Last Updated : 05 Sep, 2022 04:31 PM

 

Published : 05 Sep 2022 04:31 PM
Last Updated : 05 Sep 2022 04:31 PM

‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலி: கோவை வாலாங்குளத்தில் கரையில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

கோவை வாலாங்குளத்தின் கரையோரம் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை இன்று அகற்றிய மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள்.

கோவை: 'இந்து தமிழ் திசை' நாளிதழில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, கோவை வாலாங்குளத்தின் கரையில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் இன்று (செப்.5) அப்புறப்படுத்தினர்.

கோவை வாலாங்குளத்தின் கரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கான்கிரீட் தளங்கள் அமைக்கப்பட்டன. அதோடு, கரையை அழகுபடுத்துவதற்காக குளத்துக்குள் பல இடங்களில் மண்கொட்டி அதன் பரப்பளவை சுருக்கினர். குளத்துக்குள் நேரடியாக கழிவுநீர் கலப்பதை தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அழகுபடுத்தும் பணியில் மட்டும் கவனம் செலுத்தியற்கு, அப்போது சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், மாநகராட்சி நிர்வாகம் அதை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், வாலாங்குளத்தில் அண்மையில் படகு சவாரி தொடங்கியது. அத்துடன், குளக்கரையிலேயே தின்பண்டங்களை விற்கும் கடைகளும் திறக்கப்பட்டன. இந்த கடைகளில் பிளாஸ்டிக் கவர்களில் தின்பண்டங்களை வாங்குவோர், குளக்கரையில் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு, கரையிலும், குளத்துக்குள்ளும் அதை தூக்கி எறிந்து வந்தனர்.

இதனால், குளக்கரை முழுவதும் ஆங்காங்கே பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை தேங்கி கிடந்தன. இந்நிலையில், வாலங்குளத்துக்கு இரைதேட வந்த பெலிக்கன் பறவை ஒன்றின் அலகில், குளத்து நீரில் மிதந்து வந்த பிளாஸ்டிக் கவர் சிக்கிக்கொண்டது. இதனால் இரைதேட முடியாமல் அந்த பறவை தவித்தது குறித்த படங்கள் வெளியாகி பறவை ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில், குளக்கரையில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை தேக்கத்தால் ஏற்படும் சூழல் பாதிப்பு குறித்து, 'இந்து தமிழ் திசை' நாளிதழில் நேற்று (செப்.4) படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, குளக்கரையோரம் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் இன்று அகற்றினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x