Published : 27 Oct 2016 08:40 AM
Last Updated : 27 Oct 2016 08:40 AM

காவிரி பிரச்சினையில் திமுக எடுத்த தொடர் நடவடிக்கைகள் என்ன? - பட்டியலிட்டு கருணாநிதி விளக்கம்

காவிரி பிரச்சினையில் தமிழக விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க திமுக எடுத்த தொடர் நடவடிக்கைகளை அக்கட்சியின் தலைவர் கருணாநிதி பட்டியலிட்டு விளக்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்ததால் மத்திய பாஜக அரசின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இத னால் அனைத்து தரப்பினரும் பாஜகவை விமர்சிக்கத் தொடங்கி யுள்ளனர்.

அதற்கு பதிலளிக்க முடியாத பாஜகவினரில் ஒரு சிலர், காவிரி பிரச்சினையில் திமுக துரோகம் செய்துவிட்டதாக வெறுப்பையும், விரோதத்தையும் கக்கி வருகின்ற னர். இதற்கு முக்கியத்துவம் தர வேண்டிய அவசியம் இல்லை என் றாலும் உண்மை தெரிய வேண்டும் என்பதற்காகவே இந்த விளக்கம்.

நான் பிறந்த 1924-ல் மைசூர் - சென்னை மாகாணங்கள் இடையே காவிரி நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு மாறாக 1968-ல் ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய அணைகளைக் கர்நாடக அரசு கட்டத் தொடங்கியது. இதற்கு அன்றைய அண்ணா தலைமையிலான திமுக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

அதைத் தொடர்ந்து 1968 ஆகஸ்ட் 19, 20 தேதிகளில் மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கே.எல்.ராவ் தலைமையில் இரு மாநிலங்கள் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதில், தமிழகத்தின் சார்பில் பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்த நானும் கலந்துகொண்டேன். இதில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. முதல்வர்கள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தைகளும் பலனளிக்க வில்லை.

1971 ஜூலை 8-ம் தேதி காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என திமுக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. இதை வலியுறுத்தி அதே ஆண்டு ஆகஸ்டில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. விவசாயிகள் சார்பில் முரசொலி மாறனும் வழக்கு தொடர்ந்தார். 1972 மே 21-ம் தேதி தமிழகம் வந்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, ‘‘பேச்சுவார்த்தை மூலம் சுமுகத் தீர்வு காணலாம். எனவே, வழக்கை திரும்பப் பெற வேண்டும்’’ என கேட்டுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி வழக்கை திரும்பப் பெற முடிவெடுக்கப்பட் டது. ஜனநாயக அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த முடிவைத்தான் திமுக துரோகம் செய்துவிட்டதாக அதிமுகவும், பாஜகவும் பிரச்சாரம் செய்து வருகின்றன.

1989-ல் மீண்டும் திமுக அரசு அமைந்ததும் அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினோம். வி.பி.சிங் பிரதமரானதும் திமுக அரசு எடுத்த தொடர் முயற்சிகளால் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. நடுவர் மன்றம் அமைந்த பிறகு இடைக்கால தீர்ப்பை பெறவும், இறுதித் தீர்ப்பை பெறவும் திமுக தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நடந்த பேச்சுவார்த்தையில் நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பை நிறைவேற்றுவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டது. பிரதமர் தலைமையில் காவிரி ஆணையம் அமைக்கவும் முடிவெடுக்கப்பட்டது.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 2007 பிப்ரவரி 5-ம் தேதி திமுக ஆட்சியில்தான் வெளியானது. இவையெல்லாம் காவிரி பிரச்சினையில் தமிழக விவ சாயிகளின் நலன்களைக் காக்க திமுக எடுத்த நடவடிக்கைகள். வாய்மையே வெல்லும் என்பதை உணர்ந்து பாஜகவினர் தங்களைப் பண்படுத்திக்கொள்ள வேண்டும். காவிரி பிரச்சினை பற்றி பேச திமுகவுக்கு உரிமை இல்லை என எள்ளி நகையாடுபவர்கள் இதற்காக ஒரு துரும்பையும் கிள்ளிப் போடாதவர்கள் என்பதை உணர வேண்டும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x