Published : 29 Nov 2016 08:15 AM
Last Updated : 29 Nov 2016 08:15 AM

முறையாக பராமரிக்காததால் பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருந்த முக்கிய ஆவணங்களை அரித்த கரையான்கள்: வாடிக்கையாளருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வங்கிக்கு உத்தரவு

பாதுகாப்பு பெட்டகத்தை முறை யாக பராமரிக்காததால் வாடிக்கை யாளர், அதில் வைத்திருந்த முக்கிய ஆவணங்களைக் கரை யான்கள் அரிக்க காரணமான வங்கி நிர்வாகம் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த கே.பத்மப்பிரியா சென்னை மாவட்ட (வடக்கு) நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை திருமங்கலத்தில் உள்ள ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளேன். மேலும், அதே வங்கியில் முக்கிய ஆவணங்களைப் பாதுகாத்து வைப்பதற்காக பணம் செலுத்தி பாதுகாப்பு பெட்டக (லாக்கர்) வசதியையும் பெற்றிருந்தேன். அதில், அசல் விற்பனை பத்திரங்கள் உள்ளிட்டவற்றை வைத்திருந்தேன். இந்நிலையில், திடீரென கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி என்னைத் தொடர்புகொண்ட வங்கி ஊழியர் ‘பாதுகாப்பு பெட்டகத்தில் கரையான்கள் இருப்பதால் அதை உடனடியாக காலி செய்ய வேண்டும்’ என தெரிவித்தார். பின்னர், எனது தாய் உடனடியாக அந்த வங்கிக்கு சென்று பாதுகாப்பு பெட்டகத்தைப் பார்த்தபோது, அதில் இருந்த அசல் ஆவணங்கள் கரையான்களால் அரிக்கப்பட்டு, துண்டுகளாக சிதறிக் கிடந்தன. இதனால், அவசர தேவைக்காக விற்பனை பத்திரத்தை அடகு வைக்கவும் முடியவில்லை, சொத்துக்களை விற்பனை செய்யவும் முடியவில்லை. எனவே, வங்கியின் சேவை குறைபாடு, எனக்கு ஏற்பட்ட மன உளைச்சல், வழக்கு செலவு, அசல் சான்றுகளைத் திரும்பப் பெறுவதற்கான கட்டணம் ரூ.50,000 என மொத்தம் ரூ.19.60 லட்சத்தை வழங்க வேண்டும் என வங்கி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்”. இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை மாவட்ட (வடக்கு) நுகர் வோர் குறைதீர் மன்றத்தின் தலை வர் கே.ஜெயபாலன், உறுப்பினர் டி.கலையரசி ஆகியோர் பிறப் பித்த உத்தரவு: மனுதாரர் பாது காப்பு பெட்டகத்தில் முக்கிய ஆவ ணங்களை வைத்திருந்ததை வங்கி நிர்வாகம் மறுக்கவில்லை. மேலும், சேதமடைந்த ஆவணங்களின் புகைப்படங்களையும் மனுதாரர் தாக்கல் செய்துள்ளார். பொதுவாக பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ள ஆவணங்களை பூச்சிகள் அரிக்காத வகையில் பராமரிக்க வேண்டியது வங்கியின் பொறுப்பு. ஆனால், அவ்வாறு பூச்சி கட்டுப்பாடு மருந்துகளை அவ்வப்போது பயன்படுத்தியதற்காக ஆவணங் கள் எதையும் வங்கி நிர்வாகம் தாக்கல் செய்யவில்லை. இதன்மூலம் பாதுகாப்பு பெட்டகம் சரிவர பராமரிக்கப்படவில்லை என்பது நிரூபணமாகிறது. எனவே, மனுதாரர் அசல் விற்பனை பத்திரங்களைப் பெறுவதற்காக ரூ.50 ஆயிரம், சேவை குறைபாட்டுக்காக இழப்பீடு ரூ.1 லட்சம், வழக்கு செலவாக ரூ.5 ஆயிரத்தை வங்கி நிர்வாகம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x