Published : 09 Sep 2022 12:44 PM
Last Updated : 09 Sep 2022 12:44 PM

தற்கொலை எண்ணத்தை கைவிடுங்கள்; இன்னும் எத்தனையோ படிப்புகள் உள்ளன: வைகோ 

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ | கோப்புப் படம்.

சென்னை: நீட் தேர்வில் தோல்வி அடைந்த கண்மணிகள் தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''சென்னை ,சூளைமேடு பகுதியில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநரான கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் தனுஷ் கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை.

இந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில் மன உளைச்சலில், கடந்த ஜூன் மாதம் தன்னால் முடியவில்லை என்று குரல் பதிவு செய்து வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னையை அடுத்த ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயல் சோழபுரம் இந்திரா நகர் 2-ஆவது தெருவைச் சேர்ந்த அமுதா, ஆவடியை அடுத்த பாண்டேஸ்வரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது மகள் லக்சனா சுவேதா, கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி, அதில் தோல்வி அடைந்தார். இதற்கிடையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள பல்கலைக் கழகத்தில் மருத்துவம் தொடர்பான படிப்பை இணையத்தில் ஒன்றரை ஆண்டுகள் படித்து வந்தார்.

எப்படியாவது டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவோடு இருந்த லக்சனா சுவேதா, 2-ஆவது முறையாக கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நீட் தேர்வை எழுதினார். தேர்வுக்கு பிறகு அவர் தனது தாயாரிடம் ''நான் தேர்வை சரியாக எழுதவில்லை. மதிப்பெண்கள் குறைவாகத்தான் வரும் போல் இருக்கிறது'' என்று கூறியுள்ளார்.

நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இரண்டாவது முறையும் தோல்வி அடைந்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த வேலஞ்சேரி கிராமத்தை சேர்ந்த மணிவேல் என்பவரின் மகள் ஜெனி என்ற ஜெயசுதா, நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

நீட் நுழைவுத்தேர்வு திணிக்கப்பட்ட 2017ஆம் ஆண்டில், அரியலூர் அனிதா தொடங்கி கடந்த ஆண்டு வரை 20 மாணவர்கள் உயிரைப் போக்கி கொண்ட நிலையில் ,நேற்று மாணவி லக்சனா சுவேதா தற்கொலை செய்து கொண்டது வேதனை தருகிறது.

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய நீட் விலக்கு சட்ட முன் வடிவுக்கு ஒன்றிய பாஜக அரசு அனுமதி தராமல் அலட்சியப் படுத்தி வருவதால். தமிழ்நாட்டில் மாணவர்களின் தற்கொலைகள் தொடரும் துயரமாக உள்ளது.

பாஜக அரசு இதில் வீண் பிடிவாதமாக இருப்பது கண்டனத்துக்கு உரியது. ஒன்றிய அரசு நீட் விலக்கு சட்டமுன் வரைவுக்கு அனுமதி அளிக்க வேண்டும். நீட் தேர்வில் தேர்ச்சி அடைய வாய்ப்பு இல்லாமல் போன மாணவக் கண்மணிகள், தற்கொலை எண்ணத்தை கைவிட வேண்டும்.

மருத்துவப் படிப்பு இல்லாவிடில் இன்னும் எத்தனையோ படிப்புகள் உள்ளன. அவற்றில் தேர்வு செய்து பயின்று. வாழ்வில் உயர முயற்சிக்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.'' இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x