Published : 27 Oct 2016 08:32 AM
Last Updated : 27 Oct 2016 08:32 AM

சிப்பெட் நிறுவனத்தின் தலைமையகத்தை சென்னையில் இருந்து மாற்றும் திட்டம் இல்லை: மத்திய அமைச்சர் அனந்தகுமார் தகவல்

சிப்பெட் நிறுவனத்தின் தலைமையகத்தை சென்னையில் இருந்து மாற்றும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் அனந்தகுமார் கூறியுள்ளார்.

மத்திய பிளாஸ்ட்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (சிப்பெட்) சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் கடந்த 48 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் கீழ் மதுரை, லக்னோ, அகமதாபாத் உட்பட இந்தியாவின் பல்வேறு ஊர்களில் கிளை மையங்கள் உள்ளன. பிளாஸ்டிக் சார்ந்த பொறியியல், பட்டயம் மற்றும் ஆராய்ச்சி சார்ந்த கல்வியை சிப்பெட் நிறுவனம் அளித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைமையகத்தை சென்னையில் இருந்து டெல்லிக்கு மாற்ற மத்திய அரசு முயற்சி எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு சிப்பெட் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சங்கம் மற்றும் தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் அனந்த குமார் டெல்லியில் நிருபர்களிடம் இது தொடர்பாக கூறும்போது, “சிப்பெட் நிறுவனத்தின் தலைமையகத்தை மாற்றும் திட்டம் ஏதும் இல்லை. மாறாக, சிப்பெட் நிறுவனத்தை விரிவாக்கம் செய்வது மற்றும் மறு சீரமைப்பு செய்யும் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. சிப்பெட்டின் இயக்கப் பணிகளுக்காக டெல்லியில் ஒரு மாற்றுத் தலைமையகத்தை உருவாக்க உள்ளோம். 2014-ல் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தபோது 45 ஆயிரம் மாணவர்களுடன் சிப்பெட் நிறுவனத்தின் கீழ் நாடெங்கும் 23 மையங்கள் இருந்தன. தற்போது இந்த மையங்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 16 மையங்களை அடுத்த இரண்டரை ஆண்டுகளில் தொடங்க உள்ளோம். இதற்கான இயக்கப் பணிகளுக்காக டெல்லியில் ஒரு மாற்று தலைமையகம் அமைக்கப்பட உள்ளது” என்றார்.

முன்னதாக மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை மற்றும் கப்பல் துறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், “48 ஆண்டுகளாக சென்னையில் இயங்கி வரும் சிப்பெட்டின் தலைமையகத்தை மாற்றக் கூடாது என்று மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் அனந்தகுமார் மற்றும் அத்துறை இணை அமைச்சர் மன்சுக் எல்.மண்டாவியாவிடம் எடுத்துக் கூறினேன். இந்தப் பிரச்சினை குறித்து நிச்சயம் கவனம் செலுத்துவதாக அவர்கள் உறுதியளித்தனர்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x