Published : 04 Oct 2016 01:54 PM
Last Updated : 04 Oct 2016 01:54 PM

திருவண்ணாமலை: உள்ளாட்சித் தேர்தலில் ஆர்வம் காட்டாத சிறு கட்சிகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் களத்தில் அதிமுக, திமுகவை தவிர பிற கட்சிகள் ஆர்வம் காட்டவில்லை என்பது வேட்புமனுத் தாக்கலின் இறுதி நாளில் தெரியவந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத் தில் 34 மாவட்ட ஊராட்சிக் கவுன்சிலர்கள், 341 ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர்கள், 860 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 6,207 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், 123 நகராட்சிக் கவுன்சிலர்கள், 150 பேரூராட்சிக் கவுன்சிலர்கள் என 7,715 பதவிகளுக்கான தேர்தல் வரும் 17 மற்றும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மாதம் 24-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.

உள்ளாட்சித் தேர்தல் களத்தில் ஆளுங்கட்சியான அதிமுக மற்றும் எதிர்க்கட்சியான திமுக ஆகிய 2 கட்சியினர் மட்டுமே தீவிரம் காட்டுகின்றனர். வேட்பாளர் பட்டியல் வெளியீடு முதல் வேட்புமனுத் தாக்கல் வரை அனைத்து செயல்களிலும் இரண்டு திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் தொடர்கிறது. அதே நேரத்தில், சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்த பாஜக, பாமக, தேமுதிக, தமாகா, மதிமுக, இடதுசாரிகள், விடுதலை சிறுத்தை கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்பது வேட்பு மனுத் தாக்கலின்போது தெரியவந்துள்ளது. அந்த கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டனர்.

இது குறித்து மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஒரு கட்சியைச் சேர்ந்த நிர்வாகி கூறும்போது, ‘எங்கள் கூட்டணியில் உள்ள இயக்கங்கள் சார்பில் குறிப்பிட்ட அளவு வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்றுள்ளது’ என்றார். தேமுதிக நிர்வாகிகள் கூறும்போது, ‘சட்டப்பேரவைத் தேர்தலில் நிறைய செலவு செய்துவிட்டோம். அதனால் பலர் ஒதுங்கிக் கொண்டனர். அப்படி இருந்தும், எங்கள் கட்சிகளுக்கு செல்வாக்கு உள்ள இடங்களில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளோம்’ என்றனர். பாமகவினரும் இதே கருத்தை பிரதிபலித்தனர். பாஜக நிலையும் பரிதாபம். திமுக கூட்டணியில் அங்கம் வகிப்பதால், காங்கிரஸ் கட்சி தப்பிப் பிழைத்தது. 7,715 பதவிகளுக்கு திமுக, அதிமுக மட்டுமே முழுமையாக வேட்பாளர்களைக் களம் இறக்கி உள்ளன. மற்றக் கட்சிகள், 50 சதவீதம் இடத்தை கடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டனர் என்று கூறப்படுகிறது.

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று கடைசி நாள் என்பதால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. தடுப்புகளை அமைத்து வேட்பாளர்கள் மற்றும் அவர்களை முன்மொழிவதற்கான 2 நபர்களை மட்டும் போலீஸார் அனுப்பினர். முக்கிய நிர்வாகிகள் வந்தபோது, கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர்.

எ.வ.வேலு பேட்டி

திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் திமுக வேட்பாளர் களுடன் வந்த எ.வ.வேலு எம்எல்ஏ, நகராட்சி அலுவலகத்திலேயே செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர், திருவண்ணாமலை நகராட்சியில் அதிமுக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. ஆன்மிக நகரை குப்பை நகரமாக மாற்றியதுதான் அவர்களது சாதனை. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். 39 வார்டுகளிலும் திமுக வெற்றி பெறும்’ என்றார். திமுகவினர் சென்றபிறகு அதிமுக மாவட்ட செயலாளர் கே.ராஜன் தலைமையில் அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x