Published : 17 Sep 2022 07:13 PM
Last Updated : 17 Sep 2022 07:13 PM

வாடகை பாக்கி செலுத்தாத 400 கடைகளுக்கு விரைவில் சீல்: சென்னை மாநகராட்சி அதிரடி

சென்னை: வாடகை பாக்கி செலுத்தாத 400 கடைகளுக்கு விரைவில் சீல் வைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமாக 1,500-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்தக் கடைகளை, மாத வாடகை அடிப்படையில் வியாபாரிகளுக்கு விடப்பட்டுள்ளது. இந்த கடைகள் வாயிலாக மாநகராட்சிக்கு ஆண்டுக்கு 4 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில், வாடகை பாக்கி உள்ள கடைகளை கண்டறிந்து, அவற்றை சீல் வைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "சென்னை மாநகராட்சிக்கு சொந்தமாக தண்டையார்பேட்டை, ராயபுரம், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் தான் அதிகளவில் கடைகள் உள்ளன. உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத நேரத்தில், உள்ளூர் அரசியல்வாதிகள் செல்வாக்குடன் பலர் வாடகையை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

முறையாக வாடகையை செலுத்தி வந்த சிலரும், கரோனா பெருந்தொற்று காரணமாக, 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் வாடகை செலுத்துவதை கைவிட்டனர். அதன்பின், ஊரடங்கு தளர்வு போன்றவற்றால் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டபோதும், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டியை வாடகையை பல கடைகள் செலுத்தாமல் உள்ளனர்.

அந்த வகையில் வாடகை செலுத்தாமல் இருந்த 400-க்கும் மேற்பட்ட கடைகள் சமீபத்தில் மூடி சீல் வைக்கப்பட்டது. இந்த நடவடிக்கை எதிரொலியாக, ஒன்றரை கோடி ரூபாய் வாடகை பாக்கி வந்துள்ளது. மேலும், வாடகை பாக்கி செலுத்தாத 400 கடைகள் குறித்த பட்டியலை தயாரித்து உள்ளோம். இந்த கடைகளுக்கு, ஓரிரு வாரங்களில் முழுமையாக செலுத்த வேண்டிய வாடகையை செலுத்தவிட்டால், அக்கடைகளை மூடி சீல் வைக்கப்படும்" என்று அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x