Published : 11 Nov 2016 08:10 AM
Last Updated : 11 Nov 2016 08:10 AM

காவிரி டெல்டா பகுதியில் மேற்கொள்ளப்படவிருந்த மீத்தேன் எரிவாயு திட்டம் நிரந்தரமாக ரத்து: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு - விவசாயிகள் வரவேற்பு

கடந்த 5 ஆண்டுகளாக டெல்டா விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நிலக்கரிப் படுகை மீத்தேன் எரிவாயு திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது டெல்டா விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

காவிரி டெல்டாவில் உள்ள மன்னார்குடியை மையமாகக் கொண்டு, புதுச்சேரி முதல் ராமேசு வரம் வரையிலான சுமார் 691 கி.மீ. சுற்றளவில், நிலக்கரி படுகையில் இருந்து மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் மத்திய அரசால் கடந்த 2010-ல் அறிவிக்கப்பட்டது. இதற்கான உரிமம், கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் (ஜிஇஇசிஎல்) என்ற தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

இத்திட்டத்தால், காவிரி டெல்டாவில் பேரழிவு ஏற்படும் எனக் கூறி, விவசாயிகளும் பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர். இதையடுத்து, இத்திட்டத்துக்கு மாநில அரசு ஜூலை 2013-ல் இடைக்காலத் தடை விதித்தது. இதனால், ஜிஇஇசிஎல் பணிகளைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

ஒப்பந்தப்படி பணிகளைத் தொடங்கவில்லை என்பதால், ஒப்பந்தம் ரத்து செய்யப்படலாம் என கடந்த 2015 மார்ச்சில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், மார்ச் 31-ல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அளிக்கப்பட்ட ஜிஇஇசிஎல் நிறுவனத்தின் புதிய கடிதத்தில், ‘மீத்தேன் கிணறு அமைக்க அளித்த வரைபடத்தில் குறிப்பிட்ட கோணங்களில் சில தவறுகள் ஏற்பட்டுள்ளதால், அவற்றை சரிசெய்து, தற்போது நாங்கள் அளித்துள்ள கடிதத் துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தர வேண்டும்” எனத் தெரிவித்தி ருந்தது. இந்தக் கடிதத்தை, 2015 ஜூனில் மத்திய சுற்றுச்சூழல் அமைச் சகம் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது. இதனால், இத்திட்டம் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் தொடங்கப்படலாம் என்ற அச்சம் டெல்டா மக்களிடையே நிலவியது. இதையடுத்து, போராட் டங்களையும் நடத்தத் தொடங் கினர்.

இந்நிலையில், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், டெல்டா பகுதி நிலக்கரி படுகை மீத்தேன் திட்டம் நிரந்தரமாக நிறுத்தப்படுவதாக நேற்று அறிவித்துள்ளார். இதை டெல்டா விவசாயிகள், பொது மக்களின் மகிழ்ச்சியுடன் வரவேற் றுள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு காவிரி டெல்டா விவசாயிகள் நலச்சங்க பொதுச் செயலாளர் மன்னார்குடி எஸ்.ரெங்கநாதன் கூறும்போது, ‘‘மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் அறிவிப்பு, டெல்டா விவசாயிகளுக்கு நல்ல செய்தி. இதை அனைவரும் வரவேற்கி றோம். இதேபோல, ஷேல் காஸ் எடுக்கும் திட்டமும் முழுமையாக கைவிடப்பட்டதாக மத்திய அரசு கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்’’ என்றார்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறும் போது, ‘‘காவிரி பிரச்சினையில் மத்திய அரசு மீது கொந்தளிப்பில் உள்ள டெல்டா விவசாயிகளை திசை திருப்பவே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். எனினும் இது விவசாயிகளின் போராட்டத்துக்கு கிடைத்த தற்காலிக வெற்றி’’ என்றார்.

மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்பட்ட அறிவிப்பையடுத்து, தஞ்சாவூரில் நேற்று அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க நிர்வாகிகள் புண்ணியமூர்த்தி, செல்வராஜ், வ.சேதுராமன் தலை மையில் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். இதேபோல, திருவாரூர் பேருந்து நிலைய பகுதியில் குடவாசல் சேதுராமன் தலைமையில் விவசாயிகள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் வரவேற்பு தெரிவித்தனர்.

மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டி.ஜெயராமன் கூறும் போது, ‘‘இதற்கு முன்னர் இதே அமைச்சர், மீத்தேன் திட்டத்தை டெல்டா விவசாயிகளின் ஒப்புத லுடன் நிறைவேற்றுவோம் என்று கூறினார். விவசாயிகள் எதிர்ப்பைக் காட்டியதால் இந்தத் திட்டத்தை இப்போது கைவிட்டுள்ளனர்’’ என்றார்.

மீத்தேனைப் போல, ஷேல் காஸ் எடுப்பதற்கான அனைத்து பூர்வாங்க துரப்பண பணிகளையும் நிறுத்த வேண்டும் என டெல்டா விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x