Last Updated : 31 Oct, 2016 08:55 AM

 

Published : 31 Oct 2016 08:55 AM
Last Updated : 31 Oct 2016 08:55 AM

ஏற்றுமதியில் தமிழகம் 3-வது இடம்: ரூ.1.96 லட்சம் கோடியை கடந்து சாதனை

நாட்டின் மொத்த ஏற்றுமதியில் குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் தமிழகத்தில் இருந்து ரூ.1.96 லட்சம் கோடி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் விளையும் விவசாயப் பொருட்கள், உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டில் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் தமிழகம் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. இதுகுறித்து இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (தென் மண்டலம்) தலைவர் டாக்டர் ஏ.சக்திவேல் கூறியதாவது:

தமிழகத்தில் இருந்து விவசாயப் பொருட்கள், தோல் பொருட்கள், ரசாயனம், அழகுசாதனப் பொருட்கள், ஜவுளிகள், ஆயத்த ஆடைகள், கைவினைப் பொருட்கள், கணினி சாப்ட்வேர் என 20 வகையான பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த 2015-16-ம் ஆண்டு தமிழகத்தில் இருந்து ரூ.1.96 லட்சம் கோடி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. நாட்டின் மொத்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு 13% ஆகும். இதன்மூலம், ஏற்றுமதியில் முன்னிலையில் உள்ள மாநிலங்களான குஜராத் (22%), மகாராஷ்டிரா (19.5%) ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழகம் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.

தமிழகத்தில் இருந்து செய்யப்பட்ட மொத்த ஏற்றுமதியில் ஆசிய நாடுகளுக்கு 48%, ஐரோப்பிய நாடுகளுக்கு 16%, ஆப்பிரிக்க நாடுகளுக்கு 16%, அமெரிக்காவுக்கு 14.5%, பிற நாடுகளுக்கு 5.5 % ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஆரம்பத்தில் 50 உறுப்பினர் களுக்கும் குறைந்த எண்ணிக் கையுடன்தான் தென்மண்டல ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் தொடங்கப்பட்டது. தற்போது 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். சர்வதேச ஏற்றுமதி வர்த்தகத்தில் தென்மண்டல ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் பங்களிப்பு 70% ஆக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x