Published : 09 Sep 2022 04:30 AM
Last Updated : 09 Sep 2022 04:30 AM

குமரியில் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களுடன் 2-வது நாளாக ராகுல் நடைபயணம் - சாலையோரம் திரண்ட பொதுமக்கள் உற்சாகம்

கன்னியாகுமரியில் இருந்து 2-வது நாளாக இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சுசீந்திரத்தில் உற்சாகமாக நடந்து வந்தார். படம்: மு.லெட்சுமி அருண்

நாகர்கோவில்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக நடைபயணம் மேற்கொண்டார். சாலையோரம் திரண்டிருந்த பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையான 150 நாள் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை ராகுல் காந்தி எம்.பி. நேற்று முன்தினம் தொடங்கினார். இந்த நடைபயணத்தை கன்னியாகுமரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதல்நாள் நடைபயணத்தை அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் ராகுல் நிறைவு செய்தார். கல்லூரி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட கேரவன் வேன்களிலேயே ராகுல் காந்தியும், அவருடன் நடைபயணம் மேற்கொள்ளும் 118 பேரும் இரவு தங்கினர்.

இதைத் தொடர்ந்து நேற்று காலை 7.15 மணி அளவில் 2-வது நாள் நடைபயணத்தை ராகுல் தொடங்கினார். அவரை மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். நடைபயணத்தின்போது, சாலை யோரம் நின்றிருந்த பொதுமக்கள், மாணவ, மாணவிகள் ராகுல் காந்தியை பார்த்து உற்சாகமாக கையசைத்தனர். சில இடங்களில் ராகுல், அவர்களின் அருகில் சென்று பேசினார். தொண்டர் ஒருவர் வழங்கிய இளநீரை பருகினார். ராகுல் காந்தியின் உருவம் பொறித்த முகக் கவசம், டி-சர்ட் அணிந்தவாறு பலர் நடைபயணத்தில் பங்கேற்றனர். கொட்டாரம் வழியாக சென்று காலை 10.30 மணிக்கு சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம். பள்ளியை அடைந்தனர்.

நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் தந்தை சண்முகம், சகோதரர் மணிரத்தினம் ஆகியோர் கொட்டாரத்தில் ராகுலை சந்தித்து, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனர்.

நடைபயணத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், காங்கிரஸ் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், ஜெயக்குமார், செல்லகுமார், ஜோதிமணி, விஜய் வசந்த், எம்எல்ஏக்கள் ரூபி மனோகரன், ராஜேஷ்குமார், பிரின்ஸ், விஜயதரணி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

சுசீந்திரத்தில் மதிய ஓய்வுக்கு பின்னர் மாலை 4 மணி அளவில் நடைபயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி, நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியை சென்றடைந்தார். இரவு அங்கேயே தங்கினார்.

இன்று 3-வது நாள் பயணத்தை நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தொடங்கி, பகலில் புலியூர்குறிச்சியை அடைகின்றனர். மதிய ஓய்வுக்கு பிறகு மாலையில் தொடங்கும் நடைபயணம் தக்கலை அருகே முளகுமூடு புனிதமேரி ஐசிஎஸ் பள்ளியில் நிறைவடைகிறது. வழியில் ராகுலை தமிழக விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை (10-ம் தேதி) முளகுமூட்டில் பயணத்தை தொடங்கி மார்த்தாண்டம் நேசமணி கிறிஸ்தவக் கல்லூரியை நடைபயண குழுவினர் மதியம் அடைகின்றனர். அங்கு ஓய்வுக்குப் பின்னர் மாலையில் குழித்துறை வழியாக கேரள பகுதியான தலைச்சன்விளையை அடைகின்றனர். 11-ம் தேதி முதல் கேரளத்தில் நடைபயணம் தொடங்குகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x