Published : 30 Aug 2022 03:25 PM
Last Updated : 30 Aug 2022 03:25 PM

”சேலம் 8 வழிச்சாலை திட்டத்தில் திமுக அரசின் நிலைப்பாடு என்ன?” - அண்ணாமலை

சென்னை: "பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடியாவிட்டால், அதிமுக அரசு ஆட்சியில் பரிந்துரைத்த இடத்தை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும், 8 வழிச்சாலை குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.

சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "சேலத்தில் இருந்து சென்னை வரையிலான 8 வழித் திட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தமிழக முதல்வர் மக்களுக்கு நேரடியாக விளக்க வேண்டும். திட்டம் குறித்து தற்போது அவர்களது மனது மாறியிருக்கிறதா? மாறியிருந்தால் ஏன் மாறியிருக்கு? அப்படியிருந்தால் மத்திய அரசு கொண்டுவந்த நிறைய திட்டங்களை எதற்காக எதிர்த்தார்கள்? - இதுதொடர்பாக தமிழக முதல்வர் நேரடியான ஒரு விளக்கத்தை கொடுப்பார் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதனை முதல்வர் கொடுக்க வேண்டும்.

இதே பிரச்சினை பரந்தூர் விமான நிலையத்திற்கும் உள்ளது.திமுகவின் தேர்தல் அறிக்கையிலேயே சென்னைக்கு இரண்டாவதாக ஒரு விமான நிலையம் வேண்டும் என்று கூறியுள்ளனர். ஒரு மாநிலத்திற்கு நிறைய விமான நிலையங்கள் வேண்டும். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதுதான் பிரதமர் நரேந்திர மோடியின் கனவு. எங்கெல்லாம் பெரிய விமான நிலையம் வரவில்லையோ, அங்கு உதான் திட்டத்தின் கீழ் சிறிய விமான நிலையத்தையாவது கொண்டு வரவேண்டும் என்ற வகையில், இந்த உதான் திட்டத்திற்கே உந்துசக்தியாக பாரத பிரதமர் இருந்துள்ளார்.

பரந்தூர் விமான நிலையம் 20 ஆயிரம் கோடி ரூபாய் பொருட்செலவில் வரவுள்ளது. 51 சதவீத ஹோல்டிங் மத்திய அரசிடமும், 49 சதவீதம் மாநில அரசிடமும் இருக்கப்போகிறது. 2016 தேர்தல் அறிக்கையில் திமுக கூறியிருந்தாலும், அதன்பின்னர் ஆட்சியில் இருந்த அதிமுக விமான நிலையத்திற்காக பரந்தூர் உள்பட இன்னொரு இடத்தையும் தேர்வு செய்து வைத்திருந்தனர். ஆட்சிக்கு வந்த திமுக அவர்கள் தேர்வு செய்த இன்னொரு இடத்தை விட்டுவிட்டு மத்திய அரசிடம் 4 இடங்களைக் கொண்டு சென்றனர். மத்திய அரசைப் பொறுத்தவரை சுற்றுச்சூழல் அனுமதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடம் அனைத்துவிதமான சோதனைகளையும் கடந்துவந்த பிறகுதான், அனுமதி வழங்கும்.

விமானத் துறை அமைச்சர் அனுமதி கொடுத்தாலும்கூட, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு அனுமதிகளைப் பெற்று அது வரவேண்டும். மாநில அரசு தேர்வு செய்துள்ள எந்த இடமாக இருந்தாலும்கூட மத்திய அரசு சென்னையின் இரண்டாவது விமான நிலையத்திற்கு அனுமதி வழங்கப்போகிறது. ஆனால், மாநில அரசின் திட்டமிடுதல் மற்றும் வெளிப்படத்தன்மை இல்லாத காரணத்தால் பரந்தூரில் யாருடைய வீடுகளை எல்லாம் கையகப்படுத்தப்பட உள்ளதோ அந்த மக்களும், நீர்பிடிப்பு பகுதியாக இருப்பதால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இன்று போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

ஆளும் திமுக அரசின் திட்டமிடுதல் சரியாக இல்லாத காரணத்தால், மத்திய அரசு தயாராக இருக்கின்ற ஒரு திட்டம், கொடுக்க வேண்டிய திட்டத்துக்கு மறுபடியும் இவர்களாகவே தடையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அமைச்சர் சாதரணமாக கூறுகிறார், மூன்றரை மடங்கு இழப்பீடு வழங்க தயாராக இருக்கிறோம் என்று அரசின் கோரிக்கையை மக்கள் ஏற்கவில்லை. இதனை சரிசெய்ய வேண்டிய கடமை மாநில அரசுக்கு உண்டு. இதனை அரசு விரைந்து சரிசெய்து, மக்களின் அனைத்து கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்க வேண்டும். விமான நிலையமும் வேண்டும். பரந்தூரில் வரமுடியாத காரணமாக இருந்தால், அதிமுக அரசு ஆட்சியில் பரிந்துரைத்த இடத்தை பரிசீலிக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x