Published : 13 Sep 2022 04:15 AM
Last Updated : 13 Sep 2022 04:15 AM

தமிழகத்தில் பிறக்க ஆசை - உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி உருக்கம்

முனீஷ்வர்நாத் பண்டாரி

சென்னை: ‘தமிழக மக்களின் பாசமிகு நினைவுகளைச் சுமந்து செல்கிறேன்; என்னை மறந்துவிட வேண்டாம்’’ என தனது பிரிவுபசார விழாவில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு நவ.22-ம் தேதி நியமிக்கப்பட்ட நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, கடந்த பிப்ரவரி மாதம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். அதன்படி, சுதந்திர இந்தியாவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் 32-வது தலைமை நீதிபதியானார்.

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மற்றும் தலைமை நீதிபதியாக தனது பதவிக் காலத்தில், ‘‘கோயில் அர்ச்சகர்களை ஆகம விதிப்படி நியமிக்க வேண்டும், முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினியை விடுதலை செய்ய மறுப்பு, நீர்நிலை ஆக்கிரமிப்புகள், சீமைக் கருவேல மரங்கள் அகற்றம், சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் சாலையில் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்தது’’ என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்ப்புகளை வழங்கினார்.

இந்நிலையில், அவர் நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதையொட்டி, உயர் நீதிமன்றம் சார்பில் அவருக்கு பிரிவுபசார விழா நேற்று நடந்தது.

இந்நிகழ்ச்சியில், தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் பிரிவுபசார உரை நிகழ்த்தினார். அப்போது அவர், ‘‘தான் பதவியேற்ற நேரத்தில் கூறியபடி நீதி பரிபாலனத்தை குறுகிய காலத்தில் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி விரிவுபடுத்தியுள்ளார். அவர் தலைமையிலான அமர்வு ஏராளமான சிறப்பு வாய்ந்த உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. பதவிக்காலத்தில் 7 வணிக நீதிமன்றங்களைத் தொடங்கி வைத்ததுடன், 116 நீதிமன்ற அறைகளுடன் 10 மாடி நீதிமன்றக் கட்டிடத்துக்கும், பழைய சட்டக் கல்லூரியைப் புதுப்பிக்கவும் எடுத்த நடவடிக்கைகள் வழக்கறிஞர்களால் என்றும் நினைவில் கொள்ளப்படும்’’ என்றார்.

ஏற்புரையாற்றி தலைமை நீதிபதிமுனீஷ்வர்நாத் பண்டாரி பேசியதாவது: நாட்டிலேயே மிகச்சிறந்த வழக்கறிஞர்களைக் கொண்ட உயர் நீதிமன்றங்களில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கியமானது. அதிக வழக்குகளை முடித்ததில் இந்த நீதிமன்றம் முதலிடத்தில் இருப்பது மிகுந்த திருப்தி அளிக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு, முதல்வர், சட்டத்துறை அமைச்சர், தலைமைச் செயலர், அரசுத் துறை செயலர்கள் என அனைவரும் மிகச்சிறந்த ஒத்துழைப்பு வழங்கினர். அவர்களது செயல்பாடுகள் பாராட்டுக்குரியன.

தமிழகத்தில் பிறக்க ஆசை: சக நீதிபதிகள் எனக்கு மிகப்பெரிய பலமாகவும், நிர்வாகம் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுக்கவும் அவர்கள் உதவியாக இருந்தனர். இளம் வழக்கறிஞர்கள் திறமையை வெளிப்படுத்த, கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பதவியேற்றபோது, தமிழகத்தில் பிறக்க விரும்பினேன், தற்போது அந்த ஆசை அதிகமாகியிருக்கிறது. கடந்த 10 மாதங்களாக தமிழக மக்கள் வெளிப்படுத்திய பாசமிகு நினைவுகளை இதயத்தில் சுமந்து செல்கிறேன். என்னை மறந்துவிட வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர்கள், நீதித் துறை பணியாளர்கள் உள்ளிட்டோர் தலைமை நீதிபதிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x