்கான சிப் கிடைக்கவில்லை என்றெல்லாம் சொத்தைக் காரணங்களை கூறிக் கொண்டிருக்காமல், மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட விவரங்களைக் கொண்டு புதிய ஸ்மார்ட் அட்டைகளை இந்த ஆண்டு இறுதிக்குள் தயாரித்து வழங்க வேண்டும். மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி, சர்க்கரை, துவரம்பருப்பு, உளுந்து, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அனைத்தும் தட்டுப்பாடின்றி கிடைப்பதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x