Published : 11 Nov 2016 11:55 AM
Last Updated : 11 Nov 2016 11:55 AM

தமிழக நிதிநிலை: வெள்ளை அறிக்கை வெளியிட அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும். நீதித்துறைக்கு போதிய அளவில் நிதியை ஒதுக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக அரசின் நிதிச்செயல்பாடுகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கடுமையான வினாக்களை எழுப்பியிருக்கிறது. இந்த வினாக்கள் அனைத்தும் மிகவும் நியாயமானவை; தமிழகத்தின் நிதிநிலைமை உயிரோட்டத்துடன் இருக்கிறதா? என்பதை அறிவதற்காக நாடித்துடிப்பை சோதித்துப் பார்க்கும் நோக்கம் கொண்டவை. ஆனால், இந்த வினாக்களுக்கு தமிழக அரசிடம் பதில் இல்லை என்பது தான் சோகம்.

நீதித்துறை கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக இரு வழக்கறிஞர்கள் தொடர்ந்த 2 வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்த ஒரு வழக்கு என மொத்தம் மூன்று வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதிகள் சிவஞானம், மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது ''ஜனநாயகத்தின் 3 தூண்களில் ஒன்றான நீதித்துறையை நடத்துவதற்கும், கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கும் நிதி ஒதுக்கப்படாததற்கு வேதனையையும், கவலையையும் தெரிவித்துக் கொள்கிறோம். நீதித்துறை அகாடமியின் செயல்பாட்டுக்கான நிதி கூட ஒதுக்கப்படாததும், அதன்காரணமாக இரு பயிற்சித் திட்டங்கள் ஏற்கெனவே ஒத்திவைக்கப் பட்டிருப்பதும் நிலைமை மோசமாகியிருப்பதை காட்டுகின்றன. ரூ.35 லட்சம் கூடுதல் நிதி ஒதுக்கும் திட்டத்தை அரசு பரிசீலித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், பணத்தை மட்டும் பார்க்க முடியவில்லை'' என நீதிபதிகள் கூறியுள்ளனர். நீதித்துறை செயல்பாட்டுக்கான நிதி ஒதுக்கீட்டுக்காக உயர் நீதிமன்றம் இந்த அளவுக்கு அலைக்கழிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

நீதித்துறை கட்டமைப்புக்காக ரூ.150 கோடிக்கான 100 திட்டங்களை உயர் நீதிமன்றம் அனுப்பியுள்ளது. அவற்றில் முதல் கட்டமாக 50 திட்டங்களையும், அடுத்தக்கட்டமாக 50 திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்வதாக தமிழக அரசு பதிலளித்திருக்கிறது. ஆனால், அவற்றில் எந்த 50 திட்டங்களுக்கு நிதி கிடைக்கும் என்பது தெரிவிக்கப்படவில்லை என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மத்தியத் திட்டங்களை பெறுவதில் தமிழக அரசு காட்டிய அலட்சியம் காரணமாக நீதித்துறைக்கு கிடைக்க வேண்டிய ரூ.150 கோடி மத்திய அரசின் நிதி காலாவதியாகிவிட்டது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். ஜனநாயகத்தின் அங்கமான நீதித்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்வதிலும், மத்திய அரசின் நிதியை பெற்றுத் தருவதிலுமே தமிழக அரசு இவ்வளவு அலட்சியமாக செயல்பட்டால், சாதாரண மக்களின் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் எந்த அளவுக்கு அலட்சியம் காட்டும்? என்பது தான் மில்லியன் டாலர் வினாவாகும்.

தமிழக அரசு பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்கொண்டு வருகிறதா? தமிழகம் திவாலான மாநிலம் என்று அறிவிக்கப்போகிறதா? என்பதை அறிய விரும்புகிறோம். அத்தகைய நிலை ஏற்பட்டால் தமிழகத்தில் அரசியலமைப்பு சட்டத்தின் 360ஆவது பிரிவை குடியரசுத் தலைவர் நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கும் என்றும் தலைமை நீதிபதி கூறியிருக்கிறார்.

நீதிபதிகளின் கருத்தில், நீதித்துறைக்கு தமிழக அரசு நிதி ஒதுக்க மறுப்பதால் ஏற்பட்ட கவலையும், வேதனையும், கோபமும் வெளிப்படையாக தெரிகிறது. ஆனால், நீதிபதிகளின் கருத்துக்கள் எந்த வகையிலும் மிகைப்படுத்தப்பட்டவை அல்ல.

தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் 30.12.2014 அன்று தமிழ்நாட்டில் உள்ள இரு உர ஆலைகளுக்கு மானிய விலையில் தொடர்ந்து நாப்தா வழங்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், ''தமிழகம் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. தமிழகத்தின் வருவாய் ஆதாரங்கள் மிகவும் குறைவாக உள்ள நிலையில், கூடுதல் நிதிச்சுமையை தமிழக அரசால் ஏற்றுகொள்ள முடியாது'' என்று கூறியிருந்தார்.

அரசு கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாக மாநில முதல்வரே கூறிய நிலையில், அதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பலமுறை வலியுறுத்தினார். ஆனால், அதற்கெல்லாம் தமிழக அரசிடமிருந்து இன்று வரை வெளிப்படையாக விளக்கம் அளிக்கப்படவில்லை.

ஒருவேளை தமிழக அரசு நிதி நெருக்கடியில் இருந்தால், அதை சமாளிப்பதற்கான நிதி ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அத்தகைய நடவடிக்கைகளை அதிமுக அரசு ஒருபோதும் மேற்கொள்ளவில்லை. வாக்குகளை கவரும் வகையில் இலவசத் திட்டங்களை அறிவிப்பது, அடுக்கடுக்காக ஊழல் செய்வது போன்றவற்றில் தான் தமிழக ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, வருவாயும் குறைந்து விட்டது.

2016-17 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையின்படி தமிழக அரசின் நேரடிக் கடன் மட்டும் ரூ.2 லட்சத்து 52,431 கோடியாக அதிகரித்துள்ளது. இதற்கான வட்டியாக மட்டும் நடப்பாண்டில் ரூ.21,215 கோடியை தமிழக அரசு செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், வட்டி கட்டவும், மற்ற செலவுகளுக்கும் பணம் இல்லாத நிலையில், நடப்பாண்டில் ரூ.41,085 கோடி கடன் வாங்க வேண்டிய நிலையில் தான் தமிழக அரசு உள்ளது.

நடப்பாண்டில் தமிழக அரசின் ஒட்டுமொத்த வரி வருவாய் ரூ.86,537 கோடி தான் எனும் போது, அதில் பாதியளவுக்கு கடன் வாங்க வேண்டியிருந்தால் தமிழகத்தின் நிதி நிலைமை எந்த அளவுக்கு மோசமாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

2011ஆம் ஆண்டு முதல் இப்போது வரை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் ஏராளமானவை செயல்படுத்தப்படவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அரசால் நேரடியாக ஒரே ஒரு அனல் மின்திட்டத்தைக் கூட திட்டமிட்டு, செயல்படுத்த முடியவில்லை; ஒரே ஒரு மருத்துவக் கல்லூரியைக் கூட அறிவித்து அமைக்க முடியவில்லை. அவை விதி எண் 110ன் கீழ் அறிவிக்கப்பட்ட ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான 600க்கும் மேற்பட்ட திட்டங்கள் நிதி ஒதுக்கப்படாததால் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. தமிழகம் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான நிதி நெருக்கடியில் தடுமாறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணங்கள் எதையும் காட்ட முடியாது.

தமிழகம் திவாலான மாநிலம் என்று அரசு அறிவிக்கப்போகிறதா? என சென்னை உயர் நீதிமன்றம் வினா எழுப்பியுள்ள நிலையில், அதற்கு விளக்கமளிக்கும் வகையில் தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்; நீதித்துறைக்கு போதிய அளவில் நிதியை ஒதுக்க வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x