Published : 14 Sep 2022 07:22 AM
Last Updated : 14 Sep 2022 07:22 AM

தேசிய பாடத்திட்ட டிஜிட்டல் சர்வே மூலம் சம்ஸ்கிருதத்தை திணிக்க மத்திய அரசு முயற்சி: மக்கள் நீதி மய்யம் கட்சி குற்றச்சாட்டு

சென்னை: தேசிய பாடத்திட்ட டிஜிட்டல் சர்வேயின் மூலம் சம்ஸ்கிருதம் மொழியைத் திணிக்க முயற்சி நடைபெறுவதாக மக்கள் நீதி மய்யம் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்ட அறிக்கை: தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழகம் உட்பட பல மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்து, ஏற்க மறுத்துள்ளன.

இந்நிலையில், தேசிய அளவிலான பாடத் திட்டத்தை உருவாக்குவதற்காக 23 மொழிகளில் டிஜிட்டல் சர்வே நடத்தப்படுகிறது. இந்த சர்வேயில், "1-ம் வகுப்பு முதல் பள்ளிகளில் எந்தெந்த மொழிகளைக் கற்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?" என்று ஒரு கேள்வி உள்ளது.

அதற்கு, தாய்மொழி, உள்நாட்டு மொழி, மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழி, ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழி என பல்வேறு பதில்கள் தரப்பட்டுஉள்ளன. இதில், சம்ஸ்கிருதம் போன்ற செம்மொழிகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆங்கிலம் தவிர்த்து வேறு எந்த மொழியின் பெயருமே இதில் குறிப்பிடப்படாத சூழலில், சம்ஸ்கிருதத்தை மட்டும் திணித்துள்ளனர்.

இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட பல மொழிகள் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ‘சம்ஸ்கிருதம் போன்ற செம்மொழிகள்' என்று குறிப்பிடுவது எதேச்சையாக நடந்த ஒன்றாகக் கருத முடியாது. சம்ஸ்கிருதத்தை வலிந்து திணிக்கும் முயற்சியே இது.

மத்திய அரசின் இந்த அணுகுமுறை கடும் கண்டனத்துக்குரியது. எனவே, உடனடியாக டிஜிட்டல் சர்வேயிலிருந்து சம்ஸ்கிருதம் மொழி குறித்த குறிப்பை நீக்க வேண்டும். செம்மொழிகள் என்று பொதுவாகக் குறிப்பிடலாம் அல்லது அனைத்து செம்மொழிகளையும் பட்டியலிட்டுக் காட்டலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x