Published : 20 Oct 2016 09:07 AM
Last Updated : 20 Oct 2016 09:07 AM

சாத்தூர் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பெண்கள் உட்பட 6 பேர் கைது - துப்பாக்கி, 7 தோட்டாக்கள் பறிமுதல்

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் ஓடும் பேருந்தில் இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப் பட்ட வழக்கில் பாலிடெக்னிக் மாணவர், 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

கோவில்பட்டியைச் சேர்ந்த காந்தாரி என்வரது மகன் கருப்ப சாமி(24) கடந்த 12-ம் தேதி மதுரை நோக்கி பேருந்தில் சென்றபோது சாத்தூர் அருகே மர்ம நபரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப் பட்டார். இதுகுறித்து சாத்தூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

போலீஸாரால் தேடப்பட்ட கோவில்பட்டியைச் சேர்ந்த முகமதுரபீக் என்வர் கடந்த 13-ம் தேதி மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார். சாத்தூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது, 4 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. அவரிடம் தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில், இக் கொலையில் மேலும் பலருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து எஸ்பி ராஜராஜன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மகன் அப்துல்லா கொலை செய்யப்பட்டதால் அதற்கு பழி வாங்குவதற்காக முகமது ரபீக் திட்டமிட்டுள்ளார். இதற்காக, காந்தாரியின் வீடு அருகில் கோவில்பட்டியைச் சேர்ந்த பாக்கியராஜ்(31) என்பவருக்கு முகமதுரபீக் சி.டி. கடை வைத்துக்கொடுத்துள்ளார். இதன்மூலம் காந்தாரியின் வீட்டு நடவடிக்கைகளை பாக்கியராஜ் கண்காணித்து வந்துள்ளார்.

ஆயுதபூஜை விடுமுறைக்காக கோவையில் இருந்து கருப்ப சாமி கோவில்பட்டி வந்ததையும், 12-ம் தேதி அவர் ஊருக்கு புறப் படுவதையும் அறிந்துகொண்ட பாக்கியராஜ், முகமதுரபீக்குக்கு தகவல் தெரிவித்துள்ளார். முகமதுரபீக், ரூ.1.25 லட்சம் கொடுத்து தனது நண்பர் ஒருவர் மூலம் சென்னைக்கு அருகே உள்ள ஒரு இடத்தில் கள்ளத் துப்பாக்கியும் 10 தோட்டாக்களும் வாங்கியுள்ளார்.

கடந்த 12-ம் தேதி கருப்பசாமி ஊருக்கு புறப்பட்ட அதே பேருந் தில் ஏறிய முகமதுரபீக் திட்ட மிட்டபடி சாத்தூர் வந்தபோது துப்பாக்கியால் அவரை சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பியுள் ளார். மேலும், கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை மனைவியின் தோழியான லதா என்ற நாச்சியாரிடம் கொடுத்துள் ளார். லதாவின் தோழி மகாலட்சுமி, அவரது நண்பர் வாசமுத்து ஆகியோர் துப் பாக்கியை எடுத்துக்கொண்டு சாத்தூர் அருகே உள்ள ஓ.மேட்டுப் பட்டிக்கு வந்து, ஒரு தோட்டத்தில் துப்பாக்கியை புதைத்து வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

இதையடுத்து, கோவில் பட்டியைச் சேர்ந்த லதா என்ற நாச்சியார்(33), மகாலட்சுமி(42), வாசமுத்து(38), பாக்கியராஜ்(31), முகமதுரபீக்கின் மனைவி யாஸ்மின்பானு(43) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், யாஸ்மின்பானுவை தலை மறைவாக இருக்கச் செய்ய உதவிய 18 வயது மாணவர் ஒருவரும் கைது செய்யப் பட்டுள்ளார். கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கியும் 7 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x