Published : 20 Oct 2016 03:01 PM
Last Updated : 20 Oct 2016 03:01 PM

அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு போனஸ் தொகையை வழங்கிடுக: வாசன்

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு போனஸ் தொகையை உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''1972ல் தமிழக அரசால் தொடங்கப்பட்ட தமிழக அரசின் போக்குவரத்துத் துறை பொது மக்களின் போக்குவரத்துக்கு பேருந்துகளை இயக்கும் மிக முக்கியமான துறையாகும். இத்துறையின் மூலம் தமிழ்நாட்டிற்குள்ளேயும் மற்றும் புதுச்சேரி, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளுக்கும் தமிழ் நாட்டிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் நகர்புறம் மற்றும் புறநகர் பகுதிகளில் பேருந்து சேவைகளை இயக்குகிறது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 1,30,000 போக்குவரத்து தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள்.

தீபாவளிப் பண்டிகை வரும் 29 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலத்திற்கு முன்பு தமிழக அரசு தீபாவளிப் பண்டிகைக்காக லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்குவதாக அறிவித்து, இன்னும் வழங்கவில்லை. இதற்கான முன்பணமும் கொடுக்கவில்லை.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு போனஸ் தொகையை உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும். மேலும் அரசுப் பணியாளர் அல்லாத மற்ற ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கருணைத்தொகையை உடனடியாக வழங்க முன்வர வேண்டும்.

மேலும் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு முறையாக, சரியாக, முழுமையாக இன்னும் பணப்பலன்கள் வழங்கப்படாமல் இருப்பதால் அவர்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். இந்நிலையில் இவர்களில் ஆயிரக்கணக்கானோர் ஓய்வூதியப் பணம் பெறுவதற்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கின் தீர்ப்பில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியப் பணம் உடனடியாக வழங்க நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் அவர்களுக்கு பணப்பலன் இதுவரை முழுமையாக வழங்கப்படவில்லை. இது மிகவும் வேதனைக்குரியது.

மேலும் அரசுப் போக்குவரத்து ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்படும். ஆனால் இந்த வருடம் 2016 செப்டம்பர் மாதம் நடைபெற வேண்டிய பேச்சு வார்த்தை அக்டோபர் மாதம் ஆகியும் நடைபெறவில்லை. அந்த பேச்சு வார்த்தை எப்போது நடைபெறும் என்ற அறிவிப்பும் இன்னும் வெளியிடப்படவில்லை.

எனவே தமிழக அரசு - அரசு போக்குவரத்து தொழிலாளர்கள், நுகர்பொருள் வாணிபக் கழகம், சர்க்கரை ஆலைத் தொழிலாளர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரிபவர்களுக்கு போனஸ், கருணைத் தொகை மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்கள் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். மேலும் அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்து பேச்சு வார்த்தையை உடனடியாக நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.

இனிவரும் காலங்களில் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு உரிய சலுகைகள் தொடர்ந்து, சரியாக, முறைப்படி வழங்கவும், ஓய்வூதியப் பணப்பலன்கள் ஓய்வு பெறும்போதே கிடைக்கப்பெறவும் தமிழக அரசு துரித நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x